Published:Updated:

ஃப்ரான்சைஸ் தொழில் - 6 - ஃப்ரான்சைஸ் ஆலோசகரின் பொறுப்புகள்!

ஃப்ரான்சைஸ் தொழில்
பிரீமியம் ஸ்டோரி
ஃப்ரான்சைஸ் தொழில்

வழிகாட்டியைத் தேர்வுசெய்யும் வழி!

ஃப்ரான்சைஸ் தொழில் - 6 - ஃப்ரான்சைஸ் ஆலோசகரின் பொறுப்புகள்!

வழிகாட்டியைத் தேர்வுசெய்யும் வழி!

Published:Updated:
ஃப்ரான்சைஸ் தொழில்
பிரீமியம் ஸ்டோரி
ஃப்ரான்சைஸ் தொழில்

புதிதாக ஃப்ரான்சைஸ் தொழில் தொடங்க ஆர்வமுள்ளவர்களுக்கு அவசியமானது ஒரு சரியான வழிகாட்டுதல். ஏதோ ஒரு ஆர்வத்தில் ஒரு பிரபல நிறுவனத்தின் ஃப்ரான்சைஸை எடுத்து, அந்தத் தொழிலை நடத்துவோம்; அதில் பல பிரச்னைகள் இருப்பதைக் கண்டறிந்ததும், அவற்றுக்கான விடை தேடி அலையாமல், அந்தத் தொழிலையே விட்டுவிடலாமா என்று யோசிக்க ஆரம்பித்துவிடுவோம். எனவே, புதிதாக ஃப்ரான்சைஸ் தொடங்க விரும்புபவர்களுக்கு அவர்களின் திறமையை அடையாளம் கண்டுகொண்டு, அதற்கு ஏற்ற துறையைத் தேர்வு செய்து, நம்பத்தகுந்த ஒரு நிறுவனத்திடம் கொண்டு சேர்ப்பதற்கு ஓர் ஆலோசகர் அவசியமானவர்.

ஃப்ரான்சைஸ் தொழில் - 6 - ஃப்ரான்சைஸ் ஆலோசகரின் பொறுப்புகள்!

ஃப்ரான்சைஸ் மூலம் என்ன தொழிலை ஆரம்பிப்பது என்று தெரியாமல் நாம் குழப்பமான மனநிலையில் இருப்பதை சில ஃப்ரான்சைஸ் புரோக்கர்கள் நன்கு பயன்படுத்திக்கொள்வார்கள். பொதுவாக, ஒருஃப்ரான்சைஸரையும் ஃப்ரான்சைஸியையும் இணைக்கும் பணிக்காக ஒரு குறிப்பிட்ட அளவு கட்டணம் புரோக்கருக்கு வழங்கப்படும். புரோக்கர் புதிதாகத் தொழில் தொடங்குபவருக்கு சரியாக வழிகாட்டிவிட்டால் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், தவறான வழியில் அழைத்துச் சென்றால் என்ன செய்வது... ஒருவர் ஃப்ரான்சைஸ் புரோக்கராக இருப்பதற்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் இருப்பதால், தவறாக வழிகாட்டும் போலி புரோக்கர்களின் எண்ணிக்கை இப்போது அதிகமாக இருக்கிறது.

இந்த நிலையில், ஒரு நல்ல ஃப்ரான்சைஸ் தொழில் தொடர்பான சரியான ஆலோசனை பெறுவது எப்படி, யாரிடமிருந்து பெற வேண்டும், சரியான ஆலோசகரை நாம் எப்படித் தேர்வு செய்ய வேண்டும் என்பதையெல்லாம் பார்ப்போம்.

ஃப்ரான்சைஸ் ஆலோசகர் என்பவர் யார்?

ஒரு நல்ல ஃப்ரான்சைஸ் ஆலோசகர், ஒரு ஃப்ரான்சைஸருக்கும் ஃப்ரான்சைஸிக்கும் பாலமாக இருக்க வேண்டும். புதிதாக ஃப்ரான்சைஸ் பெற விரும்புபவர்களுக்கு, இருக்கும் பலதரப்பட்ட வாய்ப்புகளை எடுத்துச்சொல்லி, அவர்களுக்குப் பொருத்தமான தொழிலைத் தேர்வு செய்ய ஆலோசனை வழங்குவது இவரின் முதன்மையான பணி. ஒரு தகுதியான ஃப்ரான்சைஸ் ஆலோசகரைத் தேர்வு செய்வது மிகச் சிரமமானது என்றாலும், கொஞ்சம் கஷ்டப்பட்டாவது தேடித்தான் ஆக வேண்டும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஃப்ரான்சைஸ் ஆலோசகர் ஏன் தேவை?

ஒரு நிறுவனம் தன் பிராண்டை விரிவுபடுத்த நினைக்கும்போது அதற்குத் தகுதியான ஃப்ரான்சைஸிகள் தேவைப்படுகிறார்கள். பெரும்பாலான நிறுவனங்கள், ஃப்ரான்சைஸிகளைத் தேர்வு செய்யும்போது, அவையே அதைச் செய்யாமல், ஒரு ஃப்ரான்சைஸ் ஆலோசகரின் உதவியுடன் செய்ய விரும்பும். தற்போது, பல துறைகளில் ஃப்ரான்சைஸ் வாய்ப்புகள் அளவுக்கு அதிகமாகவே இருக்கின்றன. இவற்றில் தகுதியான மற்றும் முன்னேற்றத்துக்கு உறுதியளிக்கும் நிறுவனத்தைத் தேர்வு செய்ய ஃப்ரான்சைஸ் ஆலோசகர் முக்கியமானவராகிறார்.

ஃப்ரான்சைஸ் தொழில் - 6 - ஃப்ரான்சைஸ் ஆலோசகரின் பொறுப்புகள்!

சரியான கட்டண நிர்ணயம்

சரியான தொழிலைத் தேர்வு செய்ததும், ஃப்ரான்சைஸி மற்றும் ஃப்ரான்சைஸருக்கு இடையில் ஓர் ஒப்பந்தம் ஏற்படும்போது அதில் பிரதானமாக வசூலிக்கப்படும் ஃப்ரான்சைஸ் கட்டணத்தை இரு தரப்பினருக்கும் சார்பாக சரியாக நிர்ணயிக்க உதவியாக இருப்பார் ஃப்ரான்சைஸ் ஆலோசகர். ஃப்ரான்சைஸ் கட்டணம் மட்டுமன்றி ஃப்ரான்சைஸி, ஃப்ரான்சைஸருக்கு ஒவ்வொரு மாதமும் செலுத்தும் உரிமக் கட்டணத்தைத் தீர்மானிக்கக் கூடியவராகவும் இருப்பார்.

பயிற்சி அளிப்பது

தொழிலுக்குத் தேவையான பயிற்சிகளை ஃப்ரான்சைஸர் ஒரு குறிப்பிட்ட கட்டணத்தைப் பெற்றுக் கொண்டு ஃப்ரான்சைஸிக்கு வழங்குவார். இது போன்ற பயிற்சிகளை சில நேரங்களில் ஒரு ஃப்ரான்சைஸ் ஆலோசகரே ஃப்ரான்சைஸிக்குத் தருவார்.

ஒரு நல்ல ஃப்ரான்சைஸ் ஆலோசகர், ஒரு ஃப்ரான்சைஸருக்கும் ஃப்ரான்சைஸிக்கும் பாலமாக இருக்க வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இடங்களை அமைத்துத் தருதல்

புதிதாக ஃப்ரான்சைஸ் தொடங்க விரும்புபவர் களுக்கும், தன் பிராண்டை விரிவுபடுத்த நினைக்கும் நிறுவனத்துக்கும் மற்ற மாநிலங்களிலிருக்கும் சந்தை நிலவரங்களைப் பற்றி பெரிய அளவுக்கான பரிச்சயம் இல்லாமலிருக்கலாம். ஆனால், தகுதியான ஒரு ஃப்ரான்சைஸ் ஆலோசகர் அனைத்து மாநிலங்களிலும் நிலவும் நிலவரங்களைத் தொடர்ந்து ஆராய்ந்தும், அவை தொடர்பாக நிறைய விவரங்களைத் தெரிந்தவராகவும் இருக்கும்பட்சத்தில் இரு தரப்பினருக்கும் மிக பயனுள்ளவராக இருப்பார்.

ஃப்ரான்சைஸ் தொழில்
ஃப்ரான்சைஸ் தொழில்

தொழிலைத் திட்டமிடுதல்

ஃப்ரான்சைஸ் ஆலோசகர், அனுபவமில்லாத ஃப்ரான்சைஸிகளுக்கு அவர்கள் தொழிலை கட்டமைக்கத் தேவைப்படும் அனைத்து வழிகளிலும் வழிகாட்டுவார். தேர்வுசெய்ய வேண்டிய தொழில், அதற்குத் தேவைப்படும் மூலதனம், உபகரணங்களுக்குத் தேவையான முதலீடு, எத்தனை பணியாட்களை நியமிக்கலாம், அவர்களின் தகுதிக்கேற்ப எவ்வளவு சம்பளம் வழங்குவது என அனைத்து விஷயங்களிலும் உரிய ஆலோசனை தந்து, வழிநடத்துவார்.

ஃப்ரான்சைஸ் தொழில்
ஃப்ரான்சைஸ் தொழில்

புதிய முயற்சிகள்

ஒரு நிறுவனம், ஒரு புதிய பொருளை தயாரிக்கத் திட்டமிட்டிருக்கிறதென்றால், நம்பிக்கைக்குரிய ஃப்ரான்சைஸ் ஆலோசகரிடம் கலந்து ஆலோசித்த பிறகுதான் திட்டவட்டமான ஒரு முடிவுக்கு வந்திருக்கும். ஃப்ரான்சைஸ் ஆலோசகர் அந்தப் பொருளின் வெற்றிக்கான சாத்தியங்கள், தொடக்கத்தில் சந்தையில் அதற்கு இருக்கப்போகும் வரவேற்பு, மேற்கொண்டு ஏதாவது மாற்றம் தேவை என்று தனக்குத் தோன்றினால் அதை நிறுவனத்திடம் எடுத்துச் சொல்லி ஒரு தெளிவான விளக்கத்தை அளிப்பது என அனைத்து சேவைகளையும் தருபவராக இருப்பார்.

நண்பராக இருக்க வேண்டும்

ஃப்ரான்சைஸ் ஆலோசகருக்கான தேவை இவ்வளவு அதிகரித்திருந்தாலும், அவரை நம்பி நம் உடல், பொருள், ஆவியை ஒப்படைக்க வேண்டும் என்பதல்ல. நீங்கள் முதன்முதலில் பார்க்கும் நபரை எந்த அடிப்படையில் நண்பராக ஏற்றுக்கொள்வீர்களோ, அதுபோலவே ஒரு ஃப்ரான்சைஸ் ஆலோசகர் உங்களுக்கு ஏற்ற நண்பராக இருப்பாரா என்பதைப் புரிந்துகொள்ள முயலுங்கள். ஆரம்பத்திலேயே ஆலோசகரோடு ஒரு நெருடலுடன் பயணிக்கத் தொடங்கினால், உங்கள் தொழில் வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களைச் சமாளிப்பது சிரமமாகிவிடும். எனவே, ஆலோசகர் விஷயத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம்!

(ஜெயிப்போம்)

இன்னும் சில மாதங்களில் லாபம்...!

காளிசரண், ஜூஸ் வேர்ல்ட், சென்னை.

ஃப்ரான்சைஸ் தொழில் - 6 - ஃப்ரான்சைஸ் ஆலோசகரின் பொறுப்புகள்!

“நான் பி.பி.ஓ நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தேன். சொந்தமாக ஒரு பிசினஸ் ஆரம்பிக்க வேண்டும் என்று நினைத்தபோது, உணவு மற்றும் குளிர்பானம் என்பதுதான் என் சாய்ஸாக இருந்தது. அது தொடர்பான ஃப்ரான்சைஸ்களை ஆலோசகரின் உதவியுடன் தேடினேன். அந்த நிறுவனங்கள் தரும் வசதிகளையும், கிச்சன்களையும் நேரில் சென்று பார்த்தேன். எனக்கான பட்ஜெட்டில் சில நிறுவனங்கள் மட்டுமே பொருத்தமாக இருந்தன. எல்லா விஷயங்களையும் ஆராய்ந்து பார்த்த பிறகு, `ஜூஸ் வேர்ல்ட்’ நிறுவனத்தின் ஃப்ரான்சைஸை சில மாதங்களுக்கு முன்னர் எடுத்தேன். பிப்ரவரி மாதம் பிறந்துவிட்டால், பழச்சாறு விற்பனை அதிகரிக்கத் தொடங்கிவிடும். இப்போதே ஏறக்குறைய நாங்கள் பிரேக் ஈவனுக்கு வந்துவிட்டோம். இன்னும் சில மாதங்களில் லாபம் சம்பாதிக்கத் தொடங்கிவிடுவோம்!’’

- ஆகாஷ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism