Published:Updated:

சேமிப்பு மட்டுமே உங்களை நிமிர்ந்து நடக்கச் செய்யும்! - இது அனைவருக்குமான பாடம்!

SAVING

பிரீமியம் ஸ்டோரி
ங்களுடைய சேமிப்பானது நீங்கள் நிற்கும் தோரணை, உங்கள் நடை, உங்கள் பேச்சு என்ற மூன்றையும் வலுப் படுத்த வல்லது. மேலும், உங்கள் உடல்நலம் மற்றும் தன்னம்பிக்கை என்கிற இரண்டுக்கும் வலுசேர்க்கும்.

சேமிப்பு இல்லாத மனிதன் எப்போதும் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். வாழ்க்கையை ஏதோ ஒரு பதற்றத்துடனேயே எதிர்கொள்ள வேண்டியிருக்கும். சின்னதாக ஓர் அவசர நெருக்கடி வந்தால்கூட அடுத்தவர் உதவியை எதிர்பார்க்க வேண்டியிருக்கும். சேமிப்பு இல்லாத மனிதன் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்க வேண்டியிருக்கும்.

ஆனால், சேமிப்பை வைத்திருக்கும் மனிதனால் தலைநிமிர்ந்து நடக்க முடியும். அவருக்குக் கிடைக்கும் தொழில்/வேலைவாய்ப்புகளை நிதானமாகச் சிந்தித்து, தேவையானதை மட்டும் தேர்வு செய்யும் நிலையில் இருப்பார். சேமிப்பை வைத்திருக்கும் மனிதனால் அவருடைய கொள்கைக்கு ஏற்றாற்போல் இல்லாத வேலையை உதறித்தள்ள முடியும். எந்தவொரு மனிதரால் வேலையை உதறித்தள்ள முடியுமோ, அவரால் மட்டுமே ஒரு நிறுவனத்துக்கு சிறந்த பங்களிப்பை அளிக்க முடியும். அவரால் மட்டுமே வேலையில் சிறந்த முடிவுகளை எடுத்து நிறுவனத்துக்கு உதவும் வகையில் நடந்துகொள்ள முடியும். அவருக்கே பதவி உயர்வுகள் கிடைக்கும் நிலை உருவாகும்.

சேமிப்பு
சேமிப்பு

வாடகை, உணவு போன்ற அத்தியாவசியச் செலவுகள் குறித்து சதாசர்வ காலமும் சிந்தித்துக் கொண்டிருக்கும் மனிதனால் தன்னுடைய பணியின் (career) எதிர்காலப் போக்கு குறித்து நீண்ட கால அடிப்படையில் சிந்திக்க முடியாது. அவரைப் பொறுத்தவரை, அடுத்த மாதம் எங்காவது அதிக பணம் கிடைக்கும் என்றால், அந்த வேலைக்குத் தாவ வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கும். அவருடைய வாழ்நாள் முழுவதுமே இது போன்ற மாற்றங்களும் ஏமாற்றங்களுமே நிறைந்திருக்கும்.

சேமிப்பை செய்துவரும் மனிதனால் தன்னுடைய உறவினர் மற்றும் அக்கம்பக்கத்தினர் ஏதாவது அவசர நெருக்கடி நிலைக்கு ஆளாகும் போது பெருந்தன்மையுடன் உதவ முடியும். நண்பனோ, அறிமுகம் இல்லாத நபரோ யாராக இருந்தாலுமே அவனால் அவர்களை நேருக்குநேர் கண்ணைப் பார்த்து பேசும் தைரியும் இருக்கும். அதுவே மிகச் சிறந்த ஆளுமையையும் குணத்தையும் அவருக்குத் தரும்.

எந்த அளவு சம்பாதிக்கிறோம் என்பதற்கும் சேமிப்புக்கும் சம்பந்தமேயில்லை. மிகப்பெரும் சம்பாத்தியம் கொண்டிருப்பவர்கள் கூட சேமிக்கும் குணம் இல்லாததால் தொடர்ந்து ஓடிக்கொண்டேயிருக்கும் நிலையில் இருந்துவருகின்றனர்.

வீண்விரயம் செய்யும் செலவு களைத் தவிர்த்தீர்கள் என்றால், உங்கள் வாழ்க்கையில் நெருக்கடி என்பதை ஒட்டுமொத்தமாகத் தவிர்க்கலாம் என்று அமெரிக்க வங்கிகளின் பிதாமகரான ஜே.பி.மார்கன் சொன்னார்.

வில் ரோஜர்ஸ் என்ற அமெரிக்க நடிகர் ஒருபடி மேலே போய், ‘‘நாளைய வருமானத்தை எதிர்பார்த்து இன்றைக்குச் செலவு செய்யும் நடிகரிடம் நட்பு பாராட்டுவதைவிட நேற்றைய சம்பாத்தியத்தில் செய்த சேமிப்பில் இன்றைக்கு வாழும் காவலாளியுடன் நட்பாக இருப்பதை நான் விரும்புகிறேன்’’ என்றார்.

‘‘என் வாழ்க்கையில் சேமிப்பு என்ற விஷயத்துக்கு எந்தத் தேவையும் இல்லை’’ என்று சொல்லும் நிலையில் இருந்தால்கூட, உங்களின் தன்னம்பிக் கையை அதிகப்படுத்த தொடர்ந்து சேமியுங்கள்.

1960-களில் அமெரிக்காவில் ஃபர்ஸ்ட் பெடரல் சேவிங்ஸ் அண்ட் லோன் அசோசியேஷன் எனும் நிறுவனம் (இன்றைய ஃபர்ஸ்ட் பெடரல் சேவிங்ஸ் பேங்க்) வெளியிட்ட விளம்பரத்தில் சேமிப்பின் அவசியம் குறித்து இத்தனை அழகாக விளக்கப்பட்டு இருக்கிறது. 60 ஆண்டுகளுக்கு முன் சொல்லப்பட்ட விஷயம் இன்றும் 100% பொருந்தி வருவது எவ்வளவு ஆச்சர்யம்!

- நாணயம் விகடன் டீம்

பிட்ஸ்

டந்த நவம்பர் மாதத்தில் ஜி.எஸ்.டி வரி ரூ.1.05 லட்சம் கோடி வசூலாகி இருக்கிறது.

கொரோனா காலத்துக்குப் பின் ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் ஜி.எஸ்.டி வரி வசூலாவது இரண்டாவது முறை ஆகும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு