Published:Updated:

ஃப்ரான்சைஸ் தொழில் - 8 - சொந்தத் தொழில், ஃப்ரான்சைஸ் - எது பெஸ்ட்?

சாதகமும் பாதகமும்

பிரீமியம் ஸ்டோரி

டைமுறைச் சிக்கல்களும், சில கட்டுப்பாடுகளும் ஃப்ரான்சைஸிங்கிலும் உண்டு. அதைப் பார்த்துவிட்டு, ‘சொந்தத் தொழில் செய்வதுதான் சிறந்ததோ...’ என்று நினைக்கத் தோன்றலாம். ஃப்ரான்சைஸ் தொழிலிலும் சொந்தத் தொழிலிலும் இருக்கும் சாதக, பாதகங்களைப் பார்ப்போம்.

`முதலாளி’ உணர்வு!

சொந்தத் தொழிலில் நீங்கள்தான் முதலாளி. நீங்கள் எடுப்பதுதான் இறுதி முடிவு. அது எப்படிப்பட்ட ஒரு சுதந்திர உணர்வை உங்களுக்குத் தரும் என்பதைச் சொல்லத் தேவையில்லை. ஆனால், ஒரு ஃப்ரான்சைஸ் பெறுவதன் மூலம் நீங்கள் இதுபோன்ற கெளரவத்தைப் பெற முடியாது. ஃப்ரான்சைஸர் உங்களுக்கு விதிக்கும் கட்டுப்பாடுகள் ஃப்ரான்சைஸ் ஒப்பந்தத்தில் விவரிக்கப்படும். அதில் ஃப்ரான்சைஸைப் பெற்ற பிறகு உங்களுக்கிருக்கும் அதிகபட்ச கட்டுப்பாடு; நிறுவனத்தின் பிராண்டை சரியான வகையில் உபயோகிப்பது; நிறுவனத்தின் நற்பெயரைக் காப்பாற்றுவது ஆகியவை குறிப்பிடப்பட்டிருக்கும். உங்கள் அன்றாட நிர்வாகத்தின்மேல் எந்தக் கட்டுப்பாட்டையும் ஃப்ரான்சைஸர் விதிக்கமாட்டார். உங்கள் நிர்வாக எல்லைக்குட்பட்ட பகுதியில், நீங்கள் நியமித்திருக்கும் பணியாள்களுக்கு நீங்கள்தான் முதலாளி.

ஃப்ரான்சைஸ் தொழில் - 8 - சொந்தத் தொழில், ஃப்ரான்சைஸ் - எது பெஸ்ட்?

உடனடி அங்கீகாரம்!

போதுமான முதலீடு உங்களிடம் இருந்தால், நீங்கள் உங்கள் சொந்தத் தொழிலைத் தொடங்கிவிடலாம். ஆனால், ஒரு நற்பெயரையும் நிலையான இடத்தையும் பெற உங்களுக்கு சில ஆண்டுகள் பிடிக்கலாம். இந்த நிலை ஒரு ஃப்ரான்சைஸிங்கில் முற்றிலும் இல்லை. உங்கள் கையிலிருப்பது ஒரு முழுமையான பொருள். அதற்கான விளம்பரம், மதிப்பு, தேவை ஆகிய அனைத்தும் முன்கூட்டியே உருவாக்கப்பட்டுவிட்டன. புதிதாக ஒரு பிசினஸை உருவாக்க நீங்கள் எந்த உழைப்பையும் செலுத்தவில்லை; தேவையுமில்லை. ஃப்ரான்சைஸ் பெறுவதிலிருக்கும் வெளிப்படையான சாதகம் இது.

ஆலோசனைகளும் உதவிகளும்

சொந்தத் தொழில் தொடங்கும் ஒருவருக்குத் தன் தொழிலில் ஏதேனும் குழப்பம் ஏற்பட்டால், அதைத் தெளிவுபடுத்திக் கொள்ள அவருக்குப் போதுமான ஆலோசகர்கள் இருப்பதில்லை. ஆனால், ஒரு ஃப்ரான்சைஸிக்கு தொழில் தொடர்பான சிக்கல்களையும் குழப்பங்களையும் சமாளிக்க ஃப்ரான்சைஸர் நிறுவனம் தேவையான ஆலோசனை வழங்கும்.

ஃப்ரான்சைஸ் பிசினஸில் எப்போதும் நீங்கள் நிறுவனத்தின் கண்காணிப்பில் இயங்கும் நிலைதான் இருக்கும்.

வாடிக்கையாளர்களின் நம்பிக்கை

ஒரு ஃப்ரான்சைஸிங்கில் உங்கள் வணிகம் முதல் நாளிலிருந்தே தொடங்கிவிடும். சொந்தமாகத் தொழில் தொடங்கும்போது நமக்கான வாடிக்கையாளகளின் நம்பிக்கையை உடனடியாகப் பெற்றுவிட முடியாது. அதற்கான மார்க்கெட்டிங் உத்திகள் அனைத்தையும் நீங்களே மேற்கொள்ள வேண்டும். அதன் பிறகுதான் உங்களுக்கான ஒரு வாடிக்கையாளர் வட்டம் உருவாகும். ஆனால், ஒரு ஃப்ரான்சைஸைப் பொறுத்தவரை, நீங்கள் உரிமம் பெற்றிருக்கும் பொருள் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை முன்னதாகவே பெற்றிருக்கிறது. நீங்கள் தேர்வு செய்திருக்கும் இடம் வணிகச் சூழலைக் கொண்டிருந்தால், உங்கள் வணிகம் முதல் நாளிலிருந்தே தொடங்கிவிடும். அதைத் தக்கவைத்துக்கொள்வது மட்டுமே உங்கள் வேலை.

ஃப்ரான்சைஸ் தொழில்
ஃப்ரான்சைஸ் தொழில்

நிதி வசதிகள்

சொந்தமாகத் தொழில் தொடங்க, பெரிய அளவில் முதலீடு தேவை. அந்த முதலீட்டுத் தொகையை வங்கிகளில் கடனாகப் பெறுவது அவ்வளவு எளிதானதல்ல. விண்ணப்பதாரர் பல வகை ஆவணங்களைச் சமர்பிக்க வேண்டி வரும். ஆனால், ஃப்ரான்சைஸிங்கில் இந்த வழிமுறைகள் எளிதாக அமைந்துவிடும். ஒரு நிறுவனத்துடன் ஃப்ரான்சைஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நீங்கள் அந்த வங்கியின் அங்கீகாரத்தைப் பெறுகிறீர்கள். அதன் மூலம் உங்களுக்கான முதலீட்டைக் கடனாகப் பெறுவது சொந்தத் தொழிலைத் தொடங்குவதைவிட எளிதாகச் சாத்தியமாகக்கூடியது.

சொந்தமாகத் தொழில் தொடங்க, பெரிய அளவில் முதலீடு தேவை. அந்த முதலீட்டுத் தொகையை வங்கிகளில் கடனாகப் பெறுவது எளிதானதல்ல. விண்ணப்பதாரர் பல வகை ஆவணங்களைச் சமர்பிக்க வேண்டி வரும்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பயிற்சி உதவிகள்

நீங்கள் ஒரு தொழிலை சொந்தமாகத் தொடங்கும் அளவுக்குத் திறமையானவராக இருக்கலாம். அது உங்கள் தனிப்பட்ட நம்பிக்கை சார்ந்தது. ஆனால், நடைமுறையிலிருக்கும் வணிகரீதியான சில விஷயங்களில் உங்கள் நம்பிக்கை மட்டும் போதுமானதாக இருக்காது. ஒரு சிறிய உணவகத்தையோ, ஏன்... ஒரு காபி ஷாப்பைத் தொடங்குவதாக இருந்தாலும் அதற்குத் தேவையான இட வசதி என்ன, உபகரணங்களின் பயன், தேவையான பணியாள்கள் போன்ற பல முடிவுகளை நீங்கள் எடுக்க வேண்யிருக்கும்.

ஃப்ரான்சைஸ் தொழில் - 8 - சொந்தத் தொழில், ஃப்ரான்சைஸ் - எது பெஸ்ட்?

சொந்தமாகத் தொழில் தொடங்கும் ஒருவர், இவற்றையெல்லாம் முறையான ஒரு புரோக்கர் ஒருவரைவைத்து செய்ய வேண்டியிருக்கும். அப்படி இல்லாதபட்சத்தில் சில சோதனை முயற்சிகளை மேற்கொண்டுதான் இவற்றைப் புரிந்துகொள்ள முடியும். அதனால் பணமும் நேரமும் விரயமாகும்.

ஆனால், ஒரு ஃப்ரான்சைஸில் இந்த எல்லா வசதிகளுக்குமான குறிப்பிட்ட செலவு மற்றும் தேவையான இடம், உள்கட்டமைப்பு, உபகரணங்கள், பணியாள்களின் தேவை ஆகிய அனைத்தைப் பற்றியும் நிறுவனம் உங்களுக்கு ஆலோசனை தரும். நிர்வாகத்தைக் கையாள்வது, பணியாள்களைக் கையாள்வது என உங்களுக்கு அனுபவம் இல்லாத விஷயங்களைப் பற்றிய பயிற்சிகளையும் ஃப்ரான்சைஸிங் நிறுவனம் வழங்கும்.

மேலும், ஒரே பொருளுக்கான ஃப்ரான்சைஸ் உரிமத்தைப் பெற்றிருக்கும் நீங்கள் உங்களுக்கான சரக்குகளைப் பெறுவதில் சில சலுகைகளை எதிர்ப்பார்க்கலாம். இது சொந்தத் தொழில் செய்பவருக்குக் கிடைக்க வாய்ப்பில்லை. இதனால் ஒரு ஃப்ரான்சைஸிக்கு இது ஒரு பெரும் தொகையை மிச்சப்படுத்தலாம்.

ஃப்ரான்சைஸ் தொழில் - 8 - சொந்தத் தொழில், ஃப்ரான்சைஸ் - எது பெஸ்ட்?

கட்டுப்பாடுகள் அதிகம்!

இப்படியெல்லாம் சொல்வதன் மூலம் ஃப்ரான்சைஸ் தொழில் முறையில் எந்தப் பாதகமும் இல்லை என்று சொல்லிவிட முடியாது. இதில் குறைகளும் இருக்கின்றன. உதாரணமாக, ஒரு ஃப்ரான்சைஸ் அமைப்பு முற்றிலும் திட்டவட்டமாகத் தீர்மானிக்கப்பட்டது. இதில் ஃப்ரான்சைஸி பெரிய அளவில் கிரியேட்டிவ்வாக எதையும் செய்ய முடியாது.

ஃப்ரான்சைஸில் நீங்கள் நிறுவனத்தின் கண்காணிப்பில் இயங்கும் நிலைதான் இருக்கும். உங்கள் வருமானம், செலவு ஆகிய அனைத்தையும் முறையாக நீங்கள் நிறுவனத்தின் கவனத்துக்குக் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும். தவிர, உங்களுக்கு லாபம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நீங்கள் ஒவ்வொரு மாதமும் செலுத்த வேண்டிய உரிமக் கட்டணத்தைச் செலுத்தியாக வேண்டும்.

ஃப்ரான்சைஸ் தொழிலோ, சொந்தத் தொழிலோ இரண்டுக்கும் இடையில் நாம் பல நன்மைகளையும் குறைகளையும் சுட்டிக் காட்டலாம். ஃப்ரான்சைசில் உள்ள குறைகளை மாற்றியமைக்கும் சாத்தியங்களும் இருக்கின்றன. இதிலுள்ள சாதகமான அம்சங்களைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டால், நிச்சயம் நம்மால் ஜெயிக்க முடியும்!

(ஜெயிப்போம்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு