Published:Updated:

கேள்வி - பதில் : 5 ஃபண்டுகளில் எஸ்.ஐ.பி... 5 வெவ்வேறு தேதிகளில் வைத்துக்கொள்ளலாமா?

கேள்வி - பதில்
பிரீமியம் ஸ்டோரி
News
கேள்வி - பதில்

பதில் சொல்கிறார் ஃபண்ட் நிபுணர்...

Q&A

ஒருவர் தனக்கு மற்றும் தனது குடும்பத்துக்கு எத்தனை லட்சம் ரூபாய்க்கு ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்திருக்க வேண்டும்?

- சுரேஷ் குமார், கடையநல்லூர்

க.முரளிதரன், முதலீட்டு ஆலோசகர், Vidurawealth.com

“ஒருவர் இளம் வயதில் ரூ.3 லட்சத்துக்கு ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்க வேண்டும். மேலும், இளம் வயதிலே உங்கள் ஆரோக்கியத்தின் காரணமாக க்ளெய்ம் செய்யும் வாய்ப்புகள் குறைவு. அதனால் ஆண்டுதோறும் கிடைக்கும் போனஸ் அல்லது ஒட்டுமொத்த போனஸை நீங்கள் அனுபவிக்க அதிக வாய்ப்புள்ளது. அதாவது, உங்கள் காப்பீட்டுத் தொகை ஆண்டுக்கு 10% - 50% வரை உயரும்.

இந்தியாவில் சராசரியாக ஒரு குடும்பத்துக்கு சுமார் ரூ.5 முதல் ரூ.10 லட்சம் வரை ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்திருக்கிறார்கள். இரண்டு பெரியவர்களுக்கும் இரண்டு குழந்தைகளுக்கும் குறைந்தபட்சம் ரூ.10 லட்சம் வரை ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்க வேண்டும்.

ஒரு தனிநபருக்கான ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியின் அளவுகோலாக, உங்கள் வருடாந்தர வருமானத்தில் குறைந்தது 50% இருக்க வேண்டும். உங்கள் குடும்ப உறுப்பினர்களைச் சேர்க்கும்போது அது உங்கள் ஓர் ஆண்டு வருமானத்துக்கு ஈடாக ஒரு ஃப்ளோட்டர் பாலிசி யாகவும் எடுப்பது நல்லது. இதனுடன் சேர்த்து குறைந்த தொகையில் சூப்பர் டாப்அப் பாலிசியையும் சேர்த்து எடுப்பது மிக நல்லது. இந்த அளவுக்குக் குறைவாக கவரேஜ் இருந்தால், எதிர்பாராத வகையில் ஏற்படும் மருத்துவச் செலவுகளைச் சமாளிக்க முடியாமல் போக வாய்ப்புண்டு.’’

சவுத் இந்தியன் பேங்க் பங்கை ரூ.22-க்கு வாங்கினேன். அதன் விலை இப்போது உயர ஆரம்பித்திருக்கிறது. இந்தப் பங்கு முதலீட்டை நான் தொடரலாமா?

- சிவராஜ், தஞ்சை

ஜி.எஸ்.ராஜேஷ் குமார், ஈக்விட்டி ரிச்சர்ச் அனலிஸ்ட்

“எந்தவொரு நிறுவனப் பங்கிலும் பாதுகாப்பாக முதலீடு செய்ய, அந்தப் பங்கு அதன் பங்கின் விலை புத்தக மதிப்புக்கு (Book value) கீழே இருக்கக் கூடாது. பங்கு விலை, புத்தக மதிப்பைவிட குறைவாக இருந்தால், அது மதிப்பு குறைந்த பங்கு (undervalued stock) என்று அழைக்கப்படுகிறது.

சவுத் இந்தியன் பேங்க்கை எடுத்துக்கொண்டால், கடந்த நான்கு ஆண்டுகளாக இதன் நிகர லாபம் குறைந்துகொண்டே வருகிறது. இந்த வங்கியின் வணிகம் மோசமாக இருக்கிறது என்று அர்த்தம். இதன் நிதிநிலை மோசமாக உள்ளது. இதர வருமானம் பாசிட்டிவ்வாக இருப்பதால், வங்கியின் நிகர லாபமும் பாசிட்டிவ்வாக உள்ளது. இந்த அடிப்படைப் பங்குப்பாய்வு விஷயங்கள், இந்த வங்கியின் பங்கில் முதலீடு செய்வதற்கேற்ற காரணங்களாக இல்லை. அதிக இழப்பு இருந்தால், லாபத்துக்காகக் காத்திருப்பது காலத்தை வீணாக்கும் செயலாக இருக்கக்கூடும்.

அதே நேரத்தில், டெக்னிக்கலாகப் பார்த்தால் பங்கை டிரேடிங் செய்யப் பயன்படுத்தலாம், பங்கின் சப்போர்ட் விலை ரூ.7.90 ஆக உள்ளது. ரூ.11.45-க்கு உயரக்கூடும்.”

க.முரளிதரன், ஜி.எஸ்.ராஜேஷ் குமார், சா.ராஜசேகரன், ச.ராமலிங்கம், தி.ரா.அருள்ராஜன்
க.முரளிதரன், ஜி.எஸ்.ராஜேஷ் குமார், சா.ராஜசேகரன், ச.ராமலிங்கம், தி.ரா.அருள்ராஜன்

ஐந்து மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யும்போது ஐந்து வெவ்வேறு எஸ்.ஐ.பி தேதிகளைத் தேர்வு செய்ய முடியுமா?

- எல்.கலையரசி, கிருஷ்ணகிரி

சா.ராஜசேகரன், நிதி ஆலோசகர், Wisdomwealthplanners.com

“தாரளமாகத் தேர்வு செய்யலாம். பெரும் பாலானோர் மாதத்தின் ஆரம்பத்தில் அவர்களின் சம்பளத் தேதிக்கு அடுத்து வரும் சில தினங்களை எஸ்.ஐ.பி தேதியாக வைத்திருக்கிறார்கள். அது ஒருவகையில் நல்லது. காரணம், பணம் விரைவாக முதலீட்டுக்குச் சென்றுவிடும். இதனால் முதலீட்டுக்கு முன்னுரிமை கிடைக்கும்.’’

எனக்கு 57 வயது. என் இன்ஷூரன்ஸ் பாலிசிகள் சில மாதங்களுக்கு முன் முதிர்ச்சி அடைந்துவிட்டன. வீட்டுக் கடன் கடைசித் தவணையும் முழுவதுமாகக் கட்டி முடித்துவிட்டேன். வரிச் சலுகைக்காக ரூ.1 லட்சத்தை இன்ஷூரன்ஸ் அல்லது மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யலாமா, இதை மொத்தமாகச் செய்யலாமா அல்லது எஸ்.ஐ.பி முறையில் செய்யலாமா?

- எழிலரசன், குனியமுத்தூர்

ச.ராமலிங்கம், பார்டனர், என்ஜே இந்தியா

‘‘காப்பீடு என்பது வேறு, முதலீடு என்பது வேறு. முதலில் உங்களுக்குத் தேவையான (ஆண்டு வருமானத்தைப்போல 8-10 மடங்கு) தொகைக்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கவும். இதற்கு நீங்கள் கட்டும் பிரீமியத் தொகைக்கு 80சி பிரிவின்கீழ் வரிவிலக்கு கிடைக்கும். மீதமுள்ள தொகையைச் சமமாகப் பிரித்து இ.எல்.எஸ்.எஸ் எனப்படும் வரிச் சேமிப்பு மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் (இதற்கு 3 ஆண்டுகள் லாக்இன் பீரியட் உண்டு!) ஆக்ஸிஸ் லாங்டேர்ம் ஈக்விட்டி, மோதிலால் ஆஸ்வால் லாங்டேர்ம் ஈக்விட்டி ஃபண்டுகளில் மொத்தமாக முதலீடு செய்யுங்கள். எஸ்.ஐ.பி முறையிலும் மாதம் ஒரு தொகையை இந்த ஃபண்டுகளில் முதலீடு செய்து, நீண்ட காலத்தில் (6 வருடங்கள்) நல்ல பலனை அடையலாம். ஒவ்வொரு மாத எஸ்.ஐ.பி தொகையும் 3 வருட லாக்இன் பீரியட் கொண்டது.”

என் தந்தை பங்குச் சந்தையில் முதலீடு செய்திருந்தார். அவர் தற்போது உயிருடன் இல்லை. அந்தப் பணத்தை எப்படிப் பெறுவது?

- தியாகு ராஜன், இ-மெயில் மூலம்

தி.ரா.அருள்ராஜன், முதன்மைச் செயல் அதிகாரி, Ectra.in

“நீங்கள் வாரிசுச் சான்றிதழைப் பெற்று உங்கள் வழக்கறிஞர் மூலம் அந்தந்த நிறுவனத்தின் கம்பெனி செகரட்ரிக்கு அனுப்பி, உங்கள் பெயருக்கு பங்குகளை மாற்றித் தருமாறு விண்ணப் பிக்கவும். அந்த நிறுவனமும் மேலும் சில படிவங்களைக் கொடுத்து, நிரப்பச் சொல்லும்.இவை எல்லாம் சரியாக நடந்தால், பங்குகள் உங்கள் பெயருக்கும் மாறும்.”

கேள்விகளை அனுப்புபவர்கள் தங்கள் செல்போன் எண்ணையும் குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி: கேள்வி-பதில் பகுதி, நாணயம் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-2. navdesk@vikatan.com

பிட்ஸ்

த்தனை ஆண்டுகளாக பூஸ்ட் என்னும் ஊட்டச் சத்து பானத்தை மட்டுமே தயார் செய்துவந்த மோண்டலேஸ் (Mondelez) நிறுவனம், தற்போது குக்கீஸ் எனப்படும் பிஸ்கெட் களைத் தயாரிக்கும் பிசினஸில் இறங்கியுள்ளது!