வெளியிடப்பட்ட நேரம்: 13:45 (06/12/2016)

கடைசி தொடர்பு:14:23 (06/12/2016)

ஜெயலலிதா உடலுக்கு பிரதமர் மோடி நேரில் அஞ்சலி: சசிகலா, ஓபிஎஸ்-க்கு ஆறுதல்

மறைந்த ஜெயலலிதா உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேரில் அஞ்சலி செலுத்தினார். முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை அணைத்தப்படி பிரதமர் ஆறுதல் கூறினார்.

உடல் நலக்குறைவால் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 22-ம் தேதி சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 75 நாள் சிகிச்சைக்கு பின்னர் நேற்றிரவு ஜெயலலிதா காலமானார். அவரது மறைவுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி, பல்வேறு மாநில முதல்வர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். 

இந்த நிலையில், ஜெயலலிதாவின் உடல் அஞ்சலிக்காக ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டுள்ளது. அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதனிடையே, ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பிரதமர் நரேந்திர மோடி, தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் தீவுத்திடல் எதிரே அமைந்துள்ள ஐஎன்எஸ் கடற்படை தளத்துக்கு வந்தடைந்தார். பின்னர் காரில் ராஜாஜி அரங்கத்துக்கு வந்தார். அங்கு ஜெயலலிதா உடலுக்கு மோடி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

இதைத் தொடர்ந்து முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை அணைத்தப்படி பிரதமர் ஆறுதல் கூறினார். அப்போது, பன்னீர்செல்வம் கண்ணீர் விட்டார். இதையடுத்து, சசிகலாவுக்கு பிரதமர் ஆறுதல் கூறினார். பின்னர் கூட்டத்தினரை பார்த்து பிரதமர் கைகூப்பி வணக்கம் தெரிவித்தார். பின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்டுச் சென்றார் பிரதமர்.  

பிரதருடன், தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை, இல.கணேசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க