நம்முடைய உடல்நிலையை கவனித்துக் கொள்ள குடும்ப மருத்துவரை வைத்துக்கொள்கிறோம். ஆனால், நம் நிதி நிலையை கவனிக்கவும், நிதி சார்ந்த முடிவுகளை எடுக்கவும் ஒரு நிதி ஆலோசகரை வைத்துக்கொள்ளத் தயங்குகிறோம். நிதி சார்ந்து முன்னேற வேண்டுமானால் சரியான, நம் குடும்பத்தின்மீது அக்கறை கொண்ட நிதி ஆலோசகர் தேவை.

தேவையற்ற இன்ஷூரன்ஸ் பாலிசிகள், முதலீடுகள் எனத் தேர்ந்தெடுத்து அவற்றின் மூலம் நாம் இழப்பைச் சந்திப்பதற்கு பதிலாக, சிறு தொகையைக் கட்டணமாகச் செலுத்திவிட்டு ஒரு தகுந்த நிதி ஆலோசகரை வைத்துக்கொள்வது நலம். நீங்கள் தேர்ந்தெடுக்கும் நிதி ஆலோசகர் உங்கள் குடும்பத்தின் நிதி நிலையைப் புரிந்துகொண்டவராகவும், நிதி நிலை குறித்த முடிவுகளில் அடுத்த தலைமுறை வரை பயன்தரக்கூடிய ஆலோசனைகளை வழங்குபவராகவும் இருக்க வேண்டும்.
இலவசமாக எதையும் பெறாதீர்கள். நல்ல முதலீட்டு வாய்ப்புகள் எளிதாகக் கிடைக்காது. ஏ.டி.எம் சேவைக்குக்கூட ஆண்டு பராமரிப்பு கட்டணம் உண்டு. ஆனால், நிதி இழப்புகள் ஏற்படாமல் காக்கக்கூடிய நிதி ஆலோசனைகளை இலவசமாக எதிர்பார்க்கிறோம். நிதி சார்ந்த இழப்புகளைத் தவிர்க்க அக்கறையுள்ள நிதி ஆலோசகரை நியமித்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
