Published:Updated:

பணத்தைச் சேர்க்க பிள்ளைகளுக்கு சொல்லித் தரவேண்டிய 3 மந்திரங்கள்!

Family Budget
Family Budget

நிதி நிர்வாகம் சம்பந்தமாக நமது பள்ளிகளும் சரி, பெற்றோர்களும் சரி, குழந்தைகளுக்கு முறையாகச் சொல்லித் தருவதில்லை. நன்கு படித்து, கை நிறைய சம்பாதிக்கும் இளைஞர்களிடம்கூட நிதி நிர்வாகம் பற்றிய போதிய அறிவு இல்லாதிருப்பதைக் காண முடிகிறது.

நிதித் துறையில் ராபர்ட் கியோஸாகி பற்றி தெரியாதவர்கள் இருக்க மாட்டார்கள். இவர் 1997-ம் ஆண்டு எழுதிய `ரிச் டாட், புவர் டாட் (Rich Dad, Poor Dad)’ என்கிற புத்தகம் தமிழ்மொழி உட்பட இதுவரை சுமார் 51 மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு, 41 மில்லியன் பிரதிகள் விற்றிருக்கின்றன. இந்தப் புத்தகம் தவிர, இவர் இதுவரை சுமார் 26 புத்தகங்கள் எழுதியிருக்கிறார்.

இந்த வரிசையில் அவர் எழுதி 2001-ம் ஆண்டு வெளிவந்த ஒரு புத்தகம்தான் `ரிச் கிட், ஸ்மார்ட் கிட்’ (Rich Kid Smart Kid). இவருடைய நூல்கள் அனைத்தும் நிதியை எப்படி சமயோசிதமாகச் சம்பாதிப்பது, பராமரிப்பது, முதலீடு செய்வது என்பது பற்றியதாகும்.

பள்ளிகளில் நிதிக் கல்வி

நிதி நிர்வாகம் சம்பந்தமாக நமது பள்ளிகளும் சரி, பெற்றோர்களும் சரி, குழந்தைகளுக்கு முறையாகச் சொல்லித் தருவதில்லை. நன்கு படித்து, கை நிறைய சம்பாதிக்கும் இளைஞர்களிடம்கூட நிதி நிர்வாகம் பற்றிய போதிய அறிவு இல்லாதிருப்பதைக் காண முடிகிறது.

பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு பணத்தின் ஆற்றலும் சக்தியும் ஓரளவு தெரிந்தே இருக்கும். இந்தப் புத்தகத்தின் மூலம் ராபர்ட், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் தனித்துவமான கற்றல் பாணியை எவ்வாறு பாதுகாக்கலாம், மேலும், எப்படி வளர்க்கலாம், `வாழ்நாள் முழுவதும் கற்பவர்’ ஆக ஆசைப்படுவது ஏன் மிகவும் முக்கியமானது, சாதாரண கல்விக்கும், நிதி கல்விக்கும் இடையிலான வேறுபாடு என்ன, கல்விரீதியாக போராடும் ஒரு குழந்தை ஏன் நிதி ரீதியாக போராடக்கூடாது, குழந்தைகளுக்கு அவர்களின் `வெற்றிச் சூத்திரத்தை’க் கண்டுபிடிக்க உதவுவது எப்படி, குழந்தைகள் தங்கள் `சொந்த மதிப்பை’ப் புரிந்துகொள்ள உதவுவது எப்படி ஆகியவற்றை சுருக்கமாக உதாரணங்கள் மூலம் விளக்குகிறார்.

investment
investment

கல்லூரியில் படித்தோம், ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தோம், அதே நிறுவனத்தில் ஓய்வு பெறுவது வரை வேலை பார்த்தோம் என்பதெல்லாம், இந்தத் தகவல் தொழில்நுட்பக் காலத்தில் கொஞ்சம் கொஞ்சமாக மலையேறி வருகிறது. கல்வியானது குழந்தையிடத்தில் என்ன திறமை இருக்கிறது என்பதைக் கண்டறிந்து வெளிக்கொணர வேண்டுமேயொழிய அவர்களுக்குத் தேவையில்லாத, அவர்கள் விரும்பாத விஷயங்களைத் திணிக்கக்கூடாது.

நிதி நுண்ணறிவு என்பது எவ்வளவு பணம் சம்பாதிப்பது என்பது பற்றியதல்ல. மாறாக, எவ்வளவு பணம் நாம் வைத்திருக்க வேண்டும், அந்தப் பணம் நமக்காக எப்படி `உழைக்க’ வேண்டும் என்பது பற்றியதாகும்.

மிகவும் நம்பிக்கை உள்ள சிறுவர்கள் `இதை என்னால் வாங்க முடியுமா என்பதற்குப் பதிலாக, ``இதை வாங்குவதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?” என யோசிக்க வேண்டும்.

9 வயதில் சொல்லிக் கொடுங்கள்

குழந்தைகள் அவர்களுடைய ஒன்பதாவது வயதில் பெற்றோர்களிடமிருந்து விலகி தங்களுக்கென்று ஒரு தனித்த அடையாளத்தைப் பெற விரும்புகிறார்கள். ஒன்பது வயதிலிருந்து பதினைந்து வயது வரை அவர்கள் வளர்ச்சியின் முக்கியமான கட்டத்தைக் கடந்து செல்லவேண்டிய காலமாகும். குழந்தைகள் நல நிபுணர்களின் கூற்றுப்படி, இந்தக் காலகட்டத்தில் அவர்கள் அவர்களது `வெற்றிக்கான சூத்திர’த்தைக் கண்டறிந்து கொள்ள முடியும் என்கிறார்கள்.

பணத்தைப் பொறுத்தவரையில், உங்களுடைய குழந்தை ஒரு வெற்றிகரமான சூத்திரத்தைக் கண்டறிய வேண்டும். பெரும்பாலான குழந்தைகள், கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு வெளியே வரும்போது அவர்களுடைய கல்விக்கான கடனைக் கட்டுவதற்கென வேலையைத் தேட ஆரம்பிக்கிறார்கள். பலவீனமான சுய கருத்து உள்ளவர்கள், ``எனக்கு இவ்வளவு கடன் இருக்கிறது. நான் வேலை செய்வதை நிறுத்த முடியாது; எனக்கு சம்பளம் உயர வேண்டும். நான் ஒருபோது பணக்காரர் ஆக முடியாது. என் கையில் பணம் எதுவும் இல்லை. என்னுடைய தவணைகளையும், மாதந்திரச் செலவுகளையும் சமாளிக்க முடியாத என்னால் எப்படி முதலீடு செய்ய முடியும்? சொந்தத் தொழில் ஆரம்பிக்க விருப்பம். அதே சமயம், தொடர்ந்து நிலையான வருமானமும் வேண்டும். எதற்கு ரிஸ்க் எடுக்க வேண்டும்?’’ என பலவிதமாக யோசிப்பார்கள்

இன்றைய தங்கம் விலையைத் தெரிந்துகொள்ள: Gold Rate Today

இன்றைய வெள்ளி விலையைத் தெரிந்துகொள்ள: Silver Rate Today

பணக்காரராக முதலீடு செய்யுங்கள்

ராபர்ட் தன்னுடைய `ரிச் டாட்’ புத்தகத்தில், `உங்களுக்குப் பணம் அதிகம் தேவையெனில், ஆற்றல் குறைவாக இருக்கும்’ எனக் குறிப்பிட்டிருப்பார். பணக்காரர்கள் பணத்துக்காக வேலை செய்ய மாட்டார்கள். அவர்களுக்காக பணத்தை வேலை செய்ய வைப்பார்கள். ஓய்வு நேரத்தில் மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் பணம் செலவழிப்பார்கள், பணக்காரர்கள் முதலீடு செய்வார்கள். பெரும்பாலான வணிகங்கள் கராஜுகளிலும் (Hewlett-Packard), டார்மிட்டரி அறைகளிலும் (டெல் கம்ப்யூட்டர்ஸ்), சமையலறைகளிலும் உருவானவைதான்.

Money
Money

அலுவலகத்தில் உட்கார்ந்து வேலை செய்ய ஆசையா அல்லது சொந்தமாக அலுவலகக் கட்டடம் உருவாக்க ஆசையா என உங்கள் குழந்தைகளிடம் கேட்டுப் பாருங்கள்.

மோனோபலி (Monopoly) போன்ற விளையாட்டுகளைக் குழந்தைகளுடன் விளையாடும்போது ரியல் எஸ்டேட், முதலீடு ஆகியவற்றின் அடிப்படைகளைச் சொல்லிக் கொடுங்கள்.

அது போல, வயது வந்தவர்களும் ரிஸ்க் எடுப்பது, முதலீடு செய்வது ஆகியவை மீதான கண்ணோட்டத்தையும் மாற்றிக்கொள்ள வேண்டும்.

தினமும் வேலைக்குச் செல்வதால், நீங்கள் பணக்காரர் ஆக முடியாது. நீங்கள் சம்பாதித்த பணத்தைக் கொண்டு என்ன செய்வது என்பதை வீட்டிலிருந்து யோசியுங்கள். அதுதான் பணக்காரருக்கும் ஏழைக்குமான வித்தியாசம்.

நிதிச் சுதந்திரத்துக்கு 3 சூத்திரங்கள்

உங்கள் குழந்தைகள் வெற்றி பெறுவதற்கு

கற்பதற்கான சூத்திரம்,

தொழில் முறைச் சூத்திரம்,

நிதிச் சூத்திரம் ஆகிய மூன்றும் தெரிந்திருக்க வேண்டும். உண்மையான கற்றல் என்பது பள்ளிக்கு வெளியே யதார்த்த உலகில்தான் ஆரம்பிக்கிறது. நாம் எல்லோருமே படித்து முடித்தவுடன் வேலையில் சேருவது என்கிற மனப்பக்குவத்துக்குப் பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறோம். ஆனால், குழந்தைகளை அதற்கு எதிர்பக்கம் அதாவது, முதலாளிகள் உட்காரும் பக்கம் உட்கார வைத்து சிந்திக்க வைக்கவேண்டும்.

உங்கள் குழந்தைகளுக்கு வேலை பாதுகாப்பு என்கிற பொய்யான ஓர் உணர்வை ஊட்டுவதற்குப் பதிலாக முப்பது வயதில் ஓய்வு பெறுவதன் மூலம் நிதிச் சுதந்திரம் அடைவது எப்படி என்பதைக் கற்றுக் கொடுங்கள்.

சேமிப்பவர்கள் தோல்வியடைவார்கள் என்கிறார் ராபர்ட். ஏனெனில், சேமிப்பதால் நமக்குக் கிடைப்பது அதிகபட்சம் 7% வட்டிதான். அதோடு பணவீக்கம், வட்டிமீது அரசு விதிக்கும் வரி என அனைத்தும் போக நமக்குக் கிடைப்பது சொற்பமே.

பணத்தைச் சேர்க்கும் மூன்று வழிமுறைகள்

பணத்தைச் சேர்க்க மூன்று வகையான (Piggy Bank) வழிமுறைகளை உங்கள் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துங்கள்.

1. உதவி, தானம் செய்வதற்கு 10%

2. சேமிப்பு (ஒரு வருட செலவுக்குப் போதுமானது வரை)

3. முதலீடு (வணிகம் ஆரம்பிக்க, ரியல் எஸ்டேட் வாங்க, அல்லது பங்குகள் வாங்க)

Rich Kid Smart Kid
Rich Kid Smart Kid

இதோடு குழந்தைகளுக்கு சிறு வயதிலிருந்தே நிதி சம்பந்தமான சொற்களைக் கற்றுக் கொடுங்கள். அதாவது `சொத்து’ என்பது உன் பையில் பணம் இருப்பது போல, `பொறுப்பு’ என்பது பணத்தை வெளியே எடுப்பது என சின்ன சின்ன விஷயங்களை வார்த்தைகளைவிட எண்களை உபயோகித்து சொல்லிக் கொடுக்கலாம்.

ஆக, ஆசிரியர்களும் பெற்றோர்களும் குழந்தைகளின் வெற்றிக்கான தனித்துவமான பாதையைக் காட்டுவது அவசியமாகும். நிதி சம்பந்தமாக அனைவரும் ஏதோ ஒரு வகையில் இந்த கோவிட்-19 காலத்தில் கற்றுக் கொண்டிருக்கிறோம். ஆனால், ராபர்ட் கியோஸாகியின் சூத்திரங்களும் வழிமுறைகளும் 1990-களிலேயே எழுதப்பட்டுவிட்டன. இதை வாசித்தால் நிதிக்கு அடிமையாவதைவிட குழந்தைகளை சாதுரியமானவர்களாக ஆக்கி அவர்களை நிதிச் சுதந்தரம் உடையவர்களாக ஆக்க முடியும் என்பது உறுதி.

அடுத்த கட்டுரைக்கு