Published:Updated:

கேள்வி - பதில் : வீட்டின் முன்பகுதியில் ஹோட்டல்..!

கேள்வி - பதில்
பிரீமியம் ஸ்டோரி
கேள்வி - பதில்

வங்கிக் கடன் கிடைக்குமா?

கேள்வி - பதில் : வீட்டின் முன்பகுதியில் ஹோட்டல்..!

வங்கிக் கடன் கிடைக்குமா?

Published:Updated:
கேள்வி - பதில்
பிரீமியம் ஸ்டோரி
கேள்வி - பதில்

நான் ஒரு வருடமாக வீட்டிலேயே ஒரு ஹோட்டலை நடத்தி வருகிறேன். அதற்காக வீட்டின் முன்பகுதியைப் பயன்படுத்துகிறேன். அதை விரிவுபடுத்த வங்கிக் கடன் கிடைக்குமா?

முத்துராம், மதுரை-3

ஆர்.கணேசன், உதவிப் பொதுமேலாளர் (ஓய்வு), பஞ்சாப் நேஷனல் பேங்க்

‘‘வங்கிக் கடன் வாங்கச் செல்வதற்கு முன்னர் உங்களுடைய தொழிலை முறைப்படுத்தியிருக்கிறீர்களா என்பதைக் கவனிக்க வேண்டும். ஹோட்டல் தொழில் நடத்த அதற்குரிய அதிகாரிகளிடம் உரிய லைசென்ஸ் பெற்றிருக்க வேண்டும். ஹோட்டலுக்குத் தேவைப்படும் மின்சாரத்தைத் தனியாக கமர்ஷியல் பயன்பாட்டு அடிப்படையில் பெற்றிருக்க வேண்டும். உங்கள் ஹோட்டலை விரிவுபடுத்தும் திட்ட வரையறையைத் தயாரிக்க வேண்டும். அதில் பணியாளர்களின் சம்பளம், மின்சாரம், கொள்முதல், பண்டபாத்திரங்கள், வாடகை ஆகியவற்றுக்கான செலவுகள் விற்பனையில் எதிர்பார்க்கப்படும் வருமானம் உட்பட மொத்த வரவு செலவு விவரங்களையும் அளிக்க வேண்டும்.

வங்கி அதிகாரிகள் உங்கள் ஹோட்டலைப் பார்வையிட்ட பிறகு, உங்கள் தொழிலுக்கு எவ்வளவு தேவையோ அதற்கேற்ப கடன் தொகையை முடிவு செய்வார்கள். நீங்கள் திட்ட வரையறையில் காண்பித்திருக்கும் லாபத்தில் 50% வரை தவணையாகச் செலுத்துவதற்கு ஏற்ற வகையில் வங்கிக் கடன் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. முத்ரா லோன் என்றால், அடமானமாக எதையும் கேட்கமாட்டார்கள். உங்கள் வீட்டை அடமானமாக வைத்து கடன் பெறுவதாக இருந்தால் அதிக சிரமமில்லாமல் கடன் பெறலாம்.

ஆர்.கணேசன், வி.எஸ்.சரண்சுந்தர்
ஆர்.கணேசன், வி.எஸ்.சரண்சுந்தர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நான் வாடகை வீட்டில் வசித்துவருகிறேன். மாதம் 30,000 ரூபாய் வாடகை. அதில் 14,000 ரூபாய் வரை என் நிறுவனம் பங்களிப்பு செய்கிறது. மீதத்தை நான் செலுத்திவருகிறேன். நிறுவனம் தரும் தொகைக்கு டி.டி.எஸ் பிடித்தம் செய்ய வேண்டுமா?

நந்தகோபால், சென்னை-15

வி.எஸ்.சரண்சுந்தர், சார்ட்டர்டு அக்கவுன்டன்ட்

“ஏற்கெனவே நிறுவனத்தின் சார்பில் உங்கள் சம்பளப் பணத் துக்கு டி.டி.எஸ் பிடித்தம் செய்வார் கள். அத்துடன் உங்களுக்குத் தரும் வாடகைப் பணமான 14,000 ரூபாயையும் சேர்த்து மொத்தத் தொகைக்கும் டி.டி.எஸ் பிடித்தம் செய்து விடுவார்கள்.”

வீடு
வீடு

ஓ.என்.ஜி.சி மற்றும் சி.எஸ்.பி வங்கிப் பங்குகளில் தலா 200 பங்குகளில் முதலீடு செய்திருக்கிறேன். அவை இறக்கத்திலேயே இருக்கின்றன. அவை குறுகியகாலத்தில் ஏற்றம் பெற வாய்ப்பிருக்கிறதா?

ஜேம்ஸ், முகநூல் வழியாக...

தி.ரா.அருள்ராஜன், பங்குச் சந்தை நிபுணர்

“ஓ.என்.ஜி.சி பங்கு விலை தொடர்ந்து இறங்குமுகமாகவே உள்ளது. தற்போது 90 ரூபாய் என்ற வரம்பு முக்கிய ஆதரவாக இருப்பதால், அதை ஸ்டாப்லாஸாக வைத்துக்கொள்ளவும். மேலே ரூ.130-135 முக்கியத் தடைநிலை. அந்த எல்லைக்கு வரும்போது விற்று வெளியேறலாம்.

சி.எஸ்.பி வங்கி பட்டியிலிடப் பட்ட நாள் முதல் இறங்குமுகமாகவே இருக்கிறது. எனவே, 152 ரூபாய் வரம்பை ஸ்டாப்லாஸாக வைத்துக்கொள்ளவும். மேலே நகரும்போது, ரூ.202 என்ற வரம்புக்கு அருகில் வரும்போது விற்று வெளியேறவும்.”

வங்கி அதிகாரிகள் ஹோட்டலைப் பார்வையிட்ட பிறகு, கடன் தொகையை முடிவு செய்வார்கள்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

2001 அக்டோபர் மாதம் ரூ.200 விலையில் 100 பங்குகளும், 2008 ஆகஸ்ட் மாதம் ரூ.150 விலையில் 200 பங்குகளும் நான் வேலை பார்க்கும் நிறுவனத்தின் சார்பில் எனக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டன. இந்தப் பங்குகளை 2019 டிசம்பர் மாதத்தில் ரூ.650 விலைக்கு விற்பனை செய்தேன். இந்த விற்பனையில் நீண்டகால மூலதன ஆதாயத்தைக் கணக்கிடுவது எப்படி?

தினேஷ்குமார், சேலம்

கே.ஆர்.சத்யநாராயணன், ஆடிட்டர்

“பங்கு விற்பனையில் கிடைக்கும் நீண்டகால மூலதன ஆதாயம், நிதியாண்டில் ரூ.1 லட்சம் ரூபாய் வரை கிடையாது. அதற்கு மேற்படும் ஆதாயத்துக்கு 10% வரி விதிக்கப்படும். பங்குகள் விற்பனையில் நீண்டகால மூலதன ஆதாயத்தைக் கணக்கிட, 31.01.2018 தேதியில் குறிப்பிட்ட பங்குகளின் விலை அடிப்படையில் மொத்தப் பங்குகளின் மதிப்பைக் கணக்கிட வேண்டும். அதைத் தோராயமாக ரூ.50,000 எனக் கொள்வோம்.

அந்தப் பங்குகளை நீங்கள் விற்றதால் கிடைத்த தொகை (Sale Price) ரூ.1 லட்சம் எனக் கொள்வோம். அந்தப் பங்குகளை முதன்முதலில் வாங்கியபோது அவற்றின் மதிப்பை (Purchase Value) ரூ.30,000 எனக் கொள்வோம். இதன் நீண்டகால மூலதன ஆதாயத்தைக் கணக்கிட, முதலில் 31.01.2018-ல் பங்குகளின் மதிப்பு மற்றும் பங்குகளை வாங்கிய மதிப்பு ஆகிய இரண்டில் எது அதிகமோ அதை எடுத்துக்கொள்ள வேண்டும். ஆக, 50,000 ரூபாயை விற்பனை மதிப்பான 1 லட்சம் ரூபாயில் கழித்தால் கிடைக்கும் 50,000 ரூபாயே (Capital Gain = Sale Price Less Cost of Acquisition) நீண்டகால மூலதன ஆதாயம்.”

ரூ.91 விலையில் பேங்க் ஆஃப் பரோடா நிறுவனத்தின் 100 பங்குகள், ரூ.78 விலையில் ஜி.டி.பி.எல் ஹாத்வே நிறுவனத்தின் 100 பங்குகள், ரூ.428 விலையில் தங்கமயில் ஜூவல்லரி நிறுவனத்தின் 50 பங்குகள், ரூ.490 விலையில் டாபர் நிறுவனத்தின் 50 பங்குகள் ஆகியவற்றில் முதலீடு செய்திருக்கிறேன். இவற்றை மேலும் தொடரலாமா என்று ஆலோசனை கூறவும்.

சந்தோஷ், கோயமுத்தூர்-2

ரெஜி தாமஸ், பங்குச் சந்தை நிபுணர்

“பேங்க் ஆஃப் பரோடா நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு முடிவில் நிகர வட்டி வருமானத்தில் வளர்ச்சியும், வரிக்குப் பிந்தைய லாபத்தில் இறக்கமும் ஏற்பட்டுள்ளன. எனினும், இது தற்போது ஈர்க்கக்கூடிய விலையில் இருப்பதால், நீண்டகால நோக்கில் வைத்திருக்கலாம். குறுகியகாலத்துக்கு இது உகந்ததாக இல்லை. மைக்ரோகேப் பங்கான ஜி.டி.பி.எல் ஹாத்வே நல்ல காலாண்டு முடிவைக் காட்டியிருக்கிறது. நீண்டகால முதலீட்டுக்கு ஏற்றதாக இருப்பதால் இதை வைத்திருக்கலாம்.

மொத்தமுள்ள 26 ஜூவல்லரி நிறுவனப் பங்குகளில் தங்கமயில் ஜூவல்லரி நிறுவனம் ஐந்தாவது இடத்தில் உள்ளது. அரையாண்டு மற்றும் ஒன்பது மாதக் கணக்கிலான வரிக்குப் பிந்தைய லாப மதிப்பு வலுவான வளர்ச்சியில் இருக்கிறது. குறுகியகால இலக்கில் இதை வைத்திருக்கலாம்.

கே.ஆர்.சத்யநாராயணன், ரெஜி தாமஸ், கே.பி.மாரியப்பன்
கே.ஆர்.சத்யநாராயணன், ரெஜி தாமஸ், கே.பி.மாரியப்பன்

டாபர் நிறுவனத்துக்கு விற்பனை வளர்ச்சியில் வலுவான லாபம் கிடைத்துள்ளது. பங்கு விலை 52 வாரங்களின் உச்சத்தை நெருங்கியுள்ளது. வழங்கப்பட்ட கடன்கள், வசூலிக்கப்பட்ட தொகை அனைத்தும் நல்ல நிலையில் உள்ளன. இந்தப் பங்கு அதிகபட்ச மதிப்பில் இருப்பதால் லாப நோக்கம் கருதி விற்பனை செய்யலாம்.”

ஹோட்டல்
ஹோட்டல்

வீட்டுக் கடனில் வீட்டுக்கான காப்பீடும் இருக்கிறது. இதில் மின்கசிவு காரணமாக ஏற்படும் இழப்புகளுக்கும் காப்பீடு உண்டா?

ராம்குமார், சென்னை-45

கே.பி.மாரியப்பன் இன்ஷூரன்ஸ் நிபுணர்

“வீட்டுக் கடனுக்கு எடுக்கும் காப்பீடு கட்டடத்துக்கு மட்டுமே. வீட்டிலுள்ள பொருள்களுக்குக் காப்பீடு இருக்காது. மின்கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் கட்டடம் பாதிக்கப்பட்டிருந்தால், அதற்குக் காப்பீட்டுத் தொகை கோர முடியும். ஆனால், வீட்டிலிருக்கும் சாமான்கள் எரிந்துவிட்டால் அதற்கு இழப்பீடு கிடைக்காது.

வீட்டுக்குள்ளிருக்கும் பொருள்கள், கருவிகள், நகை, பணம் உள்ளிட்ட அனைத்துக்கும் தனியாக காப்பீடு எடுத்திருந்தால் அவற்றுக்கும் இழப்பீடு கோரலாம்.”

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கேள்விகளை அனுப்புபவர்கள் தங்கள் செல்போன் எண்ணையும் குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி: கேள்வி-பதில் பகுதி, நாணயம் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-2. nav@vikatan.com

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism