Published:Updated:

உங்கள் ஃபைனான்ஷியல் ஹெல்த் எப்படி? - வழிகாட்டும் ஆலோசனைகள்!

ஃபைனான்ஷியல்
ஹெல்த்
பிரீமியம் ஸ்டோரி
News
ஃபைனான்ஷியல் ஹெல்த்

இயற்கைப் பேரிடர் சமயங்களிலும், எதிர்பாராத செலவுகள் வரும்போதும் நமக்கு இந்த அவசரகால நிதி பேருதவி புரியும்!

ந்தியா உட்பட அனைத்து உலக நாடுகளின் பொருளாதாரமும் கொஞ்சம் கொஞ்சமாகச் சரிந்து, பெரும் பிரச்னையில் சிக்கிக் கொண்டிருக்கிறது.

இந்த உலகப் பொருளாதாரச் சரிவு நம் ஒவ்வொருவரின் வாழ்வையும் நேரடியாக பாதிக்கப்போகிறது. வேலையிழப்பு, சம்பளக் குறைப்பு போன்ற சூழல்களை இனிவரும் நாள்களில் எதிர்கொள்ள நேரிடலாம். அதற்கெல்லாம் நாம் தயாராக இருக்கிறோமா என்பதைத் தெரிந்துகொள்ள ‘உங்களின் ஃபைனான்ஷியல் ஹெல்த்’ எப்படி இருக்கிறது என்ற தலைப்பில், நாணயம் விகடன் ஆன்லைனில் சர்வே ஒன்றை நடத்தியது.

உங்கள் ஃபைனான்ஷியல் ஹெல்த் எப்படி? - வழிகாட்டும் ஆலோசனைகள்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இதில் பங்கேற்றவர்களில், 90% பேர் ஆண்கள், 10% பேர் பெண்கள். அந்த சர்வே முடிவுகளையும், சர்வேயில் கலந்து கொண்டவர்கள் இனிவரும் நாள்களில் எப்படிப்பட்ட நிதித் திட்டமிடலைப் பின்பற்ற வேண்டும் என்பதையும், ஒவ்வொரு தனிநபரும் பின்பற்ற வேண்டிய நிதிக் கட்டுப்பாடுகள் என்னென்ன என்பதையும் பார்ப்போம்.

இந்த சர்வே மூலம் நமக்குத் தெரியவரும் கருத்துகள் பற்றியும், மக்கள் இனிவரும் நாள்களில் தங்களின் நிதி சார்ந்த விஷயங்களை எப்படிக் கையாள வேண்டும் என்பதையும் நிதி ஆலோசகர் சுரேஷ் பார்த்தசாரதியிடம் கேட்டோம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

கடன் தவணை!

“இந்த கொரோனா காலகட்டத்தில், இன்று இந்திய அளவில் பெரிதாகப் பேசப்படுவது தனிநபர் கடன் மற்றும் நிறுவனங்கள் பெற்றிருக்கும் கடன்களின் மாதத் தவணையை எத்தனை மாதங்கள் கழித்துத் திரும்பச் செலுத்தலாம் என்பதுதான். சராசரியாகப் பார்த்தால், இன்றைக்கு 100 பேர் தனிநபர் கடன் வாங்கியிருந்தால், அவர்களில் 90 பேர் கடனைத் திருப்பிச் செலுத்திவருவது ஆரோக்கியமான விஷயம். ஏனென்றால், ஒருவர் கடனைச் சரியாகத் திருப்பிச் செலுத்துகிறாரென்றால், அவருடைய வருமானத்துக்குப் பெரிய அளவில் பாதிப்பில்லை அல்லது அவருடைய இதர செலவுகளை அவர் குறைத்துவருகிறார் என்று அர்த்தம்.

ஃபைனான்ஷியல்
ஹெல்த்
ஃபைனான்ஷியல் ஹெல்த்

இந்த சர்வே முடிவின்படி, தற்போதைய சூழ்நிலையில் சராசரியாக எத்தனை நடுத்தர மக்கள் மாதத் தவணையைச் செலுத்தாமல் இருக்கிறார்கள் என்று பார்த்தால், அது 10 சதவிகிதத்துக்கும் குறைவாகவே இருக்கிறது. இதுவும் ஓர் ஆரோக்கியமான போக்குதான். அத்துடன் வங்கிகள் கடன் செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீட்டித்துத் தந்திருந்தாலும், மக்கள் அதன் சாதக பாதகங்களை நன்றாக உணர்ந்திருக்கிறார்கள் என்பதை இந்த சர்வே மூலம் நாம் தெரிந்துகொள்ளலாம்.

சேமிப்பும் இந்தியப் பொருளாதாரமும்..!

2008-ம் ஆண்டில் உலகப் பொருளாதாரம் சரிந்தபோது இந்தியாவால் ஓரளவுக்குச் சமாளிக்க முடிந்தது. ஏனென்றால், இந்திய மக்கள் தங்களின் மாத வருமானத்தில் சேமிப்பை அதிகமாக வைத்திருந்தார்கள். ஆனால், ‘இப்போதிருக்கும் சூழலில் யாராலும் பெரிதாகச் சேமிக்க முடியாது. எனவே, இந்தியப் பொருளாதாரம் பெரிய அளவில் பாதிப்படையும்’ என்று பல நிபுணர்கள் தெரிவித்துவந்தார்கள்.

ஃபைனான்ஷியல்
ஹெல்த்
ஃபைனான்ஷியல் ஹெல்த்

இந்த சர்வேயின்படி, 90% பேர் தங்கள் மாத வருமானத்தில் 20 சதவிகிதத்துக்கும் மேலாகச் சேமிக்கிறார்கள். இதை நம் பொருளாதாரத்தைப் பெரிய அளவில் பாதிக்காமல் காப்பாற்றக்கூடிய வாய்ப்பாக நான் பார்க்கிறேன்.

இது மட்டுமல்ல, ஏறக்குறைய 37% பேர் தங்களிடம் கிரெடிட் கார்டு இல்லை என்றும், 46% பேர் `தேவையான பொருள்களை மட்டுமே கிரெடிட் கார்டு மூலம் வாங்குவேன்’ என்றும் சொல்லியிருப்பதைப் பார்த்தால், இந்த சர்வேயில் கலந்துகொண்டவர்களுக்கு நல்ல நிதி நிர்வாக அறிவு இருக்கிறது என்றே தெரிகிறது. காரணம், இன்றைக்கு `கிரெடிட் கார்டு வாங்கிக்கொள்ளுங்கள்’ என தினமும் பத்து போன்கள் வருகின்றன. போதிய அளவு வருமானம் இல்லாதவர்களுக்குக்கூட கிரெடிட் கார்டு தர நிதி நிறுவனங்கள் தயாராக இருக்கின்றன. இதில் சிக்காமல் இருப்பது சாமர்த்தியம்தான்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முதலீட்டில் முன்னுரிமை..!

ஒரு தேசத்தின் பொருளாதாரம் முன்னேற வேண்டுமென்றால், அங்கிருக்கும் மக்கள் எவ்வாறு முதலீடு செய்கிறார்கள் என்பதை கவனிக்க வேண்டும். இந்த சர்வேயின்படி, வங்கி மற்றும் அஞ்சலகச் சேமிப்புகள் சராசரியாக 30% உள்ளன.

உங்கள் ஃபைனான்ஷியல் ஹெல்த் எப்படி? - வழிகாட்டும் ஆலோசனைகள்!

`இந்தியப் பொருளாதாரம் மேம்பட வேண்டும்’ என்ற எண்ணத்தில் ரிசர்வ் வங்கி ரெப்போ ரேட் விகிதத்தைக் குறைத்துக்கொண்டே வருகிறது. இதனால், டெபாசிட் வட்டியும் குறைந்து வருகிறது. இந்த நிலையில், முதலீட்டாளர்கள் அஞ்சலகம் மற்றும் பேங்க்கைத் தவிர்த்துவிட்டு மியூச்சுவல் ஃபண்ட், பங்குச் சந்தைகளில் முதலீடு செய்வதற்கு ஆர்வம்காட்டுவார்கள். இதனால், இந்தியப் பொருளாதாரம் முன்னேற்றப் பாதையில் பயணிக்க வாய்ப்பு உருவாகும்.

செலவுகள் மற்றும் உபரி நிதி..!

தனிநபர் வருமானத்தில் சராசரியாக 30% முதல் 70% வரை செலவு செய்பவர்கள் 85% பேர் இருப்பதாக இந்த சர்வே சொல்கிறது. ஒரு மனிதனின் செலவுகள் எப்போது கட்டுக்குள் இருக்கின்றனவோ, அப்போது அந்தப் பொருளாதாரம் முன்னேறுவதற்கான வாய்ப்பைப் பெறும். கொரோனா காலத்தில் மக்களின் செலவு குறையும் பட்சத்தில், அதை முதலீடு செய்ய யோசிப்பார்கள்.

உங்கள் ஃபைனான்ஷியல் ஹெல்த் எப்படி? - வழிகாட்டும் ஆலோசனைகள்!

எதிர்காலத் தேவைக்கான முதலீடு!

இந்த சர்வேயின்படி, குழந்தைகளின் படிப்புக்குச் சராசரியாக 34% பேரும், ஓய்வுக்காலத்துக்கான முதலீடாக 30% பேரும் ஏதாவதொரு முதலீட்டுத் திட்டத்தில் முதலீடு செய்கிறார்கள். இதில் கவனிக்க வேண்டிய விஷயம், பல ஆண்டுகளுக்கு முன்னர் எடுக்கப்பட்ட சர்வேயில், ஓய்வுக்காலத்துக்காக முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. இப்போது அது 30% எட்டியிருப்பது வரவேற்கத்தக்கது.

பல மேலைநாடுகளில் சோஷியல் செக்யூரிட்டி குறைந்துகொண்டே வருகிறது. ஆனால், இந்தியாவில் அந்த ஆபத்து இல்லை. ஓய்வுக்காலத்துக்காக நீண்டகால முதலீடு செய்யவே இங்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. இதை கவனத்தில்கொண்டு, அரசாங்கம் மேலும் பல சலுகைகளுடன் நியூ பென்ஷன் திட்டத்தை அறிமுகப் படுத்தினால், மக்கள் நீண்டகால முதலீட்டை நோக்கி வருவார்கள்.

இன்ஷூரன்ஸின் அத்தியாவசியம்!

ஒவ்வொரு மனிதருக்கும் இன்ஷூரன்ஸ் மீதான தேவை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அதைப் பற்றிப் பல்வேறு விழிப்புணர்வு ஏற்பட்டபோதிலும், இன்றும் அதிக பாதுகாப்புகொண்ட டேர்ம் இன்ஷூரன்ஸ் திட்டங்களுக்கு மக்களிடம் வரவேற்பு கிடைக்கவில்லை. இருப்பினும் பல ஆண்டுகளுக்கு முன்பு ஒப்பிடும்போது, தற்போது டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்திருப்பவர்களின் எண்ணிக்கை ஓரளவுக்கு அதிகரித்திருக்கிறது.

உங்கள் ஃபைனான்ஷியல் ஹெல்த் எப்படி? - வழிகாட்டும் ஆலோசனைகள்!

ஆனால், இந்த சர்வேயில் 65% பேர் டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுக்கவில்லை என்று பதில் அளித்திருக்கிறார்கள். இதுவும் ஆரோக்கியமான விஷயம் கிடையாது. ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட வகையில் ரிஸ்க் இருக்கிறது. தனிநபர், வீட்டுக் கடன் அல்லது பிசினஸ் கடன் எடுத்திருப்பவர்களுக்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் மிகவும் அவசியம். இந்த சர்வேயில் வருத்தம் தரக்கூடிய விஷயம், 37% பேருக்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் குறித்த விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறது. இன்ஷூரன்ஸ் என்றால், முதலீடு என மக்கள் நினைக்கிறார்கள். இன்ஷூரன்ஸ் என்பது பாதுகாப்பு மட்டுமே, முதலீடு கிடையாது. நடுத்தரக் குடும்பத்தினர் குறைந்தது மூன்று லட்சம் ரூபாய்க்காவது பாலிசி எடுத்தால் மட்டுமே எதிர்பாராத மருத்துவச் செலவுகளைச் சமாளிக்க முடியும். அதேபோல், நடுத்தர மற்றும் மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் ரூ.5 லட்சம் - ரூ.7.5 லட்சங்கள் வரை பாலிசி எடுத்துக்கொள்ளலாம்.

மிச்சமாவதைச் சேமியுங்கள்!

ஊரடங்கு நடைமுறையில் இருந்த நாள்களில் நம்மில் பலரும் வீட்டிலிருந்து வேலை செய்து வந்தோம். இதனால் நமக்கு கணிசமான அளவில் பணம் மிச்சமாகி இருக்கும். இப்போது பலரது வருமானம் குறைந்திருப்பதாலும், சிலர் வேலையை இழந்திருப்பதாலும் சிக்கனமான வாழ்க்கையை நடத்த வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகியிருக்கின்றனர். இதனால் மிச்சமாகும் பணத்தை ஆடம்பரமாகச் செலவழிக்காமல் முழுமையாகச் சேமிக்கத் தொடங்க வேண்டும்.

உங்கள் ஃபைனான்ஷியல் ஹெல்த் எப்படி? - வழிகாட்டும் ஆலோசனைகள்!

அவசரகால நிதி அவசியம்!

ஒவ்வொரு வீட்டிலும் கட்டாயம் அவசரகால நிதி என்ற ஒன்றை எல்லோருமே உருவாக்கி வைத்திருக்க வேண்டும். இயற்கைப் பேரிடர் சமயங்களிலும், எதிர்பாராத செலவுகள் வரும்போதும் நமக்கு இந்த அவசரகால நிதி பேருதவி புரியும். மாத வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை அவசரகால நிதிக்கென ஒதுக்குவதைக் கட்டாயமாக்குங்கள்.

உங்கள் ஃபைனான்ஷியல் ஹெல்த் எப்படி? - வழிகாட்டும் ஆலோசனைகள்!

பள்ளிக் கட்டணம் எப்படிச் செலுத்துவது?

தற்போது பெற்றோர்களுக்குக் காத்திருக்கும் மிகப்பெரிய பிரச்னையே ஜூன் மாதம் பிள்ளைகளின் பள்ளிக் கட்டணத்தை எப்படிச் செலுத்தப்போகிறோம் என்பதுதான். இன்றைய சூழலில் கிண்டர் கார்டன் படிப்புக்கே பல லட்ச ரூபாய் வரை செலவாகிறது. அப்படியிருக்க, பெற்றோர்களின் பரிதவிப்பை வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது. ஆனால், இந்தச் சூழலைச் சமாளிக்க நிறுவனங்கள் தரும் லீவ் டிராவல் அலவன்ஸைப் பயன்படுத்தலாம். இந்த ஆண்டு கோடை விடுமுறைக்கு சுற்றுலா செல்லாதபட்சத்தில், இந்த லீவ் டிராவல் அலவன்ஸைப் பள்ளிக் கட்டணத்துக்குப் பயன்படுத்திக்கொள்ள முடியும். உயர்கல்விக் கட்டணங்களுக்கு, கல்விக் கடன் வாங்குவதைத் தவிர்த்து வேறு வழியில்லை. இந்தியாவில் கல்விக் கடனுக்கு விதிக்கப்படும் வட்டி விகிதம் குறைவாக இருப்பதால், கல்விக் கடன் பெற்று கட்டணத்தைச் சமாளிக்கலாம்.

உங்கள் ஃபைனான்ஷியல் ஹெல்த் எப்படி? - வழிகாட்டும் ஆலோசனைகள்!

இந்த இக்கட்டான காலகட்டத்தில் ஆடம்பரங்களைத் தவிர்த்துவிட்டு, சிக்கனமான வாழ்க்கைக்கு தயார்படுத்திக் கொண்டால் அதிகக் கடன்கள் இன்றி ஆபத்துகளைக் கடந்துவிடலாம். ஆரோக்கியமான நிதிச் சூழலையும் ஏற்படுத்திக் கொள்ளலாம்” என்றார் சுரேஷ் பார்த்தசாரதி. இந்த கொரோனா காலத்தில், உங்கள் உடல்நலத்துடன் உங்கள் நிதிநலனும் எப்படியிருக்கிறது என்பதை அவசியம் சோதித்துப் பாருங்கள்!

‘‘சம்பளம் கிடைப்பதால் நாள் ஓடுகிறது!”

- நரேன் பிரபாகர், மாதவரம்.

உங்கள் ஃபைனான்ஷியல் ஹெல்த் எப்படி? - வழிகாட்டும் ஆலோசனைகள்!

“நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த எனக்கு, தற்போதுள்ள சூழ்நிலையைச் சமாளிப்பது சற்றே சிரமமாக இருக்கிறது. இன்ஷூரன்ஸ் இல்லை, எதிர்காலத் தேவைகளுக்கு இன்னும் முதலீட்டை ஆரம்பிக்கவில்லை. அலுவலகத்தில் சம்பளம் கிடைப்பதால் நாள்களை ஓட்ட முடிகிறது. தவிர, தேவைப்பட்டால் நண்பர்களிடம் கடன் வாங்குகிறேன்.’’

நிதிச் சிக்கலைச் சமாளிப்பது சிரமம்தான்!

- அசோக், ஈக்காட்டுத்தாங்கல்.

“கொரோனா வைரஸ் பரவலுக்கு முன்னர் வரை, என் குடும்பத்தின் நிதி நிலைமை சீராகத்தான் இருந்தது. ஆனால், கொரோனா தாக்குதலுக்குப் பிறகு மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறது. நான் ஐ.டி ஊழியர் என்பதால், தற்போதைக்கு கிடைக்கும் சம்பளத்தை வைத்து சமாளிக்கிறேன். தவிர, அவசரகாலத் தேவைக்குப் பணம் சேமித்துவைத்திருந்தேன். அதனால் கடன் வாங்கத் தேவையில்லை. சொந்த வீடு என்பதால், வாடகைப் பிரச்னை கிடையாது. கிரெடிட் கார்டு கடன் இருப்பதால், அதற்கான இ.எம்.ஐ தொகையை மட்டும் செலுத்திவருகிறேன். இதே நிலை தொடர்ந்தால் சமாளிப்பது சிரமம்தான்.”

அசோக், கார்த்தியாயினி
அசோக், கார்த்தியாயினி

அவசரகால நிதி காலி!

- கார்த்தியாயினி, அவிநாசி.

“பிள்ளைகளின் பள்ளிக்கட்டணத்தை எப்படிச் செலுத்தப்போகிறேன் என்று தெரியவில்லை. எதை நிறுத்தினாலும், செலவை மட்டும் நிறுத்தவே முடியாது. எப்போதுமே அவசரகாலத் தேவைக்காக 30,000 ரூபாயைத் தனியாக வைத்திருப்போம். எந்தச் செலவு வந்தாலும், அந்தப் பணத்தைத் தொடாமல் இருந்தோம். ஆனால், கொரோனா காலத்தில் ஏற்பட்டிருக்கும் நிதிப் பிரச்னையால், அந்தப் பணமும் செலவாகிவருகிறது. இப்போது வரை எப்படியோ சமாளித்துவிட்டேன். இனி கஷ்டம்தான்.’’