Published:Updated:

கேள்வி - பதில் : தொலைந்த கிரெடிட் கார்டு... சிபில் ஸ்கோர் பாதிக்குமா?

கேள்வி - பதில்
பிரீமியம் ஸ்டோரி
கேள்வி - பதில்

புதிய கிரெடிட் கார்டை நீங்கள் ஏற்கெனவே வாங்கிய வங்கியிலோ அல்லது வேறு வங்கியிலோ விண்ணப்பித்துப் பெறலாம்!

கேள்வி - பதில் : தொலைந்த கிரெடிட் கார்டு... சிபில் ஸ்கோர் பாதிக்குமா?

புதிய கிரெடிட் கார்டை நீங்கள் ஏற்கெனவே வாங்கிய வங்கியிலோ அல்லது வேறு வங்கியிலோ விண்ணப்பித்துப் பெறலாம்!

Published:Updated:
கேள்வி - பதில்
பிரீமியம் ஸ்டோரி
கேள்வி - பதில்

எனக்கு அலுவலகம் மூலமாக, நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் தனியார் வங்கியொன்றில் புதிய சம்பளக் கணக்கு அடிப்படையில் கிரெடிட் கார்டு வழங்கினார்கள். அந்த கிரெடிட் கார்டைத் தொலைத்துவிட்டேன். இதனால் என் சிபில் ஸ்கோர் குறையுமா... நான் புதிதாக கிரெடிட் கார்டு வாங்க முடியுமா?

ஜே.ராஜ்குமார், திருச்சி

ஆர்.கணேசன், உதவிப் பொதுமேலாளர் (ஓய்வு), பஞ்சாப் நேஷனல் பேங்க்

‘‘கிரெடிட் கார்டைத் தொலைப்பது குற்றமல்ல. ஆனால், அந்தத் தகவலை உடனடியாக வங்கிக்குத் தெரிவிப்பதன் மூலம் அதை யாராவது முறைகேடாகப் பயன்படுத்துவதைத் தடுக்க முடியும். கிரெடிட் கார்டை நீங்கள் பயன்படுத்தாத காரணத்துக்காக உங்களுடைய சிபில் ஸ்கோர் எவ்விதத்திலும் பாதிக்கப்படாது.

புதிய கிரெடிட் கார்டை நீங்கள் ஏற்கெனவே வாங்கிய வங்கியிலோ அல்லது வேறு வங்கியிலோ விண்ணப்பித்துப் பெறலாம்.”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பங்குச் சந்தை முதலீட்டில் முதன்முறையாக ஈடுபடவிருக்கிறேன். இப்போதே டீமேட் கணக்குத் தொடங்கச் செலவழிப்பது சரியா... பங்குச் சந்தை முதலீட்டை நான் எப்படிச் செய்ய வேண்டும்?

கே.செந்தில், மதுரை

ஜி.சொக்கலிங்கம், பங்குச் சந்தை நிபுணர்

“பங்குச் சந்தை முதலீட்டுக்கான வழிமுறையில், டீமேட் கணக்கைத் தொடங்குவது கட்டாயமான ஒன்று. பங்குச் சந்தையில் முதலீடு செய்யத் தயக்கமாக இருந்தால், அது குறித்த அறிவை வளர்த்துக்கொள்ளும் வரை மியூச்சுவல் ஃபண்டில் எஸ்.ஐ.பி முறையில் இண்டெக்ஸ் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். பங்குச் சந்தையில் இப்போதே முதலீடு செய்ய ஆர்வமாக இருந்தால் சென்செக்ஸ், நிஃப்டி, மிட்கேப் இண்டெக்ஸில் இடம் பெற்றிருக்கும் பங்குகளைத் தேர்வு செய்து முதலீடு செய்யலாம். உங்கள் முதலீட்டை மொத்தமாகச் செய்யாமல், சிறிது சிறிதாக முதலீடு செய்யலாம். ஒரே துறை சார்ந்த பங்குகளில் முதலீடு செய்யாமல் 5-8 துறைகளைச் சார்ந்த பங்குகளில் முதலீடு செய்வது நல்லது.”

ஆர்.கணேசன், ஜி.சொக்கலிங்கம், எஸ்.சிவகுமார்
ஆர்.கணேசன், ஜி.சொக்கலிங்கம், எஸ்.சிவகுமார்

நான் முதலீடு செய்த யூலிப் பாலிசித் திட்டத்தின் என்.ஏ.வி மதிப்பு மிகவும் குறைந்திருக்கிறது. அந்த பாலிசியை சரண்டர் செய்வது நல்லதா, மீண்டும் தொடரலாமா?

முத்துராமலிங்கம், முகநூல் வழியாக...

எஸ்.ஸ்ரீதரன், நிதி ஆலோசகர்

“கடந்த பத்து ஆண்டுகளாக யூலிப் பாலிசியில் முதலீடு செய்வதாகக் கூறியிருக்கிறீர்கள். தற்போதுள்ள சூழ்நிலையில், அனைத்துப் பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகளும் மந்த நிலையிலேயே இருக்கின்றன. ஆகவே, தற்போது சரண்டர் செய்வது நல்லதல்ல. இந்த பாலிசிக்குத் தொடர்ந்து பிரீமியம் செலுத்தி, பங்குச் சந்தை சிறிது வளர்ச்சியடைந்த நிலையில் சரண்டர் செய்வது நல்லது.”

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் நான், பங்குச் சந்தை முதலீட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறேன். எனக்கு அதற்கான நேரமில்லாததால், என் நண்பன் ஒருவனின் வழிகாட்டுதல்படி முதலீடு செய்து வருகிறேன். முழுக்க முழுக்க அவனது புத்திகூர்மையால் இதுவரை ஒரு லட்சம் ரூபாய்வரை லாபம் கிடைத்திருக்கிறது. தற்போது நானாக முதலீடு செய்வதென்றால், எப்படி முதலீடு செய்யலாம்?

எம்.ஆல்பர்ட், சென்னை

தி.ரா.அருள்ராஜன், பங்குச் சந்தை நிபுணர்

“யாரும் பிறக்கும்போதே துறை சார்ந்த அனுபவத்துடன் பிறப்பதில்லை. எந்தவொரு துறையைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டுமென்றாலும், அதற்கு ஆர்வம் இருக்க வேண்டும். பங்குச் சந்தையும் அப்படித்தான். உங்களுக்கு அதைப் பற்றி நன்கு அறிந்துகொண்டு செயல்பட விருப்பமிருந்தால், அதைக் கற்க வேண்டும். உங்கள் நண்பரிடமோ அல்லது ஏதேனும் நல்ல பயிற்சி மையத்தில் சேர்ந்தோ கற்கலாம். இது பணம் சம்பந்தப்பட்ட துறை. எனவே, இந்தத் துறைக்கான விதிமுறைகளை வகுத்துக்கொண்டு, அதற்குள் செயல்பட வேண்டும்.”

கேள்வி - பதில்
கேள்வி - பதில்

கடந்த எட்டு ஆண்டுகளாக ஆடை ஏற்றுமதி நிறுவனம் ஒன்றை நடத்திவருகிறேன். அதில் 30 பேர் பணியாற்றுகிறார்கள். ஐ.எஸ்.ஓ தரச்சான்று பெறுவதற்கு என்னென்ன வழிமுறைகளைச் செய்ய வேண்டும்?

சி.மூர்த்தி, கோவை

எஸ்.சிவகுமார், தொழில்முனைவோர் ஆலோசகர்

“ஆடை ஏற்றுமதி நிறுவனங்களில் பணியாளர்கள் எண்ணிக்கையும், செயல்பாடுகளும் அதிகம் என்பதால், ஐ.எஸ்.ஓ தரச்சான்று பெறுவது சற்றுக் கடினமான ஒன்று. பொதுவாக, ஏற்றுமதி நிறுவனங்களுக்குத் தேவையற்ற, திட்டமிடாத செலவுகள் அதிகமாக இருக்கும். ஐ.எஸ்.ஓ சான்று பெறும்போது தேவையற்ற செலவுகளை மட்டுப்படுத்தவும், தயாரிப்புகளின் தரத்தை அதிகப்படுத்தவும் வேண்டும். மேலும், ஏற்றுமதித்துறையில் ஐ.எஸ்.ஓ தரச்சான்று வெளிநாட்டு வாடிக்கையாளர்களை ஈர்க்க பெரிதும் உதவும். பொதுவாக, ஆடைத் தயாரிப்புத்துறைக்கு ஐ.எஸ்.ஓ 9001 தரச் சான்று பெறுவார்கள். ஆடைகளைத் தயாரித்து ஏற்றுமதி செய்யும் நிறுவனமாக இருந்தால் ஐ.எஸ்.ஓ 9002 பெறுவார்கள். இறுதியாக, ஐ.எஸ்.ஓ 9003 பெறுவார்கள். ஐ.எஸ்.ஓ தரச்சான்று நிறுவனத்தை நீங்கள் நேரடியாகவே அணுக முடியும். ஆனால், முதன்முறையாக தரச் சான்றுக்கு விண்ணப்பிப்ப வர்கள் இதற்காகவே இருக்கும் ஐ.எஸ்.ஓ ஆலோசகர்களை அணுகினால், நிறுவனத்தின் தினசரி டாக்குமென்டேஷன், ஆடிட்டிங் செய்வதற்கான தயாரிப்புகள், பணியாளர்களின் தகுதி, தேவை குறித்த அனைத்துப் பணிகளையும் அவர்களே செய்து முடித்துத் தருவார்கள். நிறுவனத்தின் மதிப்பீடு, நிர்வாகத்திறன் உள்ளிட்டவற்றைப் பொறுத்து, ஐ.எஸ்.ஓ சான்று பெற மூன்று மாதம் முதல் மூன்று ஆண்டுகள் வரை ஆகலாம். இது தொடர்ச்சியாக, குறிப்பிட்டகால இடைவெளியில் புதுப்பிக்கப்பட வேண்டிய சான்றிதழ். முதலாம் ஆண்டு மட்டுமாவது ஆலோசகர்களைப் பயன்படுத்திக்கொண்டு, அடுத்தடுத்த முறைகளில் நீங்களே பொறுப்பெடுத்துக் கொள்ளலாம்.

ரூ.220 விலையில் 300 வாங்கிய விப்ரோ பங்குகளும், ரூ.1,600 விலையில் வாங்கிய 100 ஐ.ஆர்.சி.டி.சி பங்குகளும் என்னிடம் உள்ளன. இரண்டிலும் இன்னும் ஆறு மாத காலத்துக்குத் தொடர்ந்தால் வருமானம் ஈட்ட வாய்ப்புள்ளதா?

க.குணால், சென்னை

ரெஜி தாமஸ், பங்குச் சந்தை நிபுணர்

“விப்ரோ: சமீபத்தில் வெளியிடப்பட்ட நிறுவனத்தின் எதிர்கால கணிப்பு, இந்தப் பங்கின் விலை உடனடியாக ஏற்றம் பெற உதவவில்லை. இந்த கொரோனா தாக்குதல் காலகட்டத்தில் ஐ.டி நிறுவனப் பங்குகள், மிகவும் நிதானமாகவே செயல்பட்டு வருகின்றன. இந்தத் துறை மீண்டெழுந்து வருவதற்குக் குறைந்தது ஆறு மாத காலமாவது ஆகக்கூடும். எனவே, எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். இப்போதே இந்தப் பங்குகளை விற்றுவிட்டு வெளியேறலாம். அப்படி இல்லையெனில், மேலும் 15 மாத காலத்துக்குக் காத்திருக்க வேண்டியது அவசியம்.

ஐ.ஆர்.சி.டி.சி: இந்தப் பங்கு, இந்தியாவில் மீண்டும் பயணிகள் ரயில் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து தொடங்கப்படும் செய்தியை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறது. அதன் பின்னரே வருமானம் ஈட்டத் தொடங்கும். ஆனால், தற்போது வரை பொதுப்போக்குவரத்து தொடங்கப்படும் தேதி குறித்து எவ்விதத் தெளிவும் இல்லை. அது தெரிந்த பின்னரே பங்கு விலையில் ஏற்றத்தை நாம் எதிர்பார்க்க முடியும். இயல்பான சூழலுக்குத் திரும்பிய பிறகு இந்தப் பங்கு விலையில் மாற்றத்தைக் காண நீண்டகாலக் காத்திருப்பு தேவை. குறைந்தது ஆறு மாத காலத்துக்கும் மேல் காத்திருக்க வேண்டும்.”

ரெஜி தாமஸ், பி.மனோகரன்
ரெஜி தாமஸ், பி.மனோகரன்

58 வயதான என் அம்மாவுக்கு இன்னும் ஆறு மாதங்களில் கர்ப்பப்பை நீக்கும் ஆபரேஷன் செய்ய வேண்டியிருக்கிறது. ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியில் இதற்கான சிகிச்சைச் செலவு அடங்குமா?

ரா.மகேஷ், மதுரை

பி.மனோகரன், இன்ஷூரன்ஸ் ஆலோசகர்

“கர்ப்பப்பை நீக்கும் ஆபரேஷன் செய்ய வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரை செய்திருந்தால், மருத்துவக் காப்பீட்டின் விதிமுறைகளுக்கேற்ப அந்தச் சிகிச்சைக்கான க்ளெய்ம் தொகை வழங்கப்படும்.”

கேள்விகளை அனுப்புபவர்கள் தங்கள் செல்போன் எண்ணையும் குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி: கேள்வி-பதில் பகுதி, நாணயம் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-2. nav@vikatan.com