Published:Updated:

பாசிவ் ஃபண்ட், ஆக்டிவ் ஃபண்ட்... சிறு முதலீட்டாளர்களுக்கு ஏற்றதா?

ஆதித்ய பிர்லா சன் லைஃப் ஏ.எம்.சி ஏ.பாலசுப்பிரமணியன் சிறப்புப் பேட்டி

பிரீமியம் ஸ்டோரி

SPL INTERVIEW

மியூச்சுவல் ஃபண்ட் துறையில் கால் நூற்றாண்டுக்கு மேல் அனுபவம் கொண்டவரும், இந்திய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் கூட்டமைப்பான ஆஃம்பியின் சேர்மனாக இருந்தவரும், ஆதித்ய பிர்லா சன் லைஃப் ஏ.எம்.சி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் முதன்மைச் செயல் அதிகாரியுமான ஏ.பாலசுப்பிர மணியன் நாணயம் விகடன் இதழுக்கு சிறப்புப் பேட்டி அளித்தார்.

இந்தியப் பங்குச் சந்தை தொடர்ந்து புதிய உச்சங்களைத் தொட்டு வருகிறது. இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

“சந்தைக்குள் லிக்விடிட்டி சிறப்பாக இருப்பதால் இப்போதைக்கு இறங்க வாய்ப்பு இல்லை. அப்படியே இறங்கினாலும் அதிகமாக இறங்காது. மேலும், கார்ப்பரேட் நிறுவனங்களின் வருவாய் அதிகரிப்பு நம்பிக்கை அளிப்பதாக உள்ளது. மேலும், ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் வெளிநாட்டு முதலீடுகள் இந்தியப் பங்குச் சந்தைக்குள் வரும் என்பதால் சந்தையில் பெரிய கரெக்‌ஷன் இருக்காது.”

ஏ.பாலசுப்பிரமணியன்
ஏ.பாலசுப்பிரமணியன்

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுக்காக ஒரு பங்கைத் தேர்வு செய்யும்போது, நீங்கள் என்ன மாதிரியான விஷயங்களைக் கவனிப்பீர்கள்?

“முதலில் நிறுவனத்தின் அடிப் படையை (ஃபண்டமென்டல்) கவனிப்போம். அதன் பிறகு நிறுவனத்தின் வளர்ச்சி, நிர்வாகம், தொழில்நுட்பத்தில் எந்த அளவுக்கு வலிமையாக இருக்கிறது என்பதைக் கவனித்து முதலீட்டுக்குத் தேவையான பங்குகளைத் தேர்வு செய்வோம்.”

ஒரு பங்கிலிருந்து எப்போது வெளியேறுவீர்கள்?

“பொதுவாக, ஒரு பங்கின் மதிப்பீடு அதிகமாக இருக்கும்போது, அந்தப் பங்கில் ஒரு பகுதியை விற்று லாபம் (பார்ட் பிராஃபிட் புக்கிங்) பார்ப்போம். அப்போது அந்தப் பங்கை விற்று வேறு ஒரு நல்ல பங்கில் முதலீடு செய்யும் வாய்ப்பு இருந்தால் மட்டுமே பகுதி லாபத்தை வெளியில் எடுப்போம். மேலும், ஒரு நிறுவனத்தின் நிர்வாகம் சரியில்லை என்றாலும், வருவாய் மற்றும் லாபம் தொடர்ந்து குறைந்து கொண்டே வந்தாலும் அந்த நிறுவனப் பங்கிலிருந்து வெளியேறி விடுவோம்.”

அண்மைக் காலத்தில் நீங்கள் கற்றுக் கொண்ட முக்கிய முதலீட்டுப் பாடம் எது என்று சொல்ல முடியுமா?

“கொரோனா பாதிப்பால் இந்தியப் பங்குச் சந்தை மார்ச் மாதத்தில் தொடர் இறக்கத்தைச் சந்தித்தது. கொரோனா பரவல் எவ்வளவு நாள்களுக்கு நீடிக்கும். ஊரடங்கு எப்போது முழுமையாக விலக்கிக் கொள்ளபடும் என்று தெரியாத நிலையில் பங்குச் சந்தை முதலீட்டாளர்களில் பெரும்பாலோர் அதிக பயத்துடன் காணப்பட்டார்கள். அப்போது, அடிப்படையில் வலுவான நல்ல நிறுவனப் பங்குகள் அடிமாட்டு விலைக்கு கிடைத்தன. அப்போது அந்தப் பங்குகளை வாங்கும் முடிவை துணிச்சலாக எடுத்தவர்கள் இப்போது நல்ல லாபத்தில் இருக்கிறார்கள்.

இந்தியப் பங்குச் சந்தையைப் பொறுத்தவரையில் இதுபோன்ற நிலை அடிக்கடி வந்திருக்கிறது, வரும். முதலீட்டாளர்கள் இதைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்வது புத்திசாலித்தனமாகும்.”

தற்போதைய சூழ்நிலையில் முதலீட்டுக்கான வாய்ப்புகள் எங்கே இருக்கிறது என நீங்கள் நினைக்கிறீர்கள்?

“வங்கி மற்றும் நிதிச் சேவை, டிஜிட்டல், தகவல் தொழில்நுட்பம், ரியல் எஸ்டேட், சிமென்ட் துறை போன்றவற்றைக் குறிப்பிடலாம். இந்தத் துறை சார்ந்த நிறுவனப் பங்குகள், ஈக்விட்டி ஃபண்டுகள் ஆகியவற்றில் முதலீடு செய்யலாம். செக்டார் ஃபண்டுகள் என்கிறபோது அவை அதிக ரிஸ்க் கொண்டவை என்பதால், மொத்த முதலீட்டில் செக்டார் ஃபண்டுகளில் செய்யப்படும் தொகை 10-15 சதவிகிதத்துக்கு மேல் செல்லக் கூடாது.”

பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகளில் மொத்த முதலீட்டைவிட எஸ்.ஐ.பி முதலீடு ஏன் சிறந்த சாய்ஸாக இருக்கிறது?

“நிறுவனப் பங்குகள், ஈக்விட்டி ஃபண்டுகள் ஆகியவற்றில் மொத்தமாக முதலீடு செய்யும்போது நேரம் காலம் பார்த்து முதலீடு செய்ய வேண்டும். சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (எஸ்.ஐ.பி) முறையில் அப்படி நேரம் காலம் பார்க்கத் தேவையில்லை. ஈக்விட்டி ஃபண்டுகளில் 10, 15 ஆண்டுகள் தொடர்ந்து முதலீடு செய்து வரும்போது, சந்தையின் ஏற்றம் மற்றும் இறக்கச் சுழற்சிகளை அந்த முதலீடு சந்தித்திருக்கும் என்பதால் நல்ல வருமானத்தைத் தருவதாக இருக்கும். அதாவது, ரூபி காஸ்ட் ஆவரேஜ்படி சராசரியாகக் குறைவான விலையில் யூனிட்களை வாங்கும் வாய்ப்பு கிடைத்திருக்கும். பிராவிடெண்ட் ஃபண்ட், பப்ளிக் பிராவிடன்ட் ஃபண்ட் போல் தொடர்ந்து இடையில் விடாமல் ஈக்விட்டி ஃபண்டுகளில் முதலீடு செய்யும்பட்சத்தில் ஒருவரின் நிதி இலக்குகள் எல்லாம் சரியாக நிறைவேறும். மேலும், ஒருவர் வீட்டுக் கடன் 8 சதவிகித வட்டியில் வாங்கியிருக்கும் பட்சத்தில், அவர் 10, 15 ஆண்டு களுக்கு எஸ்.ஐ.பி முறையில் ஒரு குறிப்பிட்டத் தொகையை ஈக்விட்டி ஃபண்டுகளில் முதலீடு செய்து வரும்பட்சத்தில் அவருக்கு நீண்ட காலத்தில் 12% முதல் 15% வருமானம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. இந்தத் தொகையைக் கொண்டு அவர் வீட்டுக் கடனை சுலபமாக அடைத்துவிட்டு அதிலிருந்து வெளியே வந்து விடலாம். கொரோனாவால் பங்குச் சந்தை கடுமையாக இறக்கத்தைச் சந்தித்தபோது எஸ்.ஐ.பி முதலீட்டை நிறுத்தாதவர்கள் இப்போது நல்ல ஆதாயத்தில் இருக்கிறார்கள்.”

ஏ.பாலசுப்பிரமணியன்
ஏ.பாலசுப்பிரமணியன்

பாசிவ் ஃபண்ட், ஆக்டிவ் ஃபண்டு கள் இவற்றில் சிறுமுதலீட்டாளர் களுக்கு சிறந்தது எது?

“பாசிவ் ஃபண்டுகள் என்பவை நிஃப்டி, சென்செக்ஸ் போன்ற ஏதாவது ஒரு பங்குச் சந்தை குறியீட்டை அடிப்படையாகக் கொண்டு அதில் இடம் பெற்றுள்ள பங்குகளின் விகிதாசாரத்துக்கு ஏற்ப முதலீடு செய்யும் மியூச்சுவல் ஃபண்டுகள் ஆகும். இவற்றின் மூலம் கிடைக்கும் வருமானம் கிட்டத்தட்ட பங்குச் சந்தையின் வருமானத்தைப் பிரதிபலிப்பதாக இருக்கும்.

ஒருவரின் மொத்த முதலீட்டுக் கலவையில் சுமார் 10% முதல் 15% பாசிவ் ஃபண்டுகள் இருக்கலாம். ஆனால், பாசிவ் ஃபண்டுகள் மூலம் அதிக வருமானத்தை எதிர்பார்க்க முடியாது. ஒருவரின் முதலீட்டுக் கலவை நல்ல வருமானத்தைக் கொடுக்க வேண்டுமெனில் ஆக்டிவ் ஃபண்டுகளைத் தவிர்க்கக் கூடாது.

2020-ம் ஆண்டில் லார்ஜ்கேப் பங்குகள் இடம் பெற்றிருக்கும் சென்செக்ஸ் சுமார் 15 சதவிகிதம் தான் அதிகரித்திருக்கிறது. அதேநேரத்தில் மிட் அண்ட் ஸ்மால் இண்டெக்ஸ்கள் 30% முதல் 35% வரை ஏற்றம் கண்டிருக் கின்றன. பொதுவாக, நிஃப்டி, சென்செக்ஸ் குறியீடுகள் என்கிறபோது அதில் இடம் பெற்றுள்ள பங்குகளில் 4 அல்லது 5 பங்குகளின் விலைதான் அதிக ஏற்றம் அடைகிறது. அந்தப் பங்குகளின் விலை மிகவும் அதிகரித்துவிட்ட நிலையில் அந்தப் பங்குகளை வாங்க ஆள் இருக்க மாட்டார்கள். அப்போது இண்டெக்ஸ் வருமானம் குறையும். கூடவே, அது சார்ந்த பாசிவ் ஃபண்டுகளின் வருமானமும் குறையும். அதே நேரத்தில், ஆக்டிவ் ஃபண்டுகள் என்கிறபோது ஃபண்ட் மேனேஜர் சூழ்நிலைக்கு ஏற்ற லாபம் தரும் பங்குகளை வாங்கி, விற்று முதலீட்டாளருக்கு அதிக வருமானத்தைக் கொடுக்க முயற்சி செய்வார்.’’

சிறு முதலீட்டாளர்கள் அவசியம் செய்ய வேண்டிய விஷயங்கள் எவை?

“ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் இறக்கத்தால் ஃபண்டுகளின் என்.ஏ.வி மதிப்பில் ஏற்படும் இறக்கத்தைக் கண்டு கவலைப்படாமல் தொடர்ந்து எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்து வர வேண்டும். மேலும், அஸெட் அலொகேஷன் முறையில் முதலீடுகளை கடன் சந்தை சார்ந்த திட்டங்கள் (ஃபிக்ஸட் டெபாசிட், கடன் ஃபண்டுகள்), பங்குச் சந்தை சார்ந்த திட்டங்கள் (நிறுவனப் பங்குகள், ஈக்விட்டி ஃபண்டுகள்), தங்கம், ரியல் எஸ்டேட் போன்றவற்றில் பிரித்து முதலீடு செய்ய வேண்டும். மியூச்சுவல் ஃபண்ட், ஈக்விட்டி ஃபண்ட் என்கிறபோது லார்ஜ் கேப், மிட்கேப், ஸ்மால்கேப் ஃபண்டுகளில் பிரித்து முதலீடு செய்ய வேண்டும். இப்படிச் செய்வதன் மூலம் நீண்ட காலத்தில் ரிஸ்க்கைக் குறைப்ப தோடு, நல்ல வருமானத்தையும் பெற முடியும்.”

புதிதாக முதலீடு செய்பவர்களுக்கு ஏற்ற ஃபண்டுகள் எவை?

“மியூச்சுவல் ஃபண்டுகளில் முதன் முதலாக முதலீடு செய்பவர்கள் அதிக ரிஸ்க் இல்லாத கடன் ஃபண்டுகள், ஹைபிரிட் ஃபண்டுகள், அஸெட் அலொகேஷன் ஃபண்டுகளில் முதலீட்டை ஆரம்பிக்க வேண்டும். மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் ஓரளவுக்கு அனுபவம் பெற்ற பிறகு, ஈக்விட்டி ஃபண்டுகளில் முதலீட்டை ஆரம்பிக்கலாம். வருமான வரியைச் சேமிக்க வேண்டும் என்ற நிலையில் யாராக இருந்தாலும் ஈக்விட்டி லிங்க் சேவிங்ஸ் ஸ்கீம் எனப்படும் இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டுகளில் முதலீடு செய்து வரலாம்."

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு