Published:Updated:

மதுரை ஆதீனத்திற்குள் நுழைய நித்திக்கு நீதிமன்றம் தடை!

மதுரை ஆதீனத்திற்குள் நுழைய நித்திக்கு நீதிமன்றம் தடை!
மதுரை ஆதீனத்திற்குள் நுழைய நித்திக்கு நீதிமன்றம் தடை!
மதுரை ஆதீனத்திற்குள் நுழைய நித்திக்கு நீதிமன்றம் தடை!

மதுரை: மதுரை ஆதீனத்திற்குள் நுழைய நித்தியானந்தாவுக்கு தடை விதித்து மதுரை மாவட்ட முதன்மை சார்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

சர்ச்சை நாயகன் நித்தியானந்தாவை மதுரை ஆதீன மடத்தின் இளைய ஆதீனமாக நியமித்து 2012ம் ஆண்டின் 'செய்தி நாயக'னாக்கினார் மதுரை ஆதீனம் அருணகிரிநாதர். பிற மடாதிபதிகளின் எதிர்ப்பை எல்லாம் கண்டுகொள்ளாத அருணகிரிநாதருக்கு எதிராக சிலர் சட்டப் போராட்டத்தில் இறங்கினார்கள்.

நித்தியானந்தாவை நீக்குவதோடு மட்டுமின்றி, அருணகிரிநாதரையும் நீக்கி மதுரை ஆதீன மடத்தை அரசே ஏற்க வேண்டும் என்று மீனாட்சி பிள்ளைகள் அமைப்பைச் சேர்ந்த ஜெகதல பிரதாபன் என்பவர் வழக்குத் தொடர்ந்தார்.

##~~##
ஒரு கட்டத்தில் மதுரை ஆதீனத்தையே நீக்க வேண்டும் என்று அரசும் மனுத் தாக்கல் செய்தது. பதவி பறிபோய்விடும் சூழலில், நித்தியானந்தாவை தடாலடியாக இளைய ஆதீனப் பொறுப்பில் இருந்து நீக்கினார் அருணகிரிநாதர். இதனால் இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
அப்போது, நித்தியானந்தாவை நீக்கியது சட்டப்படி செல்லும் என்றும், அவர் மதுரை ஆதீனத்திற்குள் நுழையத் தடை விதிக்க வேண்டும் என்றும் கோரி மதுரை மாவட்ட முதன்மை சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் அருணகிரிநாதர். இந்த வழக்கில் மதுரை ஆதீன மடத்திற்குள் நித்தியானந்தா நுழைய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. 
இதுபற்றி மதுரை ஆதீனத்தின் வழக்கறிஞர் நாகேந்திரன் கூறுகையில், "நித்தியானந்தா நியமனம் செல்லாது என்றும், அவரது போக்கு சரியில்லாததால் இந்த வழக்கு முடியும் வரை மதுரை ஆதீனத்தின் சொத்துக்களை அருணகிரிநாதரோ, அவரால் நியமிக்கப்பட்ட ஆட்களோ பந்தக பராதீணம் (வில்லங்க விற்கிரையம்) செய்யக் கூடாது என்று அரசு தரப்பில் மனு போட்டிருந்தார்கள். அதை ஏற்று வழக்கு முடியும் வரை மதுரை ஆதீனத்தின் சொத்துக்களை விற்கக் கூடாது என்று கோர்ட்டும் உத்தரவு போட்டிருந்தது.
இதற்கிடையே, நித்தியானந்தாவை மதுரை ஆதீனமே நீக்கிவிட்டார். இந்த நடவடிக்கை  சட்டப்படி செல்லும் என்று உத்தரவிடக் கோரி அவர் மதுரை மாவட்ட முதன்மை சார்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில், 'நித்தியானந்தா இனிமேல் மதுரை ஆதீனத்திற்குள் நுழையக்கூடாது' என்று உத்தரவிடக் கோரியிருந்தார். அதை எதிர்த்து வாதாடிய நித்தியின் வக்கீல்கள், 'இளைய ஆதீனமாக ஒருவரை நியமித்த பிறகு அவரை நீக்குவதற்கு ஆதீனத்திற்கே அதிகாரம் கிடையாது. எனவே நித்தியின் நீக்கம் சட்டப்படி செல்லாது' என்று வாதாடினார்கள்.
'இந்த பிரதான வழக்கு முடியும் வரை, மதுரை ஆதீனத்திற்குள் நித்தியானந்தா நுழையக்கூடாது' என்று நாங்கள் இன்னொரு மனு தாக்கல் செய்தோம். அந்த மனுவை விசாரித்த நீதிபதி குருவய்யா, வழக்கு முடியும் வரை நித்தியாந்தா ஆதீனத்திற்குள் நுழைய தடை விதித்து இன்று உத்தரவு பிறப்பித்தார். பிரதான வழக்கின் விசாரணையை வருகிற 22.3.13ம் தேதிக்குத் தள்ளி வைத்துள்ளார்" என்றார்.
   
 - கே.கே.மகேஷ்