Published:Updated:

`எந்தப் பிரச்னையாக இருந்தாலும் சட்டப்படியே அணுக வேண்டும்!’ - மாணவர்களுக்கு அறிவுரை வழங்கிய நீதிபதி

`எந்தப் பிரச்னையாக இருந்தாலும் சட்டப்படியே அணுக வேண்டும்!’ - மாணவர்களுக்கு அறிவுரை வழங்கிய நீதிபதி
`எந்தப் பிரச்னையாக இருந்தாலும் சட்டப்படியே அணுக வேண்டும்!’ - மாணவர்களுக்கு அறிவுரை வழங்கிய நீதிபதி

``சட்டம், நீதிமன்றம் என்றாலே அனைவரது மத்தியிலும் ஒருவித பயம் உள்ளது. சட்டத்தை நினைத்துப் பயப்படத் தேவையில்லை. சட்டத்தின் உதவியுடன் எளிதில் எதையும் சாதிக்கலாம். எனவே, எந்தப் பிரச்னையானாலும் சட்டப்படியே எதிர்கொள்ள வேண்டும்” எனத் தூத்துக்குடியில் மாவட்ட முதன்மை  நீதிபதி இளங்கோவன் தெரிவித்துள்ளார். 

தமிழக மாநிலச் சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், பள்ளி மாணவர்களுக்கான சட்ட விழிப்பு உணர்வு முகாம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு பேசிய மாவட்ட முதன்மை நீதிபதி இளங்கோவன், “ஒருவர் இந்துவாக இருந்தால் பகவத்கீதை படிக்க வேண்டும், கிறிஸ்துவராக இருந்தால் பைபிள் படிக்க வேண்டும், இஸ்லாமியராக இருந்தால் குரான் படிக்க வேண்டும் எனச் சொல்லப்படுகிறது. அதேபோல, இந்தியக் குடிமகன் குடிமகளாகிய நாம் ஒவ்வொருவரும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் குறித்த நூலை படித்துப் பார்க்க வேண்டும்.

மாணவர்கள் அனைவரும் தங்கள் இலக்கை நோக்கிப் பயணிக்க வேண்டும். அதற்கு முதலாவதாகக் காந்தியடிகள் எழுதிய `சத்திய சோதனை’ நூலை படிக்க வேண்டும். பொதுவாகவே சட்டம், நீதிமன்றம் என்றாலே அனைவரது மத்தியிலும் ஒருவித பயம் உள்ளது. சட்டத்தை நினைத்துப் பயப்படத் தேவையில்லை. சட்டத்தின் உதவியுடன் எளிதில் எதையும் சாதிக்கலாம் என்பதை மாணவர்களாகிய நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். இந்தியாவில் ஒவ்வோர் இளைஞரின் கனவு வழக்கறிஞர் ஆவது என்பதாகவே இருக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். 

காட்டில் புலி, சிங்கங்களுக்கு நடுவில் மயில், பறவைகள் போன்ற சாதுவான பிராணிகளும் வாழ்ந்து வருகின்றன. அதேபோல சமுதாயத்தில் பல குற்றச் செயல்கள் நடந்து வந்தாலும், அதைச் சட்டத்தின் உதவியுடன் எப்படி சரி செய்ய வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கு அடிப்படைச் சட்ட திட்டங்களை மாணவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். சுதந்திரப் போராட்டத்துக்கு தலைமை தாங்கிய தலைவர்கள் அனைவருமே சட்டம் படித்தவர்கள்தான். அதனால்தான் எளிதில் சுதந்திரம் பெற முடிந்தது. எனவே, சட்டம் தெரிந்திருப்பது அவசியம். சமூகத்தில் ஆண், பெண்  எப்படி சமமோ, ஆண், பெண் இருவருக்கும் உழைப்புக்கேற்ற ஊதியம் எப்படி சமமோ, அதேபோல சட்டத்தின் முன் அனைவரும் சமம். சட்டத்துக்குப் பாகுபாடு கிடையாது. எனவே, எந்தப் பிரச்னையானாலும் சட்டப்படியே எதிர்கொள்ள வேண்டும்” எனப் பேசினார்.