Published:Updated:

குப்பைகள் அற்ற நகரமா சென்னை... மாநகராட்சி அதிகாரிகளுக்கு மனசாட்சி இருக்கிறதா?

புதுப்பேட்டை பகுதியில் உள்ள குப்பை...
News
புதுப்பேட்டை பகுதியில் உள்ள குப்பை...

`இதுவா குப்பைகள் அற்ற நகரம், இதையா திறந்தவெளி சிறுநீர் கழித்தல் அற்ற மாநகரம்?' என்று அறிவிக்கப்போகிறார்கள்.

குப்பைகள் அற்ற நகரமா சென்னை... மாநகராட்சி அதிகாரிகளுக்கு மனசாட்சி இருக்கிறதா?

`இதுவா குப்பைகள் அற்ற நகரம், இதையா திறந்தவெளி சிறுநீர் கழித்தல் அற்ற மாநகரம்?' என்று அறிவிக்கப்போகிறார்கள்.

Published:Updated:
புதுப்பேட்டை பகுதியில் உள்ள குப்பை...
News
புதுப்பேட்டை பகுதியில் உள்ள குப்பை...

மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், பெருநகர சென்னை மாநகராட்சியை திறந்தவெளி மலம் மற்றும் சிறுநீர் கழித்தல் அற்ற நகரமாகவும், குப்பை இல்லாத நகரமாகவும் அறிவிப்பு செய்யவிருப்பதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளில் பல பகுதிகளில் குப்பைகள் நிறைந்திருக்கும் சூழலில் சென்னை மாநகராட்சி வெளியிட்டிருக்கும் இந்த அறிவிப்பு பலத்த விமர்சனத்துக்குள்ளாகியிருக்கிறது.

மாநகராட்சி வெளியிட்ட செய்தி..
மாநகராட்சி வெளியிட்ட செய்தி..

கடந்த 30-ம் தேதி, இந்தச் செய்தியை வெளியிட்ட சென்னை மாநகராட்சி இதில் பொதுமக்களுக்கு ஏதேனும் ஆட்சேபனை மற்றும் ஆலோசனை இருந்தால் அறிவிப்பு வெளியான நாளிலிருந்து 15 நாள்களுக்குள் (Solidwastecorp7@gmail.com) என்ற இ-மெயில் முகவரி மூலமாகவோ, மேற்பார்வை பொறியாளர், திடக்கழிவு மேலாண்மைத் துறை, பெருநகர மாநகராட்சி சென்னை - 600 003 என்ற முகவரிக்கு கடிதம் மூலமாகவோ தெரிவிக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளது.

மக்கள் கருத்து தெரிவிப்பதற்கு முன்பு, உண்மையிலேயே சென்னை மாநகராட்சி குப்பைகள் அற்ற நகரமாகவும் திறந்தவெளி மலம் மற்றும் சிறுநீர் கழித்தல் அற்ற நகரமாகவும் இருக்கிறதா? என்று உறுதி செய்வதற்காக சென்னை மாநகராட்சிக்குட்பட்ட சில பகுதிகளுக்கு நாம் நேரில் சென்றோம்.

புதுப்பேட்டை...

முதலாவதாக நாம் சென்ற இடம் புதுப்பேட்டை. கூவம் நதிக்கரையை ஒட்டியுள்ள அந்தச் சாலையின் இருபுறமும் குப்பைகள்தான் நிறைந்திருந்தன. சற்றுதூரம் பயணிப்பதற்குள்ளாகவே சாலையின் ஓரங்களில் திறந்த வெளியில் பலர் சிறுநீர் கழிப்பதையும் பார்க்க முடிந்தது. `இதுவா குப்பைகள் அற்ற நகரம், இதையா திறந்தவெளி சிறுநீர் கழித்தல் அற்ற மாநகரம்?' என்று அறிவிக்கப்போகிறார்கள் என்ற கேள்வியுடனேயே அந்தப் பகுதியைக் கடந்தோம்.

புதுப்பேட்டை பகுதியில் உள்ள குப்பை...
புதுப்பேட்டை பகுதியில் உள்ள குப்பை...

சிந்தாதிரிப்பேட்டை...

அடுத்து நாம் சென்ற இடம் சிந்தாதிரிப்பேட்டை. அங்கும் பல இடங்களில் திறந்த வெளியில் குப்பைகள் நிறைந்திருக்கவே செய்தன. சில இடங்களில் குப்பைத்தொட்டிகள் நிரம்பி வழிந்த நிலையில், தொட்டியைச் சுற்றியும் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. அதுமட்டுமல்ல அங்கும் பலர் சாலையோரங்களில் திறந்த வெளியில் சிறுநீர் கழிப்பது வெகு இயல்பாக நடக்கிறது. அடுத்ததாக நாம் சென்ற இடம் சேத்துப்பட்டு, பல இடங்கள் சுத்தமாக இருந்தாலும் சில இடங்களில் ஆங்காங்கே குப்பைகள் இருக்கவே செய்கின்றன. குறிப்பாக, ரயில்வே டிராக்கை ஒட்டியுள்ள பகுதியில் குப்பை குவிந்திருந்தது.

சாலையோர குப்பைகள்!

200 வார்டுகளை உள்ளடக்கிய பெருநகர மாநகராட்சியில் நாம் சென்றது இரண்டு மூன்று பகுதிகள்தான் அங்கேயே இவர்கள் சுத்தம் பல்லிளித்துவிட்டது. 200 வார்டுகளையும் வலம்வந்தால் இப்படி குப்பைகள் நிறைந்திருக்கும் பல பகுதிகளைப் பார்க்கலாம் என்ற அளவுக்கே யதார்த்தம் இருக்கிறது. குப்பைகள் நிறைந்திருக்கும் பகுதியில் பொதுமக்கள் சிலரிடம் பேசினோம், ``குடியிருப்புப் பகுதிகளில் பெரும்பாலும் குப்பை வண்டிகள் வந்து குப்பைகளை எடுத்துச் சென்றுவிடுகின்றனர். ஆனால், பொது இடங்களில் சாலை ஓரங்களில் கொட்டப்படும் குப்பைகள் கேட்பாரற்றுக் கிடக்கின்றன. இங்கே குப்பைகள் கொட்ட வேண்டாம் என்று சொல்லும் அதிகாரிகள் அதைத் தடுப்பதற்கோ, மாற்று ஏற்பாடு செய்யவோ எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை" என்கின்றனர்.

சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் உள்ள குப்பை
சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் உள்ள குப்பை

திறந்தவெளியில் அசுத்தங்கள்..

திறந்தவெளியில் சிறுநீர் கழிப்பது குறித்துக் கேட்டதற்கு, ``ஒவ்வொரு வருடமும் ஆங்காங்கே அரசு பொதுக்கழிப்பிட வசதிகளை ஏற்படுத்திக்கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், அதற்காக பல கோடிகள் பணம் செலவழிக்கப்படுகிறதே ஒழிய பலன் ஒன்றும் இல்லை என்பதே கசப்பான உண்மை. காரணம், கழிப்பிடம் கட்டி திறந்து வைப்பதோடு தங்கள் கடமை முடிந்துவிட்டதென ஒதுங்கிக்கொள்ளும் அரசாங்கம் அதன் பராமரிப்பு குறித்து கவலைப்படுவதே இல்லை.

சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் நிரம்பி வழியும் குப்பை...
சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் நிரம்பி வழியும் குப்பை...

முறையான பராமரிப்பு இல்லாததால் புதிதாகத் திறக்கப்பட்ட கழிப்பிடங்கள்கூட பயன்படுத்தாத நிலையிலேயே இருக்கின்றன. இதுபோன்ற அவல நிலையெல்லாம் எளிய மக்கள் வாழக்கூடிய பின்தங்கிய பகுதிகளில்தான். மேல்தட்டு மக்கள் வசிக்கக்கூடிய பகுதிகள் மிகவும் சுத்தகமாக இருக்கின்றன. அதிகாரிகள், அரசியல்வாதிகள் வசிக்கும் பகுதிகளுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை எளிய மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு என்று கொடுக்கிறார்களோ அன்றைக்குத்தான் இந்த நகரம் சுத்தமாக மாறும்" என்று கவலை தெரிவிக்கின்றனர்.

சுகாதாரக் கேடு...

இந்தப் பிரச்னையின் இன்னொரு பார்வை குறித்தும் பேசிய அவர்கள், ``சென்னை மாநகராட்சி பொதுவெளியில் சிறுநீர் மற்றும் மலம் கழித்தல் அற்ற நகரம் என்ற முடிவுக்கு எந்த அடிப்படையில் வந்தார்கள் அதற்கு என்ன அளவுகோல் வைத்திருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. மனிதர்கள் பொதுவெளியில் மலம் மற்றும் சிறுநீர் கழித்தால்தான் சுகாதாரக்கேடா? செல்லப்பிராணிகள் வளர்க்கிறார்களே அவற்றில் பெரும்பாலோனோர் தங்கள் பிராணிகளை மலம் சிறுநீர் கழிக்க பொது இடங்களுக்குத்தான் அழைத்து வருகின்றனர். அது சுகாதாரக் கேடாக மாறாதா?" என்று கேள்வி எழுப்புகின்றனர்.

சேத்துப்பட்டு பகுதியில்...
சேத்துப்பட்டு பகுதியில்...

சுத்தம் என்றால் அவை எல்லாவற்றையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். உண்மையிலேயே இந்த நகரம் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதுதான் எல்லோருடைய விருப்பமும். பேருக்காக அறிவித்துவிட்டு பெருமை தேட நினைப்பது எந்த வகையிலும் பயன்தராது. மக்களிடம் கருத்துக் கேட்பதற்கு முன்பு 200 வார்டுகளையும் மாநகராட்சி அதிகாரிகள் சுற்றிப் பார்க்க வேண்டும்!

உங்கள் பகுதியின் நிலையை Solidwastecorp7@gmail.com என்ற இ-மெயில் முகவரி மூலமாகவோ அல்லது மேற்பார்வை பொறியாளர், திடக்கழிவு மேலாண்மைத் துறை, பெருநகர மாநகராட்சி சென்னை- 600 003 என்ற முகவரிக்கு கடிதம் மூலமாகவோ தெரிவிப்பதுடன் கமென்டிலும் சொல்லுங்கள் சென்னை வாசிகளே...