Published:Updated:

மத்திய அரசின் 'அதிரடி'களால் எந்தெந்த துறைகள் மீண்டெழ வாய்ப்பு?

பொருளாதார வீழ்ச்சி இருப்பதைத் தெரிந்துகொண்டு அதனைச் சரிசெய்வதற்கான நடவடிக்கை எடுக்கத் தொடங்கியிருப்பது நல்ல செய்தி. ஆனால்,

Nirmala Sitharaman
Nirmala Sitharaman

கடந்த சில வாரங்களில் எல்லாத் துறைகளிலிருந்தும் பொருளாதார மந்தநிலை குறித்த செய்திகள் வெளியாகி, கடுமையான அச்சத்துக்கு உள்ளானார்கள் மக்கள். இதன் காரணமாக, பங்குச் சந்தைகள் இறக்கம் காணத் தொடங்கின. பொருளாதார மந்த நிலையைப் போக்கி, வளர்ச்சியை வேகப்படுத்த வேண்டுமெனில், அதற்குத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசாங்கம் உடனடியாக எடுக்கவேண்டும் என்கிற கோரிக்கை பலமாக எழுந்தது.

இந்த நிலையில், தொழில் துறையினரின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுகிற மாதிரி பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான பல ஊக்குவிப்பு நடவடிக்கைகளை அறிவித்திருக்கிறார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். நிதி அமைச்சரின் இந்த அறிவிப்புகளால் எந்தெந்தத் தொழில் துறைகளில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்று பார்ப்போம். விரிவாக படிக்க... http://bit.ly/2jVTT3L

"ஜி.எஸ்.டி வரி நடைமுறைக்கு வந்து சில ஆண்டுகளே ஆன நிலையில், தொழில்முனைவோருக்கும் சரி, அரசு அலுவலர்களுக்கும் சரி, அதைக் கையாள்வதில் ஏகப்பட்ட குழப்பங்கள் நிலவி வருகின்றன. இதனால் ஜி.எஸ்.டி வரியைத் திரும்ப வழங்குவதில் தொய்வு காணப்பட்டது. இந்தச் சிக்கலிலிருந்து சிறு மற்றும் குறுந் தொழில்முனைவோர்கள் வெளியே வருவதற்கான சூழலை உருவாக்கியிருக்கிறது நிதி அமைச்சரின் தற்போதைய அறிவிப்பு. இந்த அறிவிப்பின்படி, எம்.எஸ்.எம்.இ தொழில்முனைவோர்களுக்கு 30 நாள்களுக்குள் ஜி.எஸ்.டி ரீஃபண்ட் பணம் திரும்பக் கிடைக்கும். இதனால் தொழில்முனைவோர்கள் பயனடைவார்கள். பொருள்களின் உற்பத்தித் திறன் அதிகரிக்கும். வேலைவாய்ப்பும் பெருகும்" என்றார், கார்ப்பரேட் கிளினிக் நிறுவனத்தின் சி.இ.ஓ-வும், பி.ஆர்.கே அகாடமியின் தலைவருமான பி.ராமகிருஷ்ணன்.

Nirmala Sitharaman
Nirmala Sitharaman

ஆட்டோமொபைல் துறை நிபுணர் டி.முரளி கூறும்போது, ''ஒரு சில பிரச்னைகளுக்கு மட்டுமே அரசு இப்போது தீர்வு அளித்துள்ளது. வங்கிக் கடன்களுக்கு வட்டி விகிதத்தைக் குறைத்திருப்பதாலும், வங்கிகளுக்கு ரூ.70,000 கோடி ஒதுக்கியிருப்பதாலும் சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்களுக்குக் கடன் கிடைப்பது சுலப மாகும். இதனால் ஆட்டோமொபைல் நிறுவனங்களிடம் பண இருப்பு அதிகரிக்கும். மின்சார வாகனம் வந்துவிட்டால், ஐசி இன்ஜின் வாகனங்களை நிறுத்திவிடு வார்களோ என்ற அச்சம் இருந்தது. ஆனால், அரசு இப்போது ஐசி இன்ஜின் களும் இருக்கும் என்பதை உறுதிப்படுத்தி விட்டதால் மக்களுக்கு இருந்த அச்சம் குறைந்திருக்கிறது. வாகனங்களுக்கு வசூலிக்கப்படும் ஜி.எஸ்.டி வரியை 28 சதவிகிதத்திலிருந்து 18 சதவிகிதமாகக் குறைக்க வேண்டும் என வாகன உற்பத்தியாளர்கள் சங்கம் (SIAM) தொடர்ந்து வற்புறுத்தி வருகிறது. ஆனால், நிதி அமைச்சர் இதுகுறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடாதது ஏமாற்றத்தையே அளிக்கிறது'' என்றார்.

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் அறிவிப்புகளால் ரியல் எஸ்டேட் துறை உயரத் தொடங்குமா என நவீன்ஸ் ஹவுஸிங் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆர்.குமாரிடம் கேட்டப்போது, ''மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதா ராமனின் அறிவிப்புகள் வரவேற்கத் தகுந்த நடவடிக்கை. பொருளாதார வீழ்ச்சி இருப்பதைத் தெரிந்துகொண்டு அதனைச் சரிசெய்வதற்கான நடவடிக்கை எடுக்கத் தொடங்கியிருப்பது நல்ல செய்தி. ஆனால், ரியல் எஸ்டேட் துறையைப் பொறுத்தவரை, தற்போது வெளியிடப்பட்ட அறிவிப்புகளால் எந்தவித பெரிய பலனும் கிடைக்காது. இந்தத் துறைக்கு நம்பிக்கையூட்டக் கூடிய எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை'' என்றார்.

புதிய மீட்டெடுப்பு திட்டத்தை உரிய முறையில் செயல்படுத்தி பொருளாதார மந்தநிலைக்கு விரைந்து முடிவு கட்ட வேண்டும் என்பதே வங்கித் துறை சார்ந்தவர்களின் எதிர்பார்ப்பு

வங்கித் துறை வேகம் காணுமா? என்று பேசிய ஆர்.மோகனப் பிரபு, "நல்ல திட்டங்களை நிதி அமைச்சர் அறிவித்ததில் பலருடைய பாராட்டையும் சம்பாதிக்கும் தற்போதைய அரசு, அந்தத் திட்டங்களை உரிய முறையில் நடைமுறைப்படுத்துவதில் கோட்டை விட்டுவிடுவதாகக் குற்றச்சாட்டுகளும் கடந்த காலத்தில் எழுந்தன. இந்த முறை, அவ்வாறான குற்றச்சாட்டுகளுக்கு இடமளிக்காமல், அறிவிக்கப்பட்டுள்ள புதிய மீட்டெடுப்பு திட்டத்தை உரிய முறையில் செயல்படுத்தி பொருளாதார மந்தநிலைக்கு விரைந்து முடிவு கட்ட வேண்டும் என்பதே வங்கித் துறை சார்ந்தவர்களின் எதிர்பார்ப்பு" என்றார்.

- மத்திய அரசின் அறிவிப்புகளால் துறைவாரியாக எதிர்பார்க்கப்படும் மாற்றங்கள் குறித்து முழுமையாக நாணயம் விகடன் கவர் ஸ்டோரியில் வாசிக்க > நிதி அமைச்சரின் புதிய அறிவிப்புகள்... எந்தத் துறையில் என்ன மாற்றம் வரும்? https://www.vikatan.com/news/general-news/what-are-the-changes-that-will-happen-following-the-finance-ministers-new-orders

> ஆன்லைனில் சந்தா செலுத்த https://store.vikatan.com/