Published:Updated:

கேள்வி - பதில் : கோல்டு இ.டி.எஃப்-ல் முதலீடு... இது சரியான நேரமா?

கேள்வி - பதில்
பிரீமியம் ஸ்டோரி
News
கேள்வி - பதில்

சொந்தத் தேவைக்காகத் தங்கம் வாங்க நினைப்பவர்கள் சிறுகச் சிறுகச் சேர்ப்பதற்கு கோல்டு இ.டி.எஃப் சிறந்த முதலீடு!

தங்கத்தின் விலை குறைந்துவருகிறது. கோல்டு இ.டி.எஃப்-ல் முதலீடு செய்ய இது சரியான நேரமா, எப்போது வெளியேற வேண்டும்?

- விமலராஜ், மதுரை

தி.ரா.அருள்ராஜன், பங்குச் சந்தை நிபுணர்

“தங்கத்தில் முதலீடு என்பதே நீண்டகால அடிப்படையில் செய்வதுதான். தங்கத்தில் முதலீடு செய்வதற்கான வழிமுறைகளில், கோல்டு இ.டி.எஃப் என்பது நல்லது. ஆனால், இதில் தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று வருடங்களாவது ஒவ்வொரு மாதமும் முதலீடு செய்துவர வேண்டும். இந்த முதலீட்டின் மூலம் உங்களுக்குத் தங்கம் கிடைக்காது. பணம்தான் திரும்பக் கிடைக்கும். கோல்டு இ.டி.எஃப் யூனிட்டுகளை வாங்கிய பிறகு அந்த யூனிட்டுகளை எப்போது விற்று, பணமாக்க நினைக்கிறீர்களோ, அப்போது விற்றுக்கொள்ளலாம். சொந்தத் தேவைக்காகத் தங்கம் வாங்க நினைப்பவர்கள் சிறுகச் சிறுகச் சேர்ப்பதற்கு கோல்டு இ.டி.எஃப் சிறந்த முதலீடு.’’

தி.ரா.அருள்ராஜன், டாக்டர் எஸ்.பிரகாஷ், ஆர்.செல்வமணி
தி.ரா.அருள்ராஜன், டாக்டர் எஸ்.பிரகாஷ், ஆர்.செல்வமணி

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

என் குடும்பத்தில் என் தாய் (60), நான் (34), என் மனைவி (30), இரண்டு குழந்தைகள் (5 மற்றும் 8 மாதம்) இருக்கிறோம். எங்களுக்கு எந்த வகையான ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுக்கலாம்?

- சம்சுதீன், இ-மெயில் மூலம்

டாக்டர் எஸ்.பிரகாஷ், நிர்வாக இயக்குநர், ஸ்டார் ஹெல்த் அண்ட் அலைடு இன்ஷூரன்ஸ்

“உங்கள் முழுக் குடும்பத்துக்கும் காப்பீட்டு கவரேஜ் அளிக்கக்கூடிய ஃப்ளோட்டர் பாலிசியை எடுத்துக்கொள்ளலாம். உங்கள் குடும்பத்தில் பாதிக்கப்பட்ட எந்த நபரும் அதைப் பயன்படுத்தலாம். உங்களையும், உங்கள் மனைவி, உங்கள் குழந்தைகள் மற்றும் உங்கள் தாயையும் உள்ளடக்கும் ஃப்ளோட்டர் பாலிசிகள் இருக்கின்றன.”

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

நான் ஓராண்டுக்கு முன்னர் ரூ.30 லட்சம் வீட்டுக் கடன், 20 ஆண்டுகளில் செலுத்தும்விதமாக 9% வட்டியில் வாங்கினேன். இப்போது கொரோனா பாதிப்பால் என் சம்பளம் 50% குறைந்துவிட்டது. ஆர்.பி.ஐ அளித்திருக்கும் ஆறு மாதக் கடன் தவணை தள்ளிவைப்பு சலுகையைப் பயன்படுத்தி வருகிறேன். இதனால், நான் எத்தனை ஆண்டுகள் கூடுதலாகத் தவணை செலுத்த வேண்டியிருக்கும்?

- மலர்விழி, செங்குன்றம், சென்னை

ஆர்.செல்வமணி, உதவிப் பொதுமேலாளர் (ஓய்வு), கனரா வங்கி

“வீட்டுக் கடன் நிலுவையில் இருப்பது எப்போதும் அசல் தொகையாக மட்டுமே இருக்கும். முழு மாத வட்டி மற்றும் அசலில் ஒரு பகுதியை ஈடுகட்ட சம மாதத் தவணை (EMI) கணக்கிடப்படுகிறது. திருப்பிச் செலுத்துவதற்கான ஆரம்ப மாதங்களில், இ.எம்.ஐ-யின் அதிகபட்சப் பகுதி, வட்டியை மட்டுமே உள்ளடக்கியது. மேலும், மிகச் சிறிய பகுதி மட்டுமே அசலுக்குச் செல்லும்.

இ.டி.எஃப்
இ.டி.எஃப்

நீங்கள் ரூ.30 லட்சத்துக்கு வீட்டுக் கடனை, 20 வருட காலத்தில், 9% வட்டி கணக்கில் திருப்பிச் செலுத்த திட்டமிட்டால் ரூ.27,000 இ.எம்.ஐ செலுத்த வேண்டும். இந்த இ.எம்.ஐ தொகையில், ஆரம்பகட்டத்தில், ரூ.22,000 வட்டிக்கும், மீதமுள்ள தொகை அசலுக்கும் செல்லும்.

நீங்கள் இந்த ரூ.27,000 x 6 மாதங்கள் = ரூ.1.62 லட்சத்தை 19 ஆண்டுகளுக்கு மாற்றி அமைக்க முடிவு செய்திருக்கிறீர்கள். அப்படிச் செய்யும்போது ரூ.1.62 லட்சத்தை, 9% கூட்டு வட்டிக்கு, 19 ஆண்டு கணக்கிட்டால் அது ரூ.8.90 லட்சமாக மாறுகிறது.

இதைத் தற்காலிகக் கணக்கீட்டின் அடிப்படையில் பார்த்தால், நீங்கள் கூடுதலாக 33 இ.எம்.ஐ-களில் திருப்பிச் செலுத்த வேண்டியிருக்கும். தவிர, வட்டி விகிதம் அதிகமானால் நீங்கள் இன்னும் சில மாதங்கள் கூடுதலாகச் செலுத்த வேண்டிய நிலை ஏற்படலாம்.

இதற்குச் சரியான தீர்வு, கடனுக்கான வட்டியை ஒவ்வொரு மாதமும் தவறாமல் செலுத்துவதும், அசல்மீது கூடுதல் வட்டியை வளரவிடாமல் தவிர்ப்பதும், வட்டிக்கு வட்டி என்று கூட்டு வட்டி வராமல் தவிர்ப்பதும்தான். ஆர்.பி.ஐ தந்த சலுகையை முடிந்தவரை பயன்படுத்தாமல், அசலையும் வட்டியையும் திருப்பிச் செலுத்திவிடுவதே நல்லது.’’

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கேள்விகளை அனுப்புபவர்கள் தங்கள் செல்போன் எண்ணையும் குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி: கேள்வி-பதில் பகுதி, நாணயம் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-2. nav@vikatan.com