Published:Updated:

கேள்வி பதில் : அறுவை சிகிச்சைக்குப் பிறகு டேர்ம் பிளான்..! - கிடைக்க வாய்ப்புள்ளதா..?

கேள்வி பதில்
பிரீமியம் ஸ்டோரி
கேள்வி பதில்

இதய அறுவைசிகிச்சை செய்துகொண்டுள்ளதால், உங்களை அதிக ரிஸ்க் கொண்ட நபராகத்தான் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் பார்க்கும்.

கேள்வி பதில் : அறுவை சிகிச்சைக்குப் பிறகு டேர்ம் பிளான்..! - கிடைக்க வாய்ப்புள்ளதா..?

இதய அறுவைசிகிச்சை செய்துகொண்டுள்ளதால், உங்களை அதிக ரிஸ்க் கொண்ட நபராகத்தான் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் பார்க்கும்.

Published:Updated:
கேள்வி பதில்
பிரீமியம் ஸ்டோரி
கேள்வி பதில்

நான் 2000-ம் ஆண்டில் இதய அறுவைசிகிச்சை செய்துகொண்டேன். எனக்கு இப்போது டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி கிடைக்குமா?

எஸ்.சீனிவாசன் இ-மெயில் மூலம்

‘‘நீங்கள் ஏற்கெனவே இதய அறுவைசிகிச்சை செய்துகொண்டுள்ளதால், உங்களை அதிக ரிஸ்க் கொண்ட நபராகத்தான் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் பார்க்கும். இதனால் உங்களுக்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி தர நிறுவனங்கள் தயக்கம் காட்ட வாய்ப்புண்டு. ஒரு சில நிறுவனங்கள் உங்களை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தி, அதன்பிறகு உங்களின் ரிஸ்க்கைக் கணித்து, டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி வழங்கவும் வாய்ப்புள்ளது. எனவே, நீங்கள் முயற்சி செய்து பாருங்கள்.’’

எஸ். சதீஷ்குமார், ஆடிட்டர் , எஸ்.ஸ்ரீதரன், நிதி ஆலோசகர், வெல்த்லேடர்
எஸ். சதீஷ்குமார், ஆடிட்டர் , எஸ்.ஸ்ரீதரன், நிதி ஆலோசகர், வெல்த்லேடர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எஸ்.ஐ.பி முறையில் இ.எல்.எஸ்.எஸ் வரி சேமிப்பு மியூச்சுவல் ஃபண்டில் 2012 ஆகஸ்ட் முதல் 120 மாதங்களுக்கு முதலீடு செய்தேன். 2020 பிப்ரவரியில் எஸ்.ஐ.பி முதலீட்டை நிறுத்திவிட்டு, பகுதிப் பணத்தை எடுத்தேன். இதன்மூலம் என் வங்கிக் கணக்குக்கு ரூ.1.86 லட்சம் வந்தது. இதில் லாபம் ரூ.83,000. நான் லாபத்துக்கு மட்டும் நீண்டகால மூலதன ஆதாய வரி கட்ட வேண்டுமா அல்லது வங்கியில் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் போட்ட மொத்த தொகைக்கும் வரி கட்ட வேண்டுமா? இது குறித்த எந்த விவரமும் என் 26AS படிவத்தில் காட்டவில்லை. எனக்கு வழிகாட்டவும்.

பி.ராஜதுரை, மதுரை

“இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டுகள் மூன்றாண்டுகள் லாக்இன் கொண்டவை. ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டில் ஓராண்டுக்கு மேற்பட்ட லாபம் நீண்டகால ஆதாயம் ஆகும். நீங்கள் வாங்கிய விலைக்கும் விற்ற விலைக்கும் உள்ள வித்தியாசம் நீண்ட கால ஆதாயமாகும். மூலதன ஆதாயத்துக்கு நிதியாண்டில் ரூ.1 லட்சம் வரைக்கும் ஒருவருக்கு வரியில்லை. அதற்கு மேற்பட்ட லாபத்துக்கு 10% வரி கட்ட வேண்டும். உங்களுக்கு ரூ.83,000 கிடைத்திருப்பதால், நீங்கள் வரி கட்ட வேண்டியதில்லை.’’

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

எனக்கு தாயார் வழியில் பரம்பரை விவசாய நிலம் உள்ளது. நிலம் என் தாயின் தாத்தா பெயரில் உள்ளது. அவர் இந்த நான்கு ஏக்கர் பூமியை 1955-ல் வாங்கி, 1978-ல் இறந்துவிட்டார். அவருக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள். இரண்டு மகன்களில் ஒருவர் என் தாயாரின் அப்பா 2002-ல் இறந்துவிட்டார். இன்னும் ஒரு மகன் மற்றும் மகள் வயதான நிலையில் உள்ளனர். தற்போது மேற்குறிப்பிட்ட சொத்தை இரு மகன்களின் வாரிசுகளாகிய நாங்கள் 1978-லிருந்து அனுபவித்துவரும் நிலையில் மற்றொரு வாரிசான வயதான மகள் பங்கு கோரியுள்ளார். அவருக்கு பங்கு அல்லது சமபங்கு தர வேண்டுமா?

குறிப்பு: வாங்கியது முதல் நிலம் என் தாயாரின் தாத்தா பெயரிலேயே உள்ளது. சப் டிவிஷன் ஆகவில்லை. பட்டாவில் என் தாய் மற்றும் மற்றொரு மகனின் வாரிசுகளின் பெயர்கள் உள்ளது. பங்கு கோருபவரின் பெயர் இல்லை. என் தாயாருக்கு உடன்பிறப்புகள் இல்லை.

பிரியா, ஈரோடு

“சுருக்கமாகச் சொன்னால், தாயார் வழிப் பரம்பரைச் சொத்தை, உங்கள் தாத்தாவின் மகள் உரிமை கோர முடியுமா... முடியும் எனில், எவ்வளவு பாகம் பெற உரிமை உள்ளவர் என்று கேட்கிறீர்கள். கடந்த 11.8.2020 அன்று உச்ச நீதிமன்றத்தால், இந்து வாரிசுரிமைச் சட்டம் பிரிவு (6) குறித்து வழங்கப்பட்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு கவனிக்கத்தக்கது.

இதன்படி, இந்து வாரிசுரிமைச் சட்டத் திருத்தம் கொண்டுவந்த 2005-ம் ஆண்டுக்கு முன்பாகவே தாத்தா இறந்திருந்தாலும், முன்னோர்கள் சொத்தில் உங்கள் தாத்தாவின் மகள் சமபாகம் கோர உரிமை உள்ள நபராகிறார்.

நீங்கள் 1978-லிருந்து அனுபவித்து வந்தாலும்கூட, சொத்தானது சப் டிவிஷன் ஆகாமல், தாயாரின் தாத்தா பெயரிலேயே இருப்பதாலும், பட்டாவில் மற்றவர்கள் பெயர்கள் இருந்து, பங்கு கோருபவருடைய பெயர் இல்லாமல் இருந்தாலும், தாத்தாவின் மகளுக்கான சமபாக உரிமையை மறுக்க முடியாது என்பதுதான் உச்ச நீதிமன்றம் தற்போது வழங்கிய தீர்ப்பின் சாராம்சம்.”

கே.அழகு ராமன், வழக்கறிஞர், உயர் நீதிமன்றம், சென்னை. , சிவராமகிருஷ்ணன், முதன்மை செயல் அதிகாரி, Sinceresyndication.com, ஜீவா, வழக்கறிஞர்
கே.அழகு ராமன், வழக்கறிஞர், உயர் நீதிமன்றம், சென்னை. , சிவராமகிருஷ்ணன், முதன்மை செயல் அதிகாரி, Sinceresyndication.com, ஜீவா, வழக்கறிஞர்

சி.இ.எஸ்.சி (வாங்கிய விலை ரூ.730), டெல்டா கார்ப். (வாங்கிய விலை ரூ.330), குஜராத் அல்கலைஸ் (வாங்கிய விலை ரூ.610), பேஜ் இண்டஸ்ட்ரீஸ் (வாங்கிய விலை ரூ.25,530) ஆகிய பங்குகளை வைத்திருக்கிறேன். இவற்றை வைத்திருக்கலாமா, விற்று விடலாமா?

எஸ்.செல்வம், கோவை - 24

“டெல்டா கார்ப்பரேஷன் கப்பலில் பொழுதுபோக்கு விளையாட்டுகள் (Casino) மற்றும் நட்சத்திர விடுதிகள் மூலமாகவும் வருமானம் பெறும் நிறுவனமாகும். கடந்த மூன்று ஆண்டுகளில் 34% லாபம் வளர்த்திருந்தபோதிலும், கொரோனா வைரஸ் தாக்குதலால் சுற்றுலாத்துறை முடங்கியுள்ளது. இந்த நிலையில், அந்தத் துறையைச் சார்ந்த இந்த நிறுவனத்தின் பங்கை விற்று, பார்மா போன்ற நிலையான வியாபாரம் மற்றும் வருமானம் ஈட்டக்கூடிய துறைகளைச் சார்ந்த பங்குகளில் முதலீடு செய்வது நல்லது.

குஜராத் அல்கலைஸ் காஸ்டிக் சோடா மற்றும் பல ரசாயனங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனமாகும். 2019-20-ம் ஆண்டு ரூ.2,724 கோடி வருமானம் உள்ள நிறுவனம், 2022-23-க்குள் ரூ.5,000 கோடி என்ற இலக்கை நோக்கிப் பயணித்து வருகிறது. இந்த கம்பெனியின் பங்குகள் வாங்குவதற்குரிய 7.4 x பி.இ விகிதம் உள்ளது. இதனால் தொடர்ந்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

பேஜ் இண்டஸ்ட்ரீஸ் ஜாக்கி இன்டர்நேஷனலுடன் கைகோத்து இந்தியா, இலங்கை, பங்களாதேஷ், நேபாளம் மற்றும் அரபு நாடுகளில் 65,000-க்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்கள் மூலம் உள்ளாடைகளைத் தயாரித்து விற்பனை செய்துவருகிறது. இந்தியாவின் உள்ளாடை சந்தையில் முதன்மையாக 50 சதவிகிதத்துக்குமேல் பங்கை வைத்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் 12% வருமானத்தில் வளர்ச்சியடைந்த இந்த நிறுவனம், அடுத்த 10 ஆண்டுகளில் 10% - 12% வளர்ச்சி காணலாம். இருப்பினும், பங்கின் மதிப்பீடு உயர்வான 65 x பி.இ-யில் இருப்பதால், விலையில் மேலும் அதிக வளர்ச்சி இருக்காது என்று எதிர்பார்க்கிறோம். இதற்குப் பதிலாக, கோவிட் 19 சமயத்திலும் வளரந்துவரும் பிரிட்டானியா, டாபர் போன்ற பன்னாட்டு கம்பெனியில் முதலீடு செய்யலாம்.’’

என் தாத்தாவுக்கு உள்ள சொத்துக்கு, என் தாயார் மற்றும் இரண்டு ஆண் வாரிசுகள் ஆகிய மூன்று பேர். அவர்கள் மூன்று பேருமே இறந்துவிட்டனர். என் தாத்தாவின் சொத்து இன்னும் பிரிக்கப்படாமல் உள்ளது. அவ்வாறு பிரிக்கப்படாமல் உள்ள சொத்துக்கு எனக்கும் என் சகோதரிக்கும் உள்ள உரிமை பற்றி விளக்கவும்.

பாரதி முனி, மதுரை-3.

“இது கூட்டுக் குடும்பச் சொத்தாகக் கருதப்படும். மூன்றில் ஒரு பங்கை தந்தையின் சட்டபூர்வ வாரிசு என்ற முறையில் உங்கள் தாயார் பெறுவார். உங்கள் தாயாருக்குக் கிடைக்கும் சொத்தில் உங்களுக்கும் உங்கள் சகோதரிக்கும் சமபங்கு உரிமை உண்டு.”

கேள்விகளை அனுப்புபவர்கள் தங்கள் செல்போன் எண்ணையும் குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி: கேள்வி-பதில் பகுதி, நாணயம் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-2. navdesk@vikatan.com