Published:Updated:

முதலீட்டு மதிப்பு குறைவு... எல்.ஐ.சி-க்கு தலைவலி தரும் நிறுவனங்கள்!

சிக்கல்

பிரீமியம் ஸ்டோரி

ங்கிசாரா நிதி நிறுவனங்களின் நிதி நெருக்கடிகள் கடந்த ஓராண்டிற்கும் மேலாக இந்திய நிதிச் சந்தைகளில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. ஐ.எல்.எஃப்.எஸ் நிறுவனத்தில் தொடங்கிய இந்த நிதி நெருக்கடிப்புயல் டி.ஹெச்.எஃப்.எல் மற்றும் ரிலையன்ஸ் கேப்பிட்டல், ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் போன்ற இதர நிறுவனங்களையும் புரட்டிப் போட்டுள்ளது.

வி.கோபாலகிருஷ்ணன், Money Avenues
வி.கோபாலகிருஷ்ணன், Money Avenues

முக்கியமாக, இந்த நிதி நெருக்கடியால் கடன் பத்திரச் சந்தை களில் பல நிறுவனங்களின் மீதான நம்பகத்தன்மை முற்றிலும் குறைந்துவருகிறது. அதற்கு முக்கியக் காரணம், க்ரைசில், கேர் போன்ற தர மதிப்பீட்டு நிறுவனங்கள், பல வங்கிசாரா நிதி நிறுவனங்களின் மீதான தர மதிப்பீட்டைக் குறுகிய காலத்தில் அதிரடியாகக் குறைத்ததுதான். இதனால் பல நிறுவனங்களின் தரமதிப்பீடு வீழ்ச்சியடைந்து முதலீட்டாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

நெருக்கடியில் சிக்கியிருக்கும் அந்த நிறுவனங்கள் ஏற்கெனவே கடனாகப் பெற்ற பணத்தைத் திரும்பக் கொடுப்பதில் சிக்கல் ஏற்பட்டது மட்டுமல்லாது, புதிதாகச் சந்தையில் நிதி திரட்ட முடியாத ஓர் இக்கட்டான நிலையும் ஏற்பட்டுள்ளது. இந்தச் சிக்கலில் தவித்துவரும் பல நிறுவனங்கள், புதிதாகக் கடன் கொடுக்கவோ அல்லது கடன் பெறவோ முடியாத சிக்கலில் தவித்துவருகின்றன. முக்கியமாக, டி.ஹெச்.எஃப்.எல் நிறுவனம் கிட்டத்தட்ட மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டு, கடன் கொடுத்த வங்கிகளின் முயற்சியால் பங்குகள் கைமாறி இப்போது இயங்கிக் கொண்டிருக்கிறது.

முதலீட்டு மதிப்பு குறைவு... எல்.ஐ.சி-க்கு தலைவலி தரும் நிறுவனங்கள்!

இந்த நிதி நெருக்கடி காரணமாக ஏற்பட்ட பிரச்னைகளால் மியூச்சுவல் ஃபண்டுகள், இதர பெரிய முதலீட்டு நிறுவனங்கள், பெரிய மற்றும் சிறிய தனிநபர் முதலீட்டாளர்கள் எனப் பல வகை முதலீட்டாளர்களுக்குப் பெரிய பாதிப்புகள் ஏற்பட்டன. நிறுவனங்களும் தனிநபர் முதலீட்டாளர்களும் பல்வேறு கடன் பத்திரத் திட்டங்களில் நேரடியாகவோ அல்லது மியூச்சுவல் ஃபண்டுகள்மூலம் மறைமுகமாகவோ முதலீடு செய்ததால் நஷ்டம் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. உதாரணமாக, பல்வேறு கடன் பத்திர மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களின் என்.ஏ.வி-க்கள் சரிவை சந்தித்து, முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதைச் சொல்லலாம்.

முக்கியமாக, நம் நாட்டில் இயங்கிவரும் மிகப்பெரிய முதலீட்டு நிறுவனங்களில் தலையாய நிறுவனம் எல்.ஐ.சி-தான். கிட்டத்தட்ட ரூ.30 லட்சம் கோடி அளவிலான முதலீட்டு போர்ட்ஃபோலியோவை கொண்ட எல்.ஐ.சி-யும்கூட இந்த நிதி நெருக்கடியிலிருந்து தப்பவில்லை. காரணம், மேலே குறிப்பிட்ட நிறுவனங்களில் எல்.ஐ.சி அதிக பங்கு மூலதனத்தைக் கொண்டிருப்பதுதான். மேலும், எல்.ஐ.சி நிறுவனம்தான் பங்கு மற்றும் கடன் பத்திரச் சந்தைகளில் இந்தியாவின் மிகப்பெரிய முதலீட்டு நிறுவனமாகத் திகழ்கிறது.

மேலும், அந்நிய முதலீட்டு நிறுவனங்களான எஃப்.ஐ.ஐ-க்களால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து காத்து, நமது சந்தைகளுக்கு ஓர் அரணாக இருப்பது எல்.ஐ.சி-தான். இப்போது மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் நல்ல நிலைக்கு வளர்ந்துவிட்டாலும், கடந்த பல வருடங்களாக உள்நாட்டு நிறுவனங்களில் மிகப்பெரிய முதலீட்டு நிறுவனமாகத் திகழ்வது எல்.ஐ.சி மட்டும்தான். இப்படி அதிமுக்கியம் வாய்ந்த எல்.ஐ.சி நிறுவனம், பலதரப்பட்ட தனிநபர் முதலீட்டாளர்களிடம் இன்ஷூரன்ஸ் திட்டங்களின் மூலமாக பெரும் பணத்தை நிதிச் சந்தைகளில் பல்வேறு வழிகளில் அதாவது, பங்குச் சந்தை மற்றும் கடன் பத்திரச் சந்தைமூலமாக வெவ்வேறு கால அடிப்படையில் முதலீடு செய்து வருவதும் வழக்கம்.

முதலீட்டு மதிப்பு குறைவு... எல்.ஐ.சி-க்கு தலைவலி தரும் நிறுவனங்கள்!

பொதுவாக எல்.ஐ.சி-யின் முதலீடுகள், நீண்ட கால அடிப்படையில் இருக்கும் விதமாக முதலீடு செய்வதுதான் வழக்கம். அந்த வகையில் எல்.ஐ.சி, நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ள நிதி நிறுவனங்களில் செய்த முதலீடுகளின் மதிப்பு ரூ.21,500 கோடி அளவிற்குக் குறைந்துள்ளது. ஐ.டி.பி.ஐ பேங்கின் பங்கு மூலதனத்தில் 51 சதவிகிதத்தை எல்.ஐ.சி கொண்டுள்ளது. இந்த வங்கியின் பங்கு விலை வெகுவாகக் குறைந்து, எல்.ஐ.சி-யைச் சிக்கலில் சிக்கவைத்துள்ளது.

சந்தையின் பல ஏற்ற இறக்கங்களையும், நெருக்கடிகளையும் சந்தித்துள்ள எல்.ஐ.சி, பொதுவாகவே முதலீடுகளைத் திறம்பட நிர்வகித்து முதலீட்டாளர்களுக்கு வருமானத்தை வழங்கி வந்துள்ளது. ஆனாலும், தற்போதைய சூழலில், எல்லா முதலீட்டு நிறுவனங்களுக்கும் ஒரு சவாலான காலகட்டம் என்பதால், எல்.ஐ.சி-க்கு ஏற்பட்டுள்ள சிக்கலானது, தனி நிறுவனம் சார்ந்த சிக்கல் என்று கருதமுடியாது.

மேலும் இதுபோன்ற சூழல் அதாவது, கடன் பத்திரச் சந்தையிலும், நிதிச் சந்தைகளிலும் ஏற்பட்டுள்ள நெருக்கடி என்பது நமது நிதிச் சந்தைகளுக்கு ஒரு புதிய, இதுவரை கண்டிராத ஓர் அனுபவமாக உள்ளதால், இந்தச் சிக்கல்களிலிருந்து விடுபட சிறிது காலம் பிடிக்கும்.

மேலும், எல்.ஐ.சி-யைப் பொறுத்தமட்டில், அந்த நிறுவனத்தின் முதலீடுகள் பரந்துபட்ட வகையில் முதலீடு செய்யும்படியாக வடிவமைக்கப்பட்டிருப்ப தால், இதுபோன்ற ரிஸ்க் என்பதும் மிகக் குறைவாகவே இருக்கும். இதுபோன்றதொரு நெருக்கடியான சூழலை எதிர்கொள்ள ஐ.ஆர்.டி.ஏ.ஐ அமைப்பு எந்தவிதமான ஒரு தெளிவான வழிகாட்டுதல் களையும் அமைத்து வைக்காதபட்சத்தில், நிறுவனங்களின் முதலீட்டு நிர்வாக அனுபவம்தான் நிறுவனங்களுக்குக் கைகொடுக்கும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அந்த அடிப்படையில் எல்.ஐ.சி நிறுவனத்திற்கு இதுபோன்ற முதலீட்டு அனுபவம் என்பது நீண்ட நெடிய காலத்திற்கு இருந்துள்ள காரணத்தால் இந்தச் சிக்கல்களிலிருந்து மீண்டுவிடும் என்றும் எதிர்பார்க்கலாம். இப்போது எல்.ஐ.சி-யின் முதலீட்டு மதிப்புகள் குறைந்திருக்கின்றன. எல்.ஐ.சி முதலீடு செய்துள்ள நிறுவனங்களின் தர மதிப்பீடு மட்டும் குறைந்திருக்கும் நிலையில், நிறுவனங்களுக்குப் பெரிய ஆபத்துகள் இல்லாதவரை, எல்.ஐ.சி செய்துள்ள முதலீடுகளுக்கு எந்தச் சிக்கலும் ஏற்படாது.

எல்.ஐ.சி நிறுவனத்தின் முதலீடுகள் உள்ள நிறுவனங்களில் சிக்கல்கள் ஏற்படும்பட்சத்தில், அந்த சிக்கல்களைத் துரிதமாக முடிவுக்கு கொண்டுவர எல்.ஐ.சியின் பங்களிப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

மிகக் குறுகிய காலத்தில் சில நிறுவனங்கள் பெரிய நிதிச் சிக்கலில் மாட்டிக்கொண்டதால், எல்.ஐ.சி மட்டுமல்ல, எல்லா முதலீட்டு நிறுவனங் களுக்கும் சவாலாகவே அமைந்திருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.

ஆனாலும், பல லட்சம் வாடிக்கையாளர்களைக் கொண்ட நிறுவனமாக எல்.ஐ.சி நிறுவனம் திகழ்வதால், அவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு இதுபோன்ற சூழலைத் தவிர்க்கும் விதமாகவும், மேலும் அந்த நிறுவனத்தின் முதலீட்டு கொள்கைகளை பலப்படுத்தும் விதமாகவும் அந்த நிறுவனமும், அரசாங்கமும் முயற்சி எடுக்குமேயானால் அது முதலீட்டாளர்களுக்கும், நிதி சந்தைகளுக்கும் வலுவானதாக அமையும்.

இந்திய நிதிச் சந்தைகளுக்கு எல்.ஐ.சி நிறுவனம் ஒரு முதுகெலும்பாக திகழ்வதால், அதன் முதலீட்டுக்கொள்கைகளைப் பலப்படுத்துவது மிக முக்கியமானதாகும். மேலும், எல்.ஐ.சி நிறுவனத்தின் முதலீடுகள் உள்ள நிறுவனங்களில் சிக்கல்கள் ஏற்படும்பட்சத்தில், அந்த நிறுவனங் களின் சிக்கல்களைத் துரிதமாக முடிவுக்குக் கொண்டுவர எல்.ஐ.சியின் பங்களிப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். அது ஒட்டுமொத்த நிதிச் சந்தைகளுக்கும் ஒரு பலம்தான்.

மேலும், இந்தியாவில் மிக வேகமாக மாறி வரும் நிதிச் சந்தைகளின் போக்கு காரணமாக இப்போது மட்டுமல்ல, இனிவரும் கால கட்டங்களிலும் இதுபோன்ற நிதி நெருக்கடி சூழலை ஏற்படுத்தும் நிகழ்வுகள் திரும்பவரும் என்றும் எதிர்பார்க்கலாம்.

மிக பெரிய நிறுவனங்கள் வீழ்ச்சி அடையாது என்ற பொதுவான நிதி சந்தைகளின் கருத்து எல்.ஐ.சிக்கும் பொருந்தும் என்றாலும், இனிவரும் காலத்தில் இதுபோன்ற சிக்கல்களைத் தவிர்க்கும் விதமான முதலீட்டு உத்திகளை எல்.ஐ.சி கடைப்பிடிக்கும் என்று நாம் நம்புவோமாக!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு