Published:Updated:

இலக்குகளை அடைய கைகொடுக்கும் எஸ்.ஐ.பி முதலீடு! - சந்தேகங்களும் தீர்வுகளும்

எஸ்.ஐ.பி முதலீடு
பிரீமியம் ஸ்டோரி
News
எஸ்.ஐ.பி முதலீடு

கேளுங்கள், பதில் கிடைக்கும்!

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டு முறையான `சீரான முதலீட்டுத் திட்டம்’ (Systematic Investment Plan-SIP) என்பது, `முதலீட்டாளர்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதம்’ என்றுதான் சொல்ல வேண்டும்.

மிகக் குறைந்த தொகை என்றாலும், அதை மாதந்தோறும் தவறாமல் நீண்டகாலத்துக்குக் கட்டும்போது, சிறு துளி பெருவெள்ளமாக மாறி நிற்கிறது. குழந்தைகளின் படிப்பாக இருக்கட்டும்... அவர்களின் திருமணச் செலவுக்கான பணத்தைச் சேர்ப்பதாக இருக்கட்டும்... ஓய்வுக்கால நிதித் தேவையைப் பூர்த்தி செய்துகொள்வதற்காக இருக்கட்டும் எஸ்.ஐ.பி மூலம் பணம் சேர்ப்பதே மிகச்சிறந்த வழியாக இருக்கும் என்பதை அனுபவம்மிக்க முதலீட்டாளர்கள் நன்கு உணர்ந்திருக்கின்றனர்.

முதலீடு
முதலீடு

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஆனால், இன்றைக்கும் நம் மக்களில் பலர் எஸ்.ஐ.பி மூலம் முதலீடு செய்யத் தயக்கம் காட்டவே செய்கின்றனர். கடந்த சில மாதங்களாக பங்குச் சந்தை இறக்கத்தில் இருப்பதால், எஸ்.ஐ.பி மூலம் கிடைக்கும் வருமானம் கொஞ்சம் குறைந்திருப்பதை மறுக்க முடியாது. ஆனால், நீண்டகாலத்தில் இந்த இறக்கம் சரியாகி, மீண்டும் லாபம் கிடைக்கும் என்பதை உணர்ந்துவிட்டால் எஸ்.ஐ.பிமீது எல்லோருக்கும் நம்பிக்கை உண்டாகும் என்பதே நிஜம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இந்த நிலையில், எஸ்.ஐ.பி குறித்த நாணயம் விகடன் வாசகர்களின் பலவிதமான கேள்விகள், சந்தேகங்களுக்கு நிதி ஆலோசகர் த.முத்துகிருஷ்ணன் (wisewealthadvisors.com) பதில் அளித்திருக்கிறார்.

எஸ்.ஐ.பி முதலீடு
எஸ்.ஐ.பி முதலீடு

எஸ்.ஐ.பி முதலீட்டின் மூலம் நமது இலக்குத் தொகையை அடையும்போது, சந்தை காளையின் பிடியில் இருந்தால் வெளியேறிவிடலாமா... ஆலோசனை கூறவும்.

- சாருமதி, இ-மெயில் மூலம்

“பங்குச் சந்தை ஏற்றத்திலிருக்கும்போது உங்கள் இலக்குக்கான தொகுப்பு நிதியை நீங்கள் அடைந்துவிட்டால், அந்த முதலீட்டிலிருந்து வெளியேற அதுவே சிறந்த நேரம். பொதுவாக, உங்கள் இலக்குத் தொகையை அடைவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் படிப்படியாக முதலீட்டைத் திரும்பப் பெறத் தொடங்குவது நல்லது.”

என் வயது 31. நான் கடந்த ஓராண்டாக எஸ்.ஐ.பி முறையில் மாதம் ரூ.15,000 முதலீடு செய்துவருகிறேன். `ஒரு ஃபண்ட், ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் சரியாகச் செயல்படவில்லையென்றால், அந்த ஃபண்டைவிட்டு வெளியேற வேண்டும்’ என்று முதலீட்டு ஆலோசகர்கள் கூறுகிறார்கள். என் சந்தேகம் என்னவெனில், நான் எஸ்.ஐ.பி முறையில் தொடர்ந்து முதலீடு செய்துவரும் ஏதாவது ஒரு ஃபண்ட் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு சரியாகச் செயல்படவில்லையென்றால், அந்த ஃபண்டிலிருந்து வெளியேறி வேறொரு ஃபண்டில் முதலீடு செய்ய வேண்டுமா அல்லது எஸ்.ஐ.பி–யை நிறுத்திவிட்டு அதற்கு இணையான வேறொரு ஃபண்டில் முதலீடு செய்ய வேண்டுமா?

- கு.ஆல்பர்ட், விழுப்புரம்.

“தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக ஒரு ஃபண்டின் செயல்திறன் சரியாக இல்லையென்றால், அதிலிருந்து வெளியேறிவிடலாம். அதன் பிறகு புதிய ஃபண்டில் எஸ்.ஐ.பி முறையில் முதலீட்டைத் தொடரலாம்.”

 த.முத்துகிருஷ்ணன்
த.முத்துகிருஷ்ணன்

மியூச்சுவல் ஃபண்ட் எஸ்.ஐ.பி முதலீட்டுடன் இலவச ஆயுள் காப்பீட்டையும் சேர்த்து எடுத்துக் கொள்ளலாமா? தக்க ஆலோசனை கூறவும்

- ஹரீஷ் நாராயண், மெயில் மூலமாக

“ஒருபோதும் காப்பீடு மற்றும் முதலீட்டைக் கலக்காதீர்கள். ஆயுள் காப்பீட்டுக்கு எளிய டேர்ம் பிளான் போதுமானது. வழக்கமான மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது நல்லது. அப்படிச் செய்யும்போது, நீங்கள் ஒரு ஃபண்டிலிருந்து வெளியேறுவது அல்லது முதலீட்டை வேறு ஃபண்டுக்கு மாற்றும்போது உங்களின் ஆயுள் காப்பீட்டுத் தேவையில் எந்த பாதிப்பும் ஏற்படாது.”

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஒரு மியூச்சுவல் ஃபண்ட் மிகச் சிறப்பாக செயல்படும்போது, அதன் யூனிட்டுகளை விற்று, லாபத்தை வெளியே எடுத்து வேறு மியூச்சுவல் ஃபண்ட்டில் முதலீடு செய்யலாமா... அல்லது அப்படியே விட்டுவிடலாமா... நீண்டகால இலக்குக்கு எது சிறந்தது?

- ரவீந்திரன், கோயம்புத்தூர்

“முதலீட்டுத் தொகைக்கான இலக்கை எட்டிய பின்னரே அதன் யூனிட்டுகளை விற்றுப் பணமாக்க வேண்டும். மியூச்சுவல் ஃபண்டுகளில் லாபத்தை வெளியே எடுத்துவிடும் (Profit Booking) பழக்கம் இல்லை.”

முதலீடு
முதலீடு

என் பிறந்த தேதி 14. அந்தத் தேதியை எஸ்.ஐ.பி தேதியாக வைத்துக்கொள்ள முடியுமா?

- ஆர்.கலாவதி, திருவாரூர்.

“நீங்கள் பிறந்த தேதியான 14-ம் தேதியை தாராளமாக எஸ்.ஐ.பி தேதியாக வைத்துக்கொள்ள முடியும். ஒருவர் மாதத்தின் எந்தத் தேதியை வேண்டுமானாலும் எஸ்.ஐ.பி தேதியாகத் தேர்ந்தெடுக்கலாம்.”

நான் இ.எல்.எஸ்.எஸ் ஃபண்ட் ஒன்றில் கடந்த ஐந்தாண்டுகளாக எஸ்.ஐ.பி முறையில் மாதம் ரூ.5,000 முதலீடு செய்துவருகிறேன். இந்த ஃபண்டின் லாக் இன் காலம் முடிந்த பிறகு மீண்டும் இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டில் முதலீடு செய்து வரிச் சலுகை பெற முடியுமா?

- ஜான் பீட்டர், செல்லூர், மதுரை

“நிச்சயமாகச் செய்யலாம். அதேநேரத்தில், மறுமுதலீடு செய்து மீண்டும் வரிச் சலுகை பெறுவதற்கு பதிலாக, கூடுதல் செல்வம் சேர்ப்பதற்கு வசதியாகப் புதிதாக முதலீடு செய்வது மிகச் சிறப்பானது.”

மாதந்தோறும் தங்க நகைக்கான சீட்டுக் கட்டுவது போல் மியூச்சுவல் ஃபண்டில் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்து, தங்கத்தின் விலை உயர்வால் லாபம் பார்ப்பதுபோல் ஃபண்ட் ஏதாவது இருக்கிறதா?

- ச.பிரியா, சென்னை–15

“இருக்கிறது. மியூச்சுவல் ஃபண்டுகள் எஸ்.ஐ.பி முறை மூலம் தங்கத்தில் முதலீடு செய்ய வாய்ப்பை அளிக்கின்றன. இந்த வாய்ப்பை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். இதற்கென இருக்கும் கோல்டு சேவிங்ஸ் ஃபண்டுகளில் முதலீடு செய்ய ஆரம்பிக்கலாம்.’’

நான் ஃபண்ட் ஒன்றில் எஸ்.ஐ.பி முறையில் மாதம் ரூ.15,000 முதலீடு செய்துவருகிறேன். கொரோனா பாதிப்பால் சம்பளம், வருமானம் குறைந்திருந்திருக்கிறது. இந்த எஸ்.ஐ.பி தொகையை ரூ.10,000-ஆகக் குறைக்க முடியுமா?

- பாலசுப்ரமணி, கொரட்டூர், சென்னை

“அதே எஸ்.ஐ.பி-யில் முதலீட்டுத் தொகையைக் குறைக்க முடியாது. அதற்குப் பதில், தற்போதைய ரூ.15,000 எஸ்.ஐ.பி முதலீட்டை நிறுத்த வேண்டும். அதன் பிறகு ரூ. 10,000-க்கு புதிய எஸ்.ஐ.பி முதலீட்டை ஆரம்பிக்க வேண்டும்.”

எஸ்.ஐ.பி முதலீட்டு முறை ஈக்விட்டி ஃபண்ட், ஹைபிரிட் ஃபண்ட், டெப்ட் ஃபண்ட் - இவற்றில் எது பெஸ்ட் என்று சொல்லுங்கள்.

- சந்தியா குமார், மூணாறு

“உங்கள் இலக்கை அடையும் காலம் மூன்று ஆண்டுகளுக்கு அதிகமாக இருந்தால் கடன் ஃபண்டுகளிலும், ஆறு ஆண்டுகளுக்கு மேல் இருந்தால் ஈக்விட்டி ஹைபிரிட் ஃபண்டுகளிலும், பத்து ஆண்டுகளுக்கு மேல் இருந்தால் ஈக்விட்டி ஃபண்டுகளிலும் முதலீடு செய்யலாம்.’’

கேளுங்கள், பதில் கிடைக்கும்!

பாகப் பிரிவினை, உயில் குறித்த பலவிதமான கேள்விகளுக்கு சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் கே.அழகுராமன் பதில் அளிக்கிறார்.

இலக்குகளை அடைய கைகொடுக்கும் எஸ்.ஐ.பி முதலீடு! - சந்தேகங்களும் தீர்வுகளும்

உங்கள் கேள்விகளை navdesk@vikatan.com என்ற இ-மெயிலுக்கு அனுப்பி வைக்கலாம்.