Published:Updated:

பத்திரிகையாளர்மீது அவதூறு கருத்து: எஸ்.வி.சேகருக்கு நெல்லை நீதிமன்றம் நோட்டீஸ்!

பத்திரிகையாளர்மீது அவதூறு கருத்து: எஸ்.வி.சேகருக்கு நெல்லை நீதிமன்றம் நோட்டீஸ்!
பத்திரிகையாளர்மீது அவதூறு கருத்து: எஸ்.வி.சேகருக்கு நெல்லை நீதிமன்றம் நோட்டீஸ்!

பெண் பத்திரிகையாளர்கள் தொடர்பாக வதூறு கருத்துக்களை தெரிவித்த எஸ்.வி.சேகர் விளக்கம் அளிக்கக்கோரி நெல்லை நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டது.

பெண் பத்திரிகையாளர்கள் தொடர்பாக அவதூறு கருத்துகளைத் தெரிவித்த எஸ்.வி.சேகர், விளக்கம் அளிக்கக்கோரி நெல்லை நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டது. 

கல்லூரி மாணவிகளுக்கு  ஆசை வார்த்தைகூறி தவறான வழிக்கு அழைத்த பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக பேட்டியளித்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், பெண் செய்தியாளர் ஒருவரின் கன்னத்தில் தட்டி சர்ச்சையைக் கிளப்பினார். இது தொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவிட்ட அந்தப் பெண் செய்தியாளர், `பலமுறை கன்னத்தைக் கழுவியும் அந்தச் சம்பவம் எனக்கு அருவருப்பை ஏற்படுத்திவிட்டது’ என வேதனையுடன் குறிப்பிட்டார். இந்த விவகாரம்குறித்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மன்னிப்புக் கோரினார்.

இந்த விவகாரம்குறித்து முகநூலில், நடிகரும் பா.ஜ-வின் சார்பாக ஊடகங்களில் கருத்துத் தெரிவித்து வருபவருமான எஸ்.வி.சேகர் அவதூறான கருத்துகளைப் பகிர்ந்து, பத்திரிகையாளர்களை அதிர்ச்சியடைய வைத்தார். இது தொடர்பாக, நெல்லை பத்திரிகையாளர் மன்றம் சார்பாக, மன்றத்தின் தலைவர் அய்கோ என்கிற அய்.கோபால்சாமி சார்பாக வழக்கறிஞர்கள் டி.ஏ.பிரபாகர், வினோத் தாசன் ஆகியோர் நெல்லை குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் வழக்கு தாக்கல்செய்தனர். 

அந்த மனுவில், ``முகநூலில் எஸ்.வி.சேகர் வெளியிட்ட  பதிவு, பத்திரிகையாளராகிய என் மீதும் என்னைப் போன்றவர்களின் மீதும் அவதூறையும் அவமானத்தையும் ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. இதைப் படித்துப் பார்த்த எனது நண்பர் சக்திவேல் என்பவர், `பத்திரிகை என்றாலே இப்படித்தான் கேவலமாக இருப்பீர்களோ?’ எனக் கேவலமாகப் பேசிவிட்டார். எதிர்மனுதாரரான எஸ்.வி.சேகரின் முகநூல் பதிவால், சமூகத்தில் என்னைப் போன்றோரின் மதிப்பும் மரியாதையும் குறைந்துவிட்டது. 

இந்த அவதூறு பதிவை வேண்டுமென்றே வெளியிட்டு அவமானத்தை ஏற்படுத்திய எதிர்மனுதாரர், இந்தியத் தண்டனைச் சட்டம் பிரிவு 499-ன் கீழ் தண்டிக்கப்பட வேண்டியவர். எனவே நீதிமன்றம், எதிர்மனுதாரரை அழைத்து விசாரித்து, இந்தியத் தண்டனைச் சட்டப்பிரிவு 500-ன் கீழ் தகுந்த தண்டனை வழங்க வேண்டும்’’ எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி, வரும் மே 15-ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

இந்த நிலையில், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்க வேண்டும் என அய்.கோபால்சாமி சார்பாக இன்று மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதனை விசாரித்த மாஜிஸ்திரேட் ராமதாஸ், இந்த மனு தொடர்பாக உரிய விளக்கம் அளிக்க வலியுறுத்தி நடிகர் எஸ்.வி.சேகருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

அடுத்த கட்டுரைக்கு