Published:Updated:

கேள்வி - பதில் : குழந்தைகள் பெயரில் முதலீடு... எது சிறந்த வழி?

குழந்தைகளுக்கான முதலீட்டில் பெற்றோரில் ஒருவர் வாரிசுதாரராகவும், இன்னொருவர் கார்டியனாகவும் பதிவு செய்துகொள்வது நல்லது!

பிரீமியம் ஸ்டோரி

ஆறு மற்றும் எட்டு வயதுள்ள எங்கள் குழந்தைகள் பெயரில் முதலீடு செய்வதற்கு எது சிறந்த வழி?

- ஆர்.வெங்கட்ராமன், சென்னை

த.முத்துகிருஷ்ணன், நிதி ஆலோசகர்

“அடுத்த பத்து ஆண்டுக்காலத்துக்கு எஸ்.ஐ.பி முறையில் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வதன் மூலம், அதிலிருந்து கிடைக்கும் வருமானத்தைக் குழந்தைகளின் மேற்படிப்புக்குப் பயன்படுத்திக்கொள்ள முடியும். குழந்தைகளுக்கான முதலீட்டில், பெற்றோரில் ஒருவர் வாரிசுதாரராகவும், இன்னொருவர் கார்டியனாகவும் பதிவு செய்துகொள்வது நல்லது.”

த.முத்துகிருஷ்ணன், டாக்டர். கோபால் 
கிருஷ்ண ராஜு
த.முத்துகிருஷ்ணன், டாக்டர். கோபால் கிருஷ்ண ராஜு

படிவம் 16 தருவதற்கு என் நிறுவனம் தாமதப்படுத்தினால் வேறு எந்த வழியில் வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்வது?

- லோ.நரேஷ் குமார், சேலம்

டாக்டர் கோபால் கிருஷ்ண ராஜு, ஆடிட்டர்

“ஃபார்ம் 16-ல் உள்ள தகவல்கள் அனைத்தும் அப்படியே ஃபார்ம் 26AS-ல் இருக்கும். ஃபார்ம் 26AS-ஐ டௌன்லோடு செய்வதற்கு வருமான வரித்துறை இணையதளத்திலுள்ள உங்களுக்கான அக்கவுன்ட்டை, பான் கார்டு எண் மூலமாக லாக்இன் செய்யவும். பிறகு, ஃபார்ம் 26AS வழியாக விண்ணப்பித்து, நீங்கள் வரிக் கணக்குத் தாக்கல் செய்வதற்குத் தேவைப்படும் வருடாந்தர டாக்ஸ் கிரெடிட் ஸ்டேட்மென்ட்டைப் பெறலாம். அதன் அடிப்படையில் உங்களுடைய வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யலாம்.”

கேள்வி - பதில் : கிரீன் பாண்ட் முதலீடு லாபம் தருமா?

நான் சிறிய அளவில் பங்குச் சந்தையில் முதலீடு செய்யத் தொடங்கியிருக்கிறேன். எஃப் அண்ட் ஓ வர்த்தகத்தில் சிறிய முதலீட்டாளர்கள் ஈடுபடலாமா?

- பி.வினோத் குமார், கோயமுத்தூர்

தி.ரா.அருள்ராஜன், பங்குச் சந்தை நிபுணர்

“உபரிப் பணத்தில் மட்டுமே முதலீடு செய்ய வேண்டும். ஆனால், அதிக ரிஸ்க் உள்ள எஃப் அண்ட் ஓ வர்த்தகத்தில் ஈடுபடுவது நல்லதல்ல. அதிக இழப்புக்கு வாய்ப்பிருப்பதால், சிறிய முதலீட்டாளர்கள் அதில் பணம் போடாமல் இருப்பது நல்லது.”

முதலீடு
முதலீடு

டீமேட் அக்கவுன்ட்டில் பேசிக் டீமேட் அக்கவுன்ட்டுக்குக் கட்டணம் செலுத்த வேண்டுமா... அதை எப்படித் தொடங்குவது?

- வே.செந்தில்குமார், திண்டுக்கல்

ரெஜிதாமஸ், பங்குச் சந்தை நிபுணர்

“சிறிய முதலீட்டாளர்களுக்கு `பி.எஸ்.டி.ஏ’ எனப்படும் பேசிக் டீமேட் அக்கவுன்ட்டே போதுமானது. இந்த பேசிக் டீமேட் அக்கவுன்ட் சேவை, செபியால் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது டீமேட் அக்கவுன்ட் வசதியைத் தரக்கூடிய வங்கிகள், தரகு நிறுவனங்கள் என எதன் மூலமாகவும் பேசிக் டீமேட் அக்கவுன்ட்டை உருவாக்கலாம். இந்த பேசிக் டீமெட் அக்கவுன்ட்டில் உள்ள பங்குகளின் மொத்த மதிப்பு, அதிகபட்சம் ரூ.2 லட்சத்துக்கு மிகக் கூடாது. இந்த அக்கவுன்ட்டைப் பராமரிப்பதற்கான ஆண்டுக் கட்டணத்தை இரண்டு வரம்புகளாகப் பிரித்திருக்கிறார்கள். ரூ.50,000 வரையிலான பங்கு மதிப்புக்கு ஆண்டுப் பராமரிப்புக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. ரூ.50,001 முதல் ரூ.2 லட்சம் வரை ரூ.100 பராமரிப்புக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். ஒவ்வொரு நாளும் பங்குச் சந்தை முடிவடையும்போது இருக்கும் பங்கு விலையின் அடிப்படையில், மொத்தப் பங்கு மதிப்பு கணக்கிடப்படும். அந்த டீமேட் கணக்கை வழங்கக்கூடிய நிறுவனம் தரும் மதிப்பீடுதான் அதிகாரபூர்வமான மொத்தப் பங்குகளின் மதிப்பு. இது ரூ.2 லட்சம் ரூபாயைத் தாண்டும்போது அது வழக்கமான டீமேட் கணக்காக மாறிவிடும். அப்போது ஆண்டுப் பராமரிப்புக் கட்டணம் சுமார் ரூ.300 செலுத்த வேண்டி வரும்.”

ரெஜிதாமஸ், கே.அழகுராமன்
ரெஜிதாமஸ், கே.அழகுராமன்

வீட்டை விற்பனை செய்வதற்கான பவர் ஆஃப் அட்டர்னி கொடுக்கும் பத்திரத்தில் நான் சாட்சிக் கையொப்பம் இட்டிருக்கிறேன். இதன் காரணமாக எனக்கு ஏதேனும் சிக்கல் வர வாய்ப்புள்ளதா?

- க.வெற்றிவேல், மதுரை

கே.அழகுராமன், வழக்கறிஞர், உயர் நீதிமன்றம்

“பொதுவாக, எந்தப் பத்திரமாக இருந்தாலும் சாட்சிக் கையொப்பம் என்பது, அந்த நபரை உங்களுக்குத் தெரியும் என ‘உங்களால் அடையாளப்படுத்தும் எண்ணத்திலேயே’ செய்யப்படுவது. பின்னாளில் அந்த பவர் ஆஃப் அட்டர்னி ஆவணம், அதில் உங்களால் அடையாளம் காட்டப்பட்ட நபர் ஆகியவை கேள்விக்குறியாக்கப்பட்டு, அந்த ஆவணத்தின் மூலமான செயல்பாடுகள் மோசடியானவை என்று யாராவது சுட்டிக்காட்டும்பட்சத்தில் உங்கள் சாட்சிக் கையொப்பம், சந்தேகத்துக்கு உட்படும். அது சிவில் நீதிமன்றங்களிலோ, கிரிமினல் நடவடிக்கை மூலமாகவோ வழக்கு தொடுக்கப்படும். அந்த பவர் ஆஃப் அட்டர்னி ஆவணத்தின் உண்மைத்தன்மை உறுதி செய்யப்பட்டால், உங்களுக்கு எந்தச் சிக்கலும் வர வாய்ப்பில்லை. இல்லையென்றால், ‘மோசடியான ஆவண உற்பத்தி’ என்ற அடிப்படையில், இதர நபர்களுடன் நீங்களும் இணைக்கப்பட்டுச் சிக்கலை எதிர்கொள்ள வேண்டும்.”

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கிராம நத்தம் மனை என்றால் என்ன, அதில் வீடு கட்டலாமா?

- டி.ஹரிஹரன், சென்னை

த.பார்த்தசாரதி, சொத்து ஆலோசகர்

“கிராமப் பகுதிகளில் வீடு கட்டுவதற்காகவே ஒதுக்கப்படும் நிலப்பகுதி `கிராம நத்தம்’ எனப்படும். இதைப் பேச்சுவழக்கில், `நத்தம் புறம்போக்கு’ என்பார்கள். இந்த கிராம நத்தம், பல்லாண்டுகளுக்கு முன்னரே ஒதுக்கப்பட்டிருக்கும். பிறகு அடுத்தடுத்து பலர் வாங்கி விற்று கைமாறி வந்திருக்கும். இவற்றுக்கு அவ்வப்போது பட்டா வழங்கும் நடவடிக்கையில் அரசு ஈடுபடும். அப்போது பட்டாவுக்கு விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம். நத்தம் புறம்போக்கு போலவே, ஆடு, மாடு மேய்ச்சலுக்காக `மேய்க்கால் புறம்போக்கு’ என்றும், நீர் வடிகால் வசதிக்காக `வாய்க்கால் புறம்போக்கு’ என்றும்கூட நிலப்பகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கும். இவற்றில் மேய்க்கால் புறம்போக்கில்கூட வீடு கட்டிக்கொள்ளலாம். ஆனால், வாய்க்கால் புறம்போக்கில் மட்டும் வீடு கட்டுவதைத் தவிர்க்க வேண்டும். அதற்கு அனுமதி இல்லை.”

த.பார்த்தசாரதி, வி.எஸ்.சுரேஷ், ஜி.டி.கோபாலகிருஷ்ணன்
த.பார்த்தசாரதி, வி.எஸ்.சுரேஷ், ஜி.டி.கோபாலகிருஷ்ணன்

நான் குடியிருக்கும் வீட்டுக்கான 60 ஆண்டுகளுக்கு முந்தைய மூலப்பத்திரம் தேவை. எப்படிப் பெறுவது?

வி.சேதுராமன், கோயமுத்தூர்

வி.எஸ்.சுரேஷ், வழக்கறிஞர்

“பொதுவாக, வீட்டு மூலப் பத்திரங்கள் பதிவுத்துறை அலுவலகத்தில் பத்திரப்பதிவின் போது தாக்கல் செய்யப்படும். பதிவுத்துறையிலுள்ள பத்திரங்கள் பொது ஆவணங்கள் என்பதால் நாம் உரிய கட்டணத்தைச் செலுத்தி அவற்றைப் பெறலாம். மேலும், வீடு உள்ள வட்டார தாலுகா அலுவலகத்திலும் மேற்படி ஆவணங்கள் கிடைக்க வாய்ப்புண்டு. தற்போது, பத்திரப்பதிவின்போது எல்லா மூல ஆவணங்களும் இருந்தால்தான் பதிவு செய்யப் படுகிறது.”

எனது கிரெடிட் கார்டு ஸ்டேட்மென்ட்டில் மினிமம் டியூ அமௌன்ட், டோட்டல் டியூ அமௌன்ட் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறதே... என்ன வித்தியாசம்? இதில் எந்தத் தொகையை நான் செலுத்த வேண்டும்?

- வி.வசந்த், கோயமுத்தூர்

ஜி.டி.கோபாலகிருஷ்ணன், வங்கி மேலாளர், இந்தியன் வங்கி

“மினிமம் டியூ அமௌன்ட் என்பது நீங்கள் கிரெடிட் கார்டு மூலம் வாங்கிய தொகையை மொத்தமாகத் திருப்பிச் செலுத்தாமல், தவணை முறையில் ஒவ்வொரு மாதமும் செலுத்தும்போது, நிர்ணயிக்கப்படும் குறைந்தபட்ச தவணை. இப்படித் தவணை முறையில் செலுத்தும்போது, மீதக் கடன் தொகைக்கு வட்டி சேர்க்கப்பட்டு வரும். கிரெடிட் கார்டு கடன்களுக்கு வட்டி அதிகமாக இருக்கும் என்பதால், கூடுமானவரை ஒரே தவணையில் மொத்தத்தையும் செலுத்திவிடுவது நல்லது.”

கேள்விகளை அனுப்புபவர்கள் தங்கள் செல்போன் எண்ணையும் குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி: கேள்வி-பதில் பகுதி, நாணயம் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-2. nav@vikatan.com

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு