Published:Updated:

அதிகாரத் திமிர்: அடித்து நொறுக்கிய நீதிபதி... ஆமோதிப்பாரா முதல்வர் ஸ்டாலின்?

சென்னை உயர் நீதிமன்றம்
News
சென்னை உயர் நீதிமன்றம்

உழைத்து உழைத்து ஓடாய்தேய்ந்து கொண்டிருக்கும் அப்பாவி மக்களிடம் அதிகாரத் திமிரோடு பணம்பறித்து சொகுசு வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கும் `அராஜக... அதிகார' கூட்டத்துக்கு கடிவாளம் போடுவாரா முதல்வர் ஸ்டாலின்?

அதிகாரத் திமிர்: அடித்து நொறுக்கிய நீதிபதி... ஆமோதிப்பாரா முதல்வர் ஸ்டாலின்?

உழைத்து உழைத்து ஓடாய்தேய்ந்து கொண்டிருக்கும் அப்பாவி மக்களிடம் அதிகாரத் திமிரோடு பணம்பறித்து சொகுசு வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கும் `அராஜக... அதிகார' கூட்டத்துக்கு கடிவாளம் போடுவாரா முதல்வர் ஸ்டாலின்?

Published:Updated:
சென்னை உயர் நீதிமன்றம்
News
சென்னை உயர் நீதிமன்றம்

`நான்தான் ராஜா... நாங்க வெச்சதுதான் சட்டம்' என்பதுதான் அரசாங்க அதிகாரிகள் வெகுபேருடைய நினைப்பு. ஒருவகையில் அது உண்மையும்கூட. பின்னே, அவர்கள் நினைத்தால்தானே எதையுமே செய்யமுடிகிறது.

அவர்களுக்குத் தேவையென்றால், அரை மணி நேரத்தில் ஒரு கிலோமீட்டருக்கு சாலையே போடுவார்கள். அதேசமயம், பொதுமக்களுக்கு என்றால், 60 ஆண்டுகளானாலும் அலையவிடுவார்களே தவிர, ஒருபோதும் கடமையை உணரவே மாட்டார்கள்.

திருவாரூர்
திருவாரூர்

ஒரு பட்டா மாறுதல், சாதிச்சான்றிதழ், குடிநீர் இணைப்பு, டிரைவிங் லைசென்ஸ் என்று அடிப்படைத் தேவைக்காக போய் நின்றால்கூட, துளியும் மரியாதை கொடுக்க மாட்டார்கள். அத்தனையும் டிஜிட்டல் மயமாகிவிட்டது. பொதுமக்கள் ஒரு பைசா செலவில்லாமல் அனைத்தையும் வாங்கிக்கொள்ளலாம் என்று மேடைக்கு மேடை அமைச்சர்களும் உயரதிகாரிகளும் முழங்கினாலும், கொள்ளைக்கார அதிகாரிகளுக்குப் 'படி அளக்காமல்' ஓர் அணுவும் அசையாது என்பதுதான் நிதர்சனம். இத்தகைய எதேச்சதிகார போக்குக்குத்தான் சமீபத்தில் சாட்டையடி கொடுத்திருக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்.

2015-ம் ஆண்டில், திருவாரூர் அரசு மருத்துவமனையின் தவறான சிகிச்சை காரணமாக, செம்மங்குடி கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமாரி என்பவரின் பார்வை பறிபோனது. இதுதொடர்பாக புகார் கொடுத்தும் நடவடிக்கை ஏதும் இல்லை என்பதால், திருவாரூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார் விஜயகுமாரி. '5 லட்சம் ரூபாய் நஷ்டஈடு தர வேண்டும்' என்று 2016-ம் ஆண்டு தீர்ப்பு கொடுத்தது நீதிமன்றம். ஆனால், அதற்குப் பிறகும் அதிகார வர்க்கம் அசையவே இல்லை. கண்பார்வையில்லாத விஜயகுமாரியை கொஞ்சமும் இரக்கமில்லாமல்,  அலையவிட்டார்களே தவிர தீர்வைத் தரவில்லை. திருவாரூர் நீதிமன்றத்தின் தீர்ப்பு தவறானது என்றால், மேல்முறையீடு செய்திருக்கலாம். அதையும் செய்யாமல் அதிகாரத் திமிரோடு அந்த விஷயத்தையே கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனர்.

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை
திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை

இந்நிலையில், பரிதாபத்துக்குரிய விஜயகுமாரி, மீண்டும் திருவாரூர் நீதிமன்றத்தை நாட, `தீர்ப்பை நிறைவேற்றாத காரணத்தால் திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் மற்றும் மருத்துவமனை டீன் அலுவலகம் இரண்டிலும் உள்ள அசையும் சொத்துக்களை ஜப்தி செய்ய வேண்டும்' என்று கடந்த செப்டம்பர் மாத இறுதியில் அதிரடி உத்தரவு போட்டார் திருவாரூர் நீதிபதி எஸ்.சரண்யா.

இதற்குப் பிறகு மெள்ள சோம்பல் முறித்த அதிகாரவர்க்கம், `ஜப்தி உத்தரவை ரத்து செய்ய வேண்டும்' என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு போட்டது. இதை விசாரித்த நீதிபதி எம்.எஸ்.சுப்பிரமணியம்தான், அதிகாரத் திமிருக்கு எதிராக சாட்டையைச் சுழற்றியுள்ளார்.

`இப்படி மக்கள் புழங்கும் அலுவலகத்தை ஜப்தி செய்தால், அது அரசாங்கத்துக்கு அசௌகரியம் ஏற்படும்' என்று அதிகாரிகள் சார்பில் வாதிட்ட அரசு வழக்கறிஞர் சொல்ல, அதையும்கூட தன் தீர்ப்பில் கடுமையாக விமர்சித்திருக்கிறார் நீதிபதி.

திருவாரூர் காவல்துறையினர்
திருவாரூர் காவல்துறையினர்

திருவாரூர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்ய மறுத்த நீதிபதி, `ஆறு ஆண்டுகளாக கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டு இப்போது வந்து நிற்பது ஏன்? ஜனவரி மாத இறுதிக்குள் விஜயகுமாரிக்கு சேர வேண்டிய தொகையைத் தர வேண்டும் என்று கறாராக உத்தரவிட்டார். இத்தோடு சேர்த்து கூடுதலாக ஓர் உத்தரவையும் பிறப்பித்திருப்பதுதான் அசத்தல்.

`கடமையைச் செய்ய வேண்டிய அதிகாரிகள் அந்தப் பொறுப்பை உணர்ந்து நடக்காததால் அரசாங்கத்துக்கு ஏற்படும் இழப்புகளுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள்தான் பொறுப்பு. எனவே, தவறான சிகிச்சை அளித்த மருத்துவர் மற்றும் அதற்குக் காரணமாக இருந்தவர்களிடம் இருந்து நஷ்டஈட்டுக்கான தொகையை வசூல் செய்ய வேண்டும்' என்று அதிரடியாகக் கூறியுள்ளார் நீதிபதி.

பொதுவாகவே, அரசாங்கமோ, அதிகாரிகளோ தவறிழைத்தால் அதை யாருமே தட்டிக்கேட்கக் கூடாது என்கிற மனநிலைதான் அதிகார வர்க்கத்திடம் குடிகொண்டிருக்கிறது. அப்படியே நீதிமன்றம் வரைக்கும் யாராவது சென்றால், அரசாங்க செலவில் வக்கீல் வைத்து வாதாடுவதான் ஆண்டாண்டு காலமாக வழக்கத்திலிருக்கிறது. தவறு இழைத்தவரே, அரசாங்க பணத்தில் தனக்கு பாதுகாப்புக் கவசத்தையும் செய்துகொண்டு விடுவார்.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

இதுபோன்ற `அரசாங்க பாதுகாப்பு' இருப்பதால்தான் பெரும்பாலான அதிகாரிகள் பொதுமக்களை ஒரு பொருட்டாகவே மதிப்பது கிடையாது. ஆம், ஆளும் அரசியல்வாதிகளுக்கு சகல வசதிகளையும் இதுபோன்ற அதிகாரிகள் செய்து கொடுத்து விடுவதால், `அவர்கள் காப்பாற்றிவிடுவார்கள்' என்கிற பரம்பரை தைரியத்தோடுதான் உலா வருகின்றனர் லஞ்சப்பைகளோடு!

அந்த அசட்டுத் தைரியத்தைக் கொஞ்சம் அசைத்துப் பார்த்திருக்கிறார் நீதிபதி சுப்பிரமணியம். ஆனால், இதற்குப் பிறகும் ஆளும் அரசியல்வாதிகள், அதிகாரத் திமிரோடு இருக்கும் அதிகாரிகள் அடங்குவார்களா என்பது கேள்விக்குறியே! ஒருவேளை இந்த வழக்கை உச்ச நீதிமன்றத்துக்குக் கொண்டு சென்றால், அங்கு என்ன தீர்ப்புவருமோ தெரியாது. சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு ரத்துகூட செய்யப்படலாம்...

 ஆனால், அப்படியொரு நிலை ஏற்படாமல் தடுக்க வேண்டிய பொறுப்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்குத்தான் இருக்கிறது. `இந்த அரசு மக்களுக்கானது. ஓட்டுப்போடாத மக்களுக்கும் சேர்த்தேதான் நான் உழைக்கிறேன்' என்று அடிக்கடி மேடையில் முதல்வர் முழங்குவது உளப்பூர்வமானதுதான் என்றால், தற்போது சென்னை உயர் நீதிமன்றம் தந்திருக்கும் தீர்ப்பின் அடிப்படையில், ஒழுங்காக வேலை செய்யாமல் ஊரை ஏமாற்றிக் கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் அதிகாரிகளுக்குக் கடிவாளம் போடும் வகையில், `இனி அரசாங்கத்துக்கு ஏற்படும் இழப்புகளுக்கு அதிகாரிகள்தான் பொறுப்பு.

தமிழக அரசு
தமிழக அரசு

அதுமட்டுமல்ல, இதுபோன்ற இழப்புகளுக்கு மக்கள் பிரதிநிதிகள் காரணமாக இருந்தால், அவர்களும்தான் பொறுப்பு' என்பதை உறுதியோடு நிலைநாட்ட வேண்டும். அதாவது, அரசாங்கத்தின் செயல்பாடுகள் காரணமாக நஷ்டஈடு கொடுக்கும் நிலை ஏற்பட்டால், இந்த விஷயத்தில் நேரடியாக சம்பந்தப்பட்ட அதிகாரி அல்லது மக்கள் பிரதிநிதிதான் நஷ்டஈடு தர வேண்டும் என்பதை சட்டமாகவே ஆக்கலாம்.

உழைத்து உழைத்து ஓடாய்தேய்ந்து கொண்டிருக்கும் அப்பாவி மக்களிடம் அதிகாரத் திமிரோடு பணம்பறித்து சொகுசு வாழ்க்கை நடத்திக்கொண்டிருக்கும் 'அராஜக... அதிகார' கூட்டத்துக்கு கடிவாளம் போடுவாரா முதல்வர் ஸ்டாலின்?

- பூநி