Published:Updated:

முதலீட்டுக் காலத்தின் முக்கியத்துவம்..! - யாருக்கு எந்த முதலீடு ஏற்றது?

முதலீடு
பிரீமியம் ஸ்டோரி
முதலீடு

இளம் வயதினருக்கு வருவாய் ஈட்டுவதற்கான காலம் அதிகமாக இருப்பதால், இவர்கள் நீண்ட கால முதலீட்டுத் திட்டங்களைத் தேர்வு செய்யலாம்!

முதலீட்டுக் காலத்தின் முக்கியத்துவம்..! - யாருக்கு எந்த முதலீடு ஏற்றது?

இளம் வயதினருக்கு வருவாய் ஈட்டுவதற்கான காலம் அதிகமாக இருப்பதால், இவர்கள் நீண்ட கால முதலீட்டுத் திட்டங்களைத் தேர்வு செய்யலாம்!

Published:Updated:
முதலீடு
பிரீமியம் ஸ்டோரி
முதலீடு
னியார் ஐ.டி நிறுவனம் ஒன்றில் வேலை பார்ப்பவர் கிருஷ்ணன். புராஜெக்ட் மேனேஜர் என்பதால், பதவிக்கு ஏற்றாற்போல் சம்பளமும் அதிகம். ஆனால், அவருடைய பண நிர்வாகம் சரியாக இல்லாததால், வரவுக்கு அதிகமான செலவு, கிரெடிட் கார்டு பாக்கி, கடன் தொந்தரவுகள் எனப் போய்க்கொண்டிருந்தது அவரது வாழ்க்கை.

அவருடைய நண்பர் தந்த ஆலோசனையால் நிதி ஆலோசகர் ஒருவரைச் சந்தித்தார் கிருஷ்ணன். கடன் சிக்கலுக்கான உடனடித் தீர்வுகளைச் சொல்லிவிட்டு, ‘உங்களுடைய எதிர்காலத் தேவைகளுக்கேற்ப, நீண்டகாலம், குறுகியகாலம், நடுத்தரகாலத்தின் அடிப்படையில் ஒரு சில முதலீடுகளை ஆரம்பியுங்கள்’ என்றார் அந்த நிதி ஆலோசகர். ஏனெனில், நீண்டகாலம், குறுகியகாலம், நடுத்தரகாலம் ஆகிய மூன்று கால அளவுகளுமே முதலீட்டுக்கு மிகவும் முக்கியம் என்பது நிதி ஆலோசகர்களின் பொதுவான கருத்து. இந்த மூன்று முதலீட்டுக் காலத்தின் முக்கியத்துவம் என்ன, எந்தெந்தக் காலத்துக்கு எந்தெந்த முதலீட்டுத் திட்டங்களைத் தேர்ந்தெடுக்கலாம், முதலீடுகளை ஆரம்பித்தபிறகு முதலீட்டுக் காலத்தை மாற்றிக்கொள்ள முடியுமா என்ற பல கேள்விகளுடன் நிதி ஆலோசகர்களை அணுகினோம். முதலில் நிதி ஆலோசகர் சுரேஷ் பார்த்தசாரதியிடம் பேசினோம்.

முதலீட்டுக் காலத்தின் முக்கியத்துவம்..! - யாருக்கு எந்த முதலீடு ஏற்றது?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“எந்த விஷயத்தைச் செய்தாலும், திட்டமிட்டுச் செய்ய வேண்டும் என்பார்கள். அது போலத்தான், முதலீட்டை ஆரம்பிக்கும் முன், முதலீட்டுக் காலத்தைத் தேர்ந்தெடுப்பதும். எந்தத் தேவைக்கு, எந்தக் காலத்தைத் தேர்வு செய்கிறோம் என்பதில் ஆரம்பித்து, அதை இடைநிறுத்தம் செய்யாமல் தொடர்ந்து செய்யும்போதுதான், ஒருவருடைய நிதித் தேவைகளை ஒருவரால் சரியாகப் பூர்த்தி செய்துகொள்ள முடியும். மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளுக்குப் பொருத்தமான கால அளவு தேவை. சரியான கால அளவிலான முதலீடு, எதிர்பார்க்கப்படும் வருமானத்தைப் பெறுவதற்கான சிறந்த வாய்ப்பை மட்டுமல்லாது, முதலீட்டில் உள்ள ரிஸ்க்கையும் குறைத்துவிடும்” என்றார்.

யாருக்கு எந்தக் காலம்?

குறுகிய காலம் என்பது 6 மாதம் - 1 வருடம் வரை, நடுத்தரகாலம் என்பது 3 - 5 வருடங்கள் வரை, நீண்டகாலம் என்பது 10 வருடங் களுக்குமேல் என முதலீட்டுக் காலமானது நிதி ஆலோசகர்களால் வகைப்படுத்தப்படுகிறது. முதலீட்டுக் காலத்தைப் போலவே, குறைந்த ரிஸ்க் தன்மை உடையவர்கள் (குறுகிய காலம்), நடுத்தர ரிஸ்க் தன்மை உடையவர்கள் (நடுத்தர காலம்) மற்றும் அதிக ரிஸ்க் எடுத்து, முதலீடு செய்பவர்கள் (நீண்ட காலம்) என முதலீட்டாளர் களையும் மூன்று வகைகளாகப் பிரிக்கிறார்கள்.

இளம் வயதினருக்கு வருவாய் ஈட்டுவதற்கான காலம் அதிகமாக இருப்பதால், இவர்கள் நீண்ட கால முதலீட்டுத் திட்டங்களைத் தேர்வு செய்யலாம். குறைந்தபட்சம், நடுத்தர ரிஸ்க் கொண்ட முதலீடுகளையாவது தேர்வு செய்வது சிறந்தது. இவர்கள் குறைவான ரிஸ்க் கொண்ட குறுகியகாலத் திட்டங்களைத் தேர்வு செய்தால், தேவைப்படும் நிதியைக் குறிப்பிட்ட காலத்துக்குள் சம்பாதிக்க முடியாது. உதாரணமாக, குழந்தையின் மேற்படிப்புக்கு ரூ.15 லட்சம் தேவையெனில், நீண்டகாலத்தில் 10 சதவிகிதத்துக்குமேல் வருமானம் தரக்கூடிய திட்டங்களில்தான் முதலீடு செய்ய வேண்டுமே தவிர, 6 - 7% வருமானம் தரக்கூடிய வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் போன்ற திட்டங்களை நாடக் கூடாது. ஆனால், நம் நாட்டில், பெரும்பாலான இளைஞர்கள் குறைந்த ரிஸ்க் தன்மை கொண்டவர்களாகவே இருக்கிறார்கள் என்பது வருத்தத்துக்குரிய உண்மை. முதலீடு, ரிஸ்க், வருமானம், பணவீக்கம் போன்றவற்றைப் பற்றி உண்மைகளை அறியாததால், இப்படிச் செய்கிறார்கள்.

முதலீட்டைப் பொறுத்தவரை, இளைஞர்கள் ஓரளவு ரிஸ்க் எடுத்து நீண்டகால முதலீட்டில் நல்ல வருமானம் தரும் மியூச்சுவல் ஃபண்ட், பங்குச் சந்தை போன்ற திட்டங்களை நன்கு புரிந்துகொண்டு நாடலாம். வயதானவர்கள் ரிஸ்க் குறைவான குறுகியகாலத் திட்டங்களை நாடலாம். இவர்கள் குறைந்த அளவிலான ரிஸ்க் உள்ள முதலீட்டுத் திட்டங்களைத் தேர்வு செய்து, தங்கள் ஓய்வுக்காலம் உட்பட எல்லா எதிர்காலத் தேவைகளுக்கான நிதியைச் சேர்த்தும் மகிழ்ச்சியாக வாழலாம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

“முதலீட்டாளர்கள் பொதுவாக, தங்கள் ரிஸ்க் அடிப்படையில் முதலீட்டு முடிவுகளை எடுப்பார்கள். ரிஸ்க் என்பது முதலீட்டாளர்களின் வயதைப் பொறுத்து மாறுபடும். அதாவது, அவருடைய வருமானம் ஈட்டும் காலத்தைப் பொறுத்து மாறுபடும். பொதுவாக, குறைந்த, நடுத்தர மற்றும் அதிக ரிஸ்க் என மூன்று ரிஸ்க் நிலைகள் இருக்கின்றன.

முதலீட்டுக் காலத்தின் முக்கியத்துவம்..! - யாருக்கு எந்த முதலீடு ஏற்றது?

முதலீட்டுத் திட்டங்களைப் பொறுத்தவரை, குறைந்த ரிஸ்க்குக்கு ஏற்ற திட்டங்களும், அதிக ரிஸ்க்குக்கு ஏற்ற திட்டங்களும் மற்றும் நடுத்தர ரிஸ்க்குக்கு ஏற்ற திட்டங்களும் உள்ளன. இந்தத் திட்டங்களை முதலீட்டாளர்கள் அவர்களாகவே தேர்வு செய்துகொள்ள முடியாது என்பதால், முதலீட்டு ஆலோசகருடன் ஆலோசித்து முடிவெடுப்பது நல்லது. ஒருவரின் எதிர்காலத் தேவை என்ன, அந்தத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்கான காலகட்டம் எவ்வளவு என்பதைத் தெளிவாகச் சொல்லும் போது, அதற்கான திட்டமிடலை நிதி ஆலோசகர்கள் வழங்குவார்கள்” என்றார் நிதி ஆலோசகரான பி.பத்மநாபன்.

எந்தக் காலத்துக்கு எந்த முதலீடுகள்?

குறுகியகால முதலீட்டுக்கு அல்லது குறைந்த அளவிலான ரிஸ்க் எடுக்க நினைப்பவர்கள் (Conservative) தங்களின் தேவைக்கு அஞ்சலகச் சேமிப்பு, வங்கி டெபாசிட், கோல்டு இ.டி.எஃப் ஃபண்டுகள் ஆகிய திட்டங்களைப் பயன் படுத்திக்கொள்ளலாம். இவற்றில் தங்கம் சார்ந்த முதலீடுகளும் ஏற்ற இறக்கத்துக்கு உட்பட்டது என்பதை மறக்க வேண்டும். பங்குச் சந்தையுடன் ஒப்பிடும்போது, தங்கம் பெரிய ஏற்ற இறக்கத்துக்கு உட்படாது. அதே வேளையில், அவற்றின் வருவாயும் குறைவாகவே இருக்கும். நீண்டகாலம் எனில், பணவீக்கத்தைத் தாண்டி வருவாயைப் பெறுவதற்கான வாய்ப்பு உண்டு. நடுத்தர ரிஸ்க் (Moderate) எடுக்கக் கூடியவர்கள் லிக்விட் ஃபண்டுகள் மற்றும் பேலன்ஸ்டு ஃபண்டுகளைத் தேர்ந்தெடுக்கலாம். அதிக ரிஸ்க் எடுக்கக்கூடியவர்கள் பங்குகள் மற்றும் ஈக்விட்டி சார்ந்த ஃபண்டுகளைத் தேர்வு செய்யலாம்.

சுரேஷ் பார்த்தசாரதி, பி.பத்மநாபன்
சுரேஷ் பார்த்தசாரதி, பி.பத்மநாபன்

எந்தத் தேவைக்கு எந்தக் காலம்?

நீண்டகால முதலீடுகள் என்பவை, கல்லூரிப் படிப்பு, பிள்ளைகளின் திருமணம், சொந்த வீடு, ஓய்வுக்காலம் போன்றவற்றுக்கு உதவுவதை இலக்காகக் கொண்டவை. நடுத்தரகாலம் என்பது, கார் வாங்குவது, சொந்த தொழிலுக்கான முதலீட்டுக்கு, வீட்டுக் கடன் வாங்கும் முன்பணத்துக்கு ஏற்றவையாக இருக்கும். குறுகியகாலம் என்பது, வெளிநாட்டுச் சுற்றுலா அல்லது பிள்ளைகளின் வருடாந்தர கல்விக் கட்டணம், கேட்ஜெட் வாங்குவது தொடர்பான தேவைகளுக்கு ஏற்றவையாக இருக்கும்.

நீண்டகாலத்தின் முக்கியத்துவம்!

நீண்டகால முதலீட்டுக்கு ஈக்விட்டி சார்ந்த திட்டங்கள் (65 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட முதலீடு பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்பட்டவை) சரியானவை. ஹைப்ரிட் மற்றும் டெப்ட் ஃபண்டுகளுடன் ஒப்பிடும்போது, ஈக்விட்டி சார்ந்த குறுகியகாலத்தில் அதிக ஏற்ற இறக்கங்களைக் கொண்டிருந்தாலும், நீண்டகாலத்தில் அதிக லாபத்தைத் தரும் சாத்தியம் கொண்டவை.

முதலீட்டுக் காலத்தின் முக்கியத்துவம்..! - யாருக்கு எந்த முதலீடு ஏற்றது?

நீண்டகால அடிப்படையில் முதலீடுகளைச் செய்யும்போது ஒரு சில வருடங்களில் ஏற்படும் குறைந்த வருமானமும் அல்லது நஷ்டமும் (Negative return), ஒரு சில வருடங்களில் ஏற்படும் நேர்மறையான வருமானமும் (Positive return) ஒன்றிணைந்து நியாயமான சராசரி வருமானத்தை வழங்கிவிடும். எனவே, ஆண்டுதோறும் மாறுபடுகிற வருமானத்தின் சராசரியின் மூலம் நிலையான நீண்டகால வருமானத்தை முதலீட்டாளர்கள் பெறமுடியும். இதனால் ரிஸ்க் அதிகம் கொண்ட முதலீட்டுத் திட்டங்களைத் தேர்வு செய்தால்கூட, நீண்டகால முதலீடு என்பதால் அதிலுள்ள ரிஸ்க் குறைக்கப்படும்.

எனவே, இனிவரும் நாள்களிலாவது தேவைக்கான காலத்தைப் பொறுத்து உங்கள் முதலீட்டைத் தேர்வு செய்யுங்கள்!

நீண்டகாலத்துக்கு பங்குச் சந்தை முதலீடு!

- ம.அசோக், சென்னை.

முதலீட்டுக் காலத்தின் முக்கியத்துவம்..! - யாருக்கு எந்த முதலீடு ஏற்றது?

“எனக்கு பங்குச் சந்தை முதலீட்டின்மீது சிறுவயது முதலே ஆர்வம் அதிகம். படித்துக்கொண்டிருக்கும்போதே பங்குச் சந்தையில் முதலீடு செய்ய ஆரம்பித்துவிட்டேன். லாபம் தரக்கூடிய பங்குகள் எனத் தெரிந்தால், அதை நான் நீண்ட காலம் வரை வைத்திருப்பேன். ஆனால், குறுகியகால அளவில் லாபம் பார்ப்பதுதான் என்னுடைய பெரும்பாலான இலக்கு.”

தங்கத்தில் எனக்கு 100% லாபம்!

- சுஜாதா, சென்னை.

முதலீட்டுக் காலத்தின் முக்கியத்துவம்..! - யாருக்கு எந்த முதலீடு ஏற்றது?

பொதுவாக, தங்கம் என்றால் பெண்களுக்கு மிகவும் பிடிக்கும். ஆனால், எனக்கு தங்க ஆபரணங்களை அணிய அவ்வளவாகப் பிடிக்காது. இருப்பினும் லாபம் தரும் முதலீடுகளில் ஒன்றாக தங்கம் இருப்பதால், தொடர்ந்து நான் அதில் முதலீடு செய்து வருகிறேன். 2017-ம் ஆண்டிலிருந்து தங்கம் வாங்க ஆரம்பித்தேன். அன்றைய நிலையில் ஒரு கிராம் தங்கம் 2,600 ரூபாய். இன்று ஒரு கிராம் தங்கம் 5,200 ரூபாயைக் கடந்து வர்த்தகமாகி வருகிறது. கணக்குப்படி பார்த்தால், எனக்கு 100% லாபம்தான்.”

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மூலம் கார் வாங்கினேன்!

மனோஜ்குமார், மயிலாடுதுறை

முதலீட்டுக் காலத்தின் முக்கியத்துவம்..! - யாருக்கு எந்த முதலீடு ஏற்றது?

“கார் வாங்க வேண்டும் என்பது என் நீண்டநாள் கனவு. அதற்காக என் முதல் மாதச் சம்பளத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட தொகை ஒதுக்கி வங்கியில் சேமிக்க ஆரம்பித்தேன். வங்கி சேமிப்பைவிட, ஈக்விட்டி ஃபண்டில் நல்ல லாபம் பார்க்கலாம் என நண்பன் சொன்னதால், சில மாதங்களிலேயே எனது முதலீட்டை ஈக்விட்டி ஃபண்டுக்கு மாற்றினேன். எஸ்.ஐ.பி முறையில் மாதம் 10,000 ரூபாயை ஐந்து ஆண்டுகளுக்கு தொடர்ந்து முதலீடு செய்ததில், எதிர்பார்த்ததைவிட நல்ல வருமானம் கிடைத்தது. சீக்கிரமாகவே கார் வாங்கிவிட்டேன்.”

மாதம் ஒரு கிராம் தங்கம்!

எஸ்.பாலம்மாள், அருப்புக்கோட்டை.

முதலீட்டுக் காலத்தின் முக்கியத்துவம்..! - யாருக்கு எந்த முதலீடு ஏற்றது?

“தங்கத்தில் முதலீடு செய்வதைப் பாதுக்காப்பாக உணர்கிறேன். இதுவரை பெரிய அளவிலான விலைவீழ்ச்சியோ, நஷ்டமோ இருந்ததில்லை.

நான் என்னுடைய மகளின் திருமணத்துக்காக தங்கம் வாங்க ஆரம்பித்தேன். 15 வருடத்துக்கு முன் ஒரு கிராம் தங்கத்தை 700 ரூபாய்க்கு வாங்கினேன். இன்று அதன் மதிப்பு ரூ.5,200. ஒவ்வொரு மாதமும் ஒரு கிராம் தங்கம் என வாங்கி வைப்பேன். என் மகளுக்கு இன்று திருமணமாகி, அவளுக்கு 3 வயதில் மகள் இருக்கிறாள். என் மகளும் என்னைப் போலவே, மாதம் ஒரு கிராம் தங்கத்தைச் சேமிக்க ஆரம்பித்திருக்கிறாள். கல்யாணத் தேவைக்காக மட்டுமல்ல, அவசரத் தேவைகளுக்கு வங்கிகளில் அடமானம் வைத்தும் கடன் வாங்க முடியும் என்பதால், எப்போதும் தங்கத்தில் முதலீடு செய்வது நல்லது.”