துறுதுறு கோமளவல்லி அதிரடி ஜெயலலிதா ஆன கதை! 

“நெருப்பாற்றில் நீந்தியே பழக்கப்பட்டவள் நான்!” - சொத்துக்குவிப்பு வழக்கில் விடுவிக்கப்பட்டபின், பெங்களுரு பரப்பன அக்ரகாரா சிறைச்சாலையில் இருந்து வெளியே வந்த ஜெயலலிதா, தன் பொதுவாழ்க்கை பற்றி கூறிய வரிகள் இவை.

16 வயதில் சினிமாத்துறையில் நுழைந்த ஜெயலலிதாவின் வாழ்க்கை முழுவதுமே கிட்டத்தட்ட பொதுவாழ்க்கைதான். மருத்துவமனை படுக்கையில் இருந்தபோது கூட அந்த அதிரடிகள் தொடர்ந்தன. ஆம், முதல் இரண்டு நாட்கள் உடல்நிலைபற்றி பலவிதமான தகவல்கள் பரவிக்கொண்டிருந்த சூழலில்... உள்ளாட்சி தேர்தல் பற்றிய அறிவிப்பு அதிரடியாக வெளிவந்து அரசியல்வாதிகளின் கவனத்தை அந்தப் பக்கம் திருப்பிவிட்டது.

“சட்டம் படித்து சிறந்த வழக்கறிஞராக ஆகவேண்டும், நல்ல பணவசதி படைத்த ஒரு பெண்மணியாக வாழவேண்டும்” இவைதான் சினிமாவுத்துறைக்குள் நுழைவதற்கு முன்னர் ஜெயலலிதாவின் எதிர்காலக் கனவாக இருந்தது.
தான் மேக்அப் போட்டதற்காக வருத்தப்பட்டு, ‘சினிமா என்னோடு போகட்டும்... என் மகளுக்கு அதுவேண்டாம்’’ எனக்கூறி வந்த தாய் சந்தியா, திடீரென சினிமாவில் நடிக்கச்சொல்லி நிர்ப்பந்தப்படுத்திய போதுதான் தனது கனவு உடையப்போகிறது என்பதை ஜெயலலலிதா முதன்முதலாக உணர்ந்தார். அம்மாவின் முடிவை எதிர்த்து வாதம் செய்திருக்கிறார். ஆனால், சூழல்... அம்மாவின் முடிவையே ஏற்கவைத்தது.

ஜெயவிலாஸ்... லலிதவிலாஸ்!

ஸ்ரீரங்கத்தில் பிறந்து வளர்ந்த ரங்கசாமி ஐயங்கார் ஒரு பொறியாளர். பல்வேறு இடங்களில் குறுகிய காலங்கள் பணியாற்றியவர் கடைசியாக, (அப்போதைய) மைசூர் மாநிலத்தில் இருந்த இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தில் பணி கிடைத்தவுடன் குடும்பத்தோடு மைசூரில் செட்டில் ஆனார். இவருக்கு அம்புஜவல்லி, வேதவல்லி, பத்மவல்லி என்ற மூன்று மகள்கள், ஒரு மகன்.

மைசூர் மகாராஜா அரண்மனையில் மருத்துவர் பணி கிடைக்கப்பெற்று அங்கேயே குடிபெயர்ந்த நரசிம்மன் ரங்காச்சாரியின் மகன் ஜெயராமன். இந்த ஜெயராமனுக்கும் ரங்கசாமி ஐயங்காரின் மகள் வேதவல்லிக்கும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. இந்தத் தம்பதிக்கு இரண்டு குழந்தைகள். ஜெயக்குமார் மற்றும் கோமளவல்லி.

கர்நாடக மாநிலம், மண்டியா மாவட்டம், பாண்டவபுராவில் உள்ள மேலுகோடே (மேல்கோட்டை) என்ற ஊரில் பிறந்த கோமளவல்லி, அம்மாவழி, அப்பாவழித் தாத்தாக்கள் இரண்டு பேரின் ’ஜெயவிலாஸ்’, ’லலிதவிலாஸ்’ ஆகிய பெயர்கள் கொண்ட வீடுகளில் மாறிமாறி வளர்ந்ததால் இரு குடும்பத்தின் அன்பின் நினைவாக ஜெயலலிதா என அழைக்கப்பட்டார். செல்லப்பெயர்... அம்மு. எம்.ஜி.ஆர் ஜெயலலிதாவை அம்மு என்றுதான் அழைப்பார்.

1960-ல் ஆரம்பமான வாட்டாள் வம்பு!

1960-ல் முதல் நாட்டிய அரங்கேற்றத்தை நிகழ்த்திய ஜெயலலிதா, மைசூர் தசரா விழாவில் நாட்டியமாட 70-ம் ஆண்டு அழைக்கப்பட்டார். மைசூர் மாநிலம், கர்நாடக மாநிலம் என்று பெயர் மாற்றப்படுவதற்குக் கடும்எதிர்ப்புக் கிளம்பியிருந்த தருணம் அது. இந்த நேரத்தில் தசராவில் கலந்து கொள்வது சரியானது அல்ல என்று ஜெயலலிதாவின் நலம் விரும்பிகள் அறிவுறுத்தினர்.

அந்தத்தருணத்தில் அவர், விகடன் இதழுக்கு அளித்த பேட்டி ஒன்றில், ‘கர்நாடகாவில் பிறந்து வளர்ந்து கன்னடம் நன்றாகப் பேசினாலும்கூட, நான் ஒரு தமிழர்’ என்று குறிப்பிட்டிருந்தார். இந்தக்கருத்துக்கு, வாட்டாள் நாகராஜின் ‘கன்னட சாலுவாலி’ கட்சி சார்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. ’கர்நாடகாவில் பிறந்து வளர்ந்துவிட்டு இப்படி பேசுவதா... இதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்!’ என்ற மிரட்டல் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதுதான் ஜெயலலிதாவின் நிலைப்பாட்டுக்கு, கருத்துக்குக் கிடைத்த கடுமையான முதல் எதிர்ப்பு என்றே சொல்லலாம். எதிர்ப்புக்குப் பதில் எதுவும் சொல்லாத ஜெயலலிதா, உடல்நலன் காரணமாக தசரா விழாவில் பங்கேற்க இயலாது என்று மறுத்துவிட்டார்.

சுற்றி வளைத்த வாட்டாள்! 

இந்நிலையில் கன்னட திரைப்பட இயக்குனர் பி.ஆர்.பந்துலு, தனது கன்னட படத்தின் தமிழ் ரீமேக்கான ‘கங்கா கவுரி’ படத்தில் நடிக்க ஜெயலலிதாவை அழைத்தார். சென்னையில் நடத்துவதைவிட மைசூருவில் நடத்தினால் செலவு குறையும் என்பதற்காக அங்கே சூட்டிங் நடத்தப்பட்டது. அதேசமயத்தில்தான் தசரா விழாவும் நடைபெறுகிறது என்பதை ஜெயலலிதா மறந்துவிட்டார்.

சூட்டிங் கவர் செய்ய திரைத்துறையின் பிரபல செய்தித்தொடர்பாளர் பிலிம் நியூஸ் ஆனந்தன் தலைமையில் 10 பேர் கொண்ட செய்தியாளர் குழுவும் மைசூர் சென்றது. சூட்டிங் தொடங்கும் நேரத்தில் 100 பேர் கொண்ட படையோடு வந்த வாட்டாள் நாகராஜ்... ஜெயலலிதா , பந்துலு மற்றும் பத்திரிகையாளர்கள் இருந்த அறைக்குள் ஆயுதங்களுடன் நுழைந்து கதவைப்பூட்டிக் கொண்டு, ஜெயலலிதா முற்றுகையிட்டு மன்னிப்புக் கேட்கவேண்டும் என்று மிரட்டல் விடுத்தார். பந்துலுவும் அதையே வலியுறுத்தினார்.

ஆனால், அப்போது ஜெயலலிதா சொன்னது இதுதான், “நான் தமிழ் பெண், கன்னடப் பெண் அல்ல. மன்னிப்பும் கேட்க முடியாது!” என்று சத்தமாகக் கூறிவிட்டார். அவர் அப்போது தமிழில் பேசியதால் அந்தக் கும்பலுக்கு புரியவில்லை. இயக்குனர் சாமி, வாட்டாள் நாகராஜ் குழுவினரைப் பார்த்து, மைசூருவுக்கு வந்துள்ள தமிழர்களைத் தாக்குவது வெட்ககரமானது என்று எடுத்துக்கூற கூட்டம் கலைந்து சென்றுவிட்டது.

மாறாத தைரியம்!

தனது தீர்மானமான முடிவை மாற்றிக்கொள்ள மறுப்பதும், மிரட்டலுக்கு அஞ்சாமல் எதிர்த்து நிற்பதும் ஜெயலலிதாவின் உடன்பிறந்த குணம் என்பதை நேரில் பார்த்ததாக பத்திரிகையாளர்கள் நினைவுகூர்கின்றனர். இளைமையின் வலிமையும், புதிதாக பொதுவெளியில் வந்த உத்வேகமும் ஒருங்கே இருந்தபோது இருந்த அந்தக் குணம் கடைசிவரை அவரிடம் மாறவில்லை என்றே சொல்லலாம்.
தந்தை ஜெயராமன், பட்டப்படிப்பு முடித்தவராக இருந்தாலும்கூட சம்பாத்தியமோ, குடும்பத்தின் வளர்ச்சி குறித்தோ அக்கறை கொண்டவராக இல்லாமல் இருந்ததுடன், குடும்பச் சொத்துக்கள் அனைத்தையும் சிறிது சிறிதாகக் கரைத்தார். ஜெயலலிதா இரண்டு வயதாக இருக்கும்போதே ஜெயராமன் இறந்தும் போனார்.

வேதவல்லியாக இருந்த ஜெயலலிதாவின் தாய், திரைத்துறையில் சந்தியா என்ற பெயரில் காலடி எடுத்து வைத்து சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்த வருவாயைக் கொண்டே தனக்கும், குடும்பத்துக்கும் வருவாய் ஈட்டிக்கொண்டிருந்தார். ஆனால், போதுமானதாக இல்லை.

நெருப்பை வளர்த்த தனிமை!

இரண்டு தாத்தாக்கள் வீட்டிலும் செல்லமாக வளர்ந்து, எதிர்காலக் கனவுளைச் சுமந்து கொண்டு பட்டாம்பூச்சிபோல சுற்றித்திரிந்த ஜெயலலிதாவுக்கு, பொறுப்புக்களைச் சுமக்க மறந்த தந்தை, தாயிடமிருந்து சரியான தருணங்களில் கிடைக்காத அன்பும், அரவணைப்பும், 16 வயதில் திரைத்துறைக்குள் நுழையவேண்டிய நிர்ப்பந்தம் உட்பட பல காரணங்கள் ஒன்றுசேர்ந்து அழுத்தங்களைக் கொடுக்க, அவருக்குள் ஒரு நெருப்பு கொஞ்சம் கொஞ்சமாக உருக்கொள்ளவும், வேகமெடுக்கவும் தொடங்கியது. இதையெல்லாத்தையும்விட தனிமை என்பது அவருக்கு உடன்பிறந்த ஒன்றாகவே ஆகிப்போனதும் அந்த நெருப்புக்கு மேலும் வலு சேர்க்கத் தொடங்கியது.
இந்த உத்வேகம் அனைத்தும் வெற்றிகளை நோக்கியே அவரை தொடர்ந்து கொண்டு சென்றன. அவர் நடித்த படங்களில் பெரும்பாலானவை சூப்பர் ஹிட்தான். ‘இஜ்ஜத்’ என்ற ஹிந்திப் படத்தில் தர்மேந்திராவுடன் நடித்தார், அதுவும் ஹிட். ‘Epistle’ என்னும் ஓர் ஆங்கிலப்படத்திலும் நடித்துள்ளார் ஜெயலலிதா.

வழக்கறிஞர் ஆகவேண்டும் என்று எண்ணிய ஜெயலலிதா, திரைத்துறையில் பட்டையைக் கிளப்பத் தொடங்கினார். 

ஒரு வட்டம்... ஒளிவட்டம்!

அவரது வளர்ச்சிப் பாதையைக் கூர்ந்து கவனித்தால், சோதனைகளைக் கண்டு முடங்கிக் கிடப்பதல்ல பெண்ணினம் என்பதை உணர்த்துவதாகவே உள்ளதைக்காண முடியும். தனக்கு சரி என்று பட்டதைத் துணிச்சலோடு பேசுவதற்கும், செய்து முடிக்கவும் தயங்கியதே இல்லை. ஆனால், இந்தக் குணம் அவருக்கு மேலும் பல துன்பங்களைக் கொடுத்தன. அதேசமயம், அடுத்தக்கட்ட வெற்றிக்கான தூண்டுகோலாக, உத்வேகமாக அந்தத் துன்பங்களை எடுத்துக்கொள்வதில் ஜெயலலிதா தனித்துவமாகவே இருந்து வந்திருக்கிறார். வெற்றிப்பாதைக்கு இடையூறாகக் குறுக்கே நிற்பவர்கள் பற்றியெல்லாம் அவர் கொஞ்சம்கூட அலட்டிக்கொள்ளாமல் அடித்துக் கிளப்பி முன்னேறிச் செல்லவும் தயங்கியதே இல்லை.

ஒவ்வொரு தருணத்திலும் அவருடன் அவரின் தனிமையும் பயணித்துக்கொண்டே இருப்பதையும் பார்க்கமுடிகிறது. அந்தத் தனிமை அவரது ஆளுமையைச் சுற்றி ஒரு வலுவான யாரும் உள்ளே நுழைய முடியாத ஒரு வட்டத்தை உருவாக்கிக்கொண்டதையும் பார்க்கமுடிகிறது. அதுவே ஒளிவட்டமாகவும் தொடர்கிறது.

எரிமலை வெடித்தது!

தெலுங்கு சூப்பர் ஸ்டார் சோபன்பாபுவின் நட்பு கிடைத்தது. திருமணம் செய்து கொண்டு குடும்பம் அமைப்பார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றம். மீண்டும் எம்.ஜி.ஆரோடு அரசியல் நட்பு ஏற்பட அரசியலுக்குள் காலடி எடுத்துவைத்தார். எம்.ஜி.ஆரோடு 28 படங்களில் நடித்த ஜெயலலிதாவுக்கு, அந்த நெருக்கமே அரசியலிலும் கால்பதிக்க வைத்தது. கொள்கை பரப்புச் செயலாளர் என்கிற புதிய பதவியையே உருவாக்கிக் கொடுக்கப்பட, திரை நட்சத்திரம் என்ற தளத்தில் இருந்து அரசியல் பொறுப்புக்கு மாறினார் ஜெயலலிதா. மாநிலங்களவை உறுப்பினராகவும் ஜெயலலிதாவை உயர்த்தினார் எம்.ஜி.ஆர்.

ஆனால், அதேசமயம் தான் மிகவும் கட்டுப்படுத்தப்படுவதாகவும், கண்காணிக்கப்பட்டுக்கொண்டே இருப்பதாகவும் ஜெயலலிதா உணர்ந்தார். சுதந்திரமாகச் சிந்தித்தும், செயல்பட்டும் பழகிய அவருக்கு இது அழுத்தங்களைக் கொடுத்தது. இதுதான் தீவிர அரசியலைக் கையில் எடுக்க வைத்தது.

எம்ஜிஆரின் அரசியல் வாரிசாக அவர் கருதிக் கொண்டிருந்த நிலையில், எம்ஜிஆர் இறுதி ஊர்வலத்தில் உடல் வைக்கப்பட்டிருந்த வாகனத்திலிருந்து எம்ஜிஆரின் மனைவி ஜானகியின் உறவினர் தீபனால் (முதல் மரியாதை படத்தில் நடித்தவர்) கீழே தள்ளிவிடப்பட்டார் ஜெயலலிதா. தமிழகம் மட்டுமல்ல உலகமே நேரடி ஒளிபரப்பில் அந்த அவமான நிகழ்வைப் பார்த்துக் கொண்டிருக்க... அதுவே ஜெயலலிதாவுக்கு பாசிட்டிவ் நிகழ்வாக மாறிப்போனது. அவரின் உள்ளிருந்த நெருப்பு எரிமலையாக மாறியது.

ஜெயலலிதாவுக்கு நிகர் அவர் மட்டுமே!

அதிமுக-வானது ஜானகி அணி, ஜெயலலிதா அணி என இரண்டாகப் பிரிந்திருந்த நிலையில் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட, சேவல் சின்னத்தில் போட்டியிட்டு, சொல்லத்தக்க அளவில் எம்.எல்.ஏ-க்களைப் பெற்று எதிர்க்கட்சி தலைவராக வந்தமர்ந்தார். இரட்டை இலைச் சின்னத்தையும், அதிமுகவையும் கைப்பற்றி முதல்வராகவே ஆனார். இதனால், எம்.ஜி.ஆரா... கருணாநிதியா... என்றிருந்த தமிழக அரசியலை ஜெயலலிதாவா...! கருணாநிதியா...! என மாற்றியமைத்தார். தமிழகத்தின் முதல்வராக 6-முறை அரியணை ஏறிய ஜெயலலிதா, முதல்வராகவே நம்மிடமிருந்து விடைபெற்றார்.

தனக்கே உரித்தான ஆக்ரோஷ குணம், எதிர்த்து நிற்கும் துணிச்சல், அவமானங்களை அடுத்த வெற்றிக்கான ஊக்கமாக எடுத்துக்கொள்ளும் திறன் ஆகியவை திரையுலகம், பொதுவுலகம், அரசியல் உலகம் என்ற அனைத்திலும் ஜெயலிதாவின் வெற்றிக்கு துணையாக அமைந்தன.
ஜெயலலிதா மீது ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும்... ஜெயலலிதாவுக்கு நிகர் அவர் மட்டுமே என்பதிலும் மாற்றுக் கருத்தில்லை!

- விஷ்வா விஸ்வநாத்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!