வெளியிடப்பட்ட நேரம்: 14:26 (04/11/2016)

கடைசி தொடர்பு:17:51 (05/12/2016)

‘எம்.ஜி.ஆரிடம் கெஞ்சிய ஜெயலலிதா...!’ : மைசூரு முதல் - 81, போயஸ் கார்டன் வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்! - 17

இந்தத் தொடரின் முந்தைய பகுதிகளைப் படிக்க கீழுள்ள இணைப்பை கிளிக் செய்யுங்கள்

 

 

பகுதி 1 | பகுதி 2 | பகுதி 3 | பகுதி 4 | பகுதி 5 | பகுதி 6 | பகுதி 7 | பகுதி 8 | பகுதி 9| பகுதி 10 | பகுதி 11 | பகுதி 12 | பகுதி 13 | பகுதி 14 |பகுதி 15

| பகுதி 16

ந்த முன்முடிவுகளும் இல்லாமல், அகங்காரம் அற்ற வார்த்தைகளை தன் ஆன்மாவிலிருந்து பொறுக்கி எடுத்து உரையாடும்போது  எவர் மனதையும் வென்றெடுக்க முடியும் தானே...? இங்கு எவரையும் வென்றெடுத்து எதுவும் ஆகப் போவதில்லை. ஆனால், அதுபோன்ற உரையாடல்களால், ஒரு இணக்கத்தை நிச்சயம் ஏற்படுத்தலாம் தானே...?  அதுபோன்ற ஒரு உரையாடலுக்காகத் தான், ஜெயலலிதா கண்ணீரால் வார்த்தைகளை ஈரப்பிசுபிசுப்பாக்கி வைத்து காத்திருந்தார். அந்த ஈரத்தில் எம்.ஜி.ஆரின் மனதை கரைத்துவிட வேண்டும்... மீண்டும் அவர் மனதில் இடம்பிடிக்க வேண்டும். அதன் மூலம் கட்சியிலும் முக்கியத்துவம் பெற வேண்டும். ஆனால், அது நிகழ அல்லது அதை நிகழ்த்த ஜெயலலிதா பெரும்பாடுதான் பட்டார்.


‘கோபமடைந்த எம்.ஜி.ஆர்’

அமெரிக்காவிலிருந்து திரும்பிய எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவைச் சந்திப்பதைத் தவிர்த்தார்.  அமெரிக்காவிலிருந்து அவர் திரும்பியதும், அவரிடம் இங்கு நிகழ்ந்தது அனைத்தையும் சொல்லி, தனக்கு ஏற்பட்ட அநீதியை விவரித்து முறையிடலாம் என்று நினைத்திருந்த ஜெயலலிதாவுக்கு, எம்.ஜி.ஆர் தன்னை தவிர்ப்பது விவரிக்க முடியாத சோகத்தை ஏற்படுத்தியது.

 

எம்.ஜி.ஆர் எப்போதும்  தன் அனுமதி இல்லாமல் கட்சிக்காரர்கள், பத்திரிகையாளர்களை சந்திப்பதை விரும்பியதில்லை. ஊடகங்களை அவரே கையாண்டார். ஆனால், ஜெயலலிதா இந்த விதியை மீறினார். பத்திரிகையாளர்களைச் சந்தித்து பரபரப்பை கிளப்பினார்.   இது அவருக்கு கோபத்தை ஏற்படுத்தியது. “நான்  உடல்நிலை சரி இல்லாமல் மருத்துவமனையில் இருக்கும்போது. பத்திரிகையாளர்களை மட்டும் சந்தித்து இருந்தால்  பரவாயில்லை... குழப்பங்களை விதைத்து இருக்கிறார். அது மட்டுமா? தன் மனைவி ஜானகியைப் பற்றியும் தவறாகப் பேசி இருக்கிறார்...  இனி, ஜெயலலிதாவை தொலைவிலேயே வைக்க வேண்டும்” என்ற முடிவுக்கு வந்தார்.   

சென்ற அத்தியாயத்தில் ஜெயலலிதா டெல்லியில் பேட்டி கொடுத்தார் என்று பார்த்தோம் அல்லவா...? அந்த பேட்டியில், ஜானகி - எம்.ஜி.ஆர் திருமண பந்தம் குறித்தும் சில வார்த்தைகளை பேசி இருந்தார். இதுதான்  எம்.ஜி.ஆரை, மிகவும் கோபப்படுத்தியது. எதை மறந்தாலும், மன்னித்தாலும்... ஜானகியை தவறாகப் பேசியதை மன்னிக்க அவர் தயாராக இல்லை.  

ஜெயலலிதாவை எம்.ஜி.ஆர் ஓரம்கட்டியதைப் பார்த்து, கட்சியின் முன்னணி தலைவர்கள் அகம் மகிழ்ந்துதான் போனார்கள். இனி எப்போதும், ஜெயலலிதா - எம்.ஜி. ஆர் சந்திப்பு நிகழ்ந்து விடக் கூடாது என்பதில் கண்கொத்திப் பாம்பாக கவனித்துக் கொண்டார்கள். ஆம், அவர்களுக்கு நன்கு தெரிந்துதான் இருந்தது, மீண்டும் இருவரும் சந்தித்தால், ஜெயலலிதா, எம்.ஜி.ஆரின் மனதை கரைத்து விடுவார் என்று... இறுதியில் அதுதான் நிகழ்ந்தது.

‘டெல்லியில் நிகழ்ந்த சந்திப்பு’

அமெரிக்காவில் இருந்து திரும்பிய பின்னர் குரல் சிகிச்சைக்காக எம்.ஜி.ஆர் ஜப்பான் சென்றிருந்தார். டெல்லி வழியாக தமிழகம் திரும்புவது தான்  திட்டம். ஜெயலலிதா எம்.ஜி.ஆரை  டெல்லியில் சந்திக்கத் திட்டமிட்டார். அங்குதான் மற்றவர்கள் தொல்லை இல்லாமல் சந்திக்க முடியும் என்பது அவரது எண்ணம். அவரது எண்ணமும், திட்டமும் வீண் போகவில்லை. இருவரும் சந்தித்தார்கள். தன் கண்ணீருடன் கூடிய வார்த்தைகளால், எம்.ஜி.ஆரின் மனதைக் கரைத்தார். மீண்டும் கட்சியில் காட்சிக்கு வந்தார். ஏறத்தாழ ஓராண்டுக்குப் பின், மீண்டும்  அவருக்கு கொள்கை பரப்புச் செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது. ஆனாலும், ஜெயாவை உள்ளாட்சி தேர்தலில் பிரசாரம் செய்ய எம்.ஜி.ஆர் அனுமதிக்கவில்லை. அவரும் பிரசாரம் செய்யாததால், கட்சி மோசமான தோல்வியைச் சந்தித்தது.

அ.தி.மு.க-வின் வேர்களே எம்.ஜி.ஆர் ரசிகர்கள் தானே...கட்சியை வலுப்படுத்த வேண்டுமென்றால், வேர்களை பலப்படுத்த  வேண்டும் அல்லவா...? எம்.ஜி.ஆர் இதனை உணர்ந்தார். மதுரையில் மாபெரும் ரசிகர் மன்ற மாநாட்டை ஒருங்கிணைத்தார். அந்த மாநாட்டுக்கு எம்.ஜி.ஆர், ஜானகி, ஜெயலலிதா மூவரும் ஒன்றாக பயணம் செய்கிறார்கள். அந்த மாநாட்டில் ஜெயலலிதாவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. கட்சியின் மூத்த நிர்வாகிகள், ரசிகர் மன்ற ஆட்கள் இருக்கும்போது... தனக்கு ஆறடி செங்கோலை விழா மேடையில் ஜெயா பரிசாக அளிக்க, எம்.ஜி. ஆர் இசைவு தந்தார். இது எதையும் ஜானகி ரசிக்கவிலை.  

அந்த மேடையில்  தன்னை  ‘எம்.ஜி.ஆர் ரசிகர் மன்ற’ தலைவராக நியமனம் செய்வார். அதற்கான அறிவிப்பை எல்லோர் முன்பும் அறிவிப்பார் என்று ஜெயலலிதா எதிர்பார்த்தார். ஆனால், அதை எம்.ஜி.ஆர் செய்யவில்லை. அது மட்டுமல்லாமல், மதுரையிலிருந்து திரும்ப வரும்போது, ஜெயலலிதாவை அவர் கண்டு கொள்ளவே இல்லை. ஆம், அவரை தனியாக விட்டு...  ஜானகியுடன் சென்னை திரும்பினார் எம்.ஜி.ஆர், இதை ஜெயலலிதா சற்றும் எதிர்பார்க்காவில்லை.... ரசிகர்கள் முன் இவ்வாறு நடந்தது, அவருக்கு மிகவும் அவமானமாகி விட்டது.  கட்சியின் மூத்த தலைவர்கள் நம்பினார்களோ இல்லையோ... ரசிகர்கள் அப்போதே நம்பி விட்டார்கள் எம்.ஜி.ஆருக்குப் பின் ஜெயலலிதா தான் என்று...அவர்கள் முன் எம்.ஜி.ஆர் இப்படி தன்னை அவமானப்படுத்திவிட்டாரே என்று தவித்துப் போனார்.

அதற்கான காரணத்தையும் அவர் உணர்ந்தே இருந்தார்... எல்லாவற்றையும் மன்னித்தாலும், ஜானகி குறித்து தான் பேசியதை எம்.ஜி.ஆர் மன்னிக்கத் தயாராக இல்லை என்று...தனியாக  சென்னை திரும்பிய ஜெ, எம்.ஜி.ஆருக்கு நீண்ட கடிதத்தை எழுதினார். அதில், “நான் உங்களை காயப்படுத்தி இருந்தால், என்னை மன்னித்து விடுங்கள்... இனி நான் எப்போதும் ஜானகி குறித்து பேச மாட்டேன்...என்னை மன்னித்து விடுங்கள்... மதுரையில் நடந்தது என்னை மிகவும் காயப்படுத்தியது... எனக்கென்று யார் இருக்கிறார்? நீங்களும் என்னை காயப்படுத்தினால், நான் எங்கு செல்வேன்...? என்னை  மன்னித்து விடுங்கள்..” என்று எம்.ஜி.ஆரின் அன்புக்காக கெஞ்சியே இருந்தார்...!

(தொடரும்)

- மு.நியாஸ் அகமது

 

இந்தத் தொடரின் முந்தைய பகுதிகளைப் படிக்க கீழுள்ள இணைப்பை கிளிக் செய்யுங்கள்

பகுதி 1 | பகுதி 2 | பகுதி 3 | பகுதி 4 | பகுதி 5 | பகுதி 6 | பகுதி 7 | பகுதி 8 | பகுதி 9| பகுதி 10 | பகுதி 11 | பகுதி 12 | பகுதி 13 | பகுதி 14 |பகுதி 15

| பகுதி 16

இந்த தொடரின் அடுத்த பகுதியை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்