Published:Updated:

வழக்கறிஞரான முதல் திருநங்கை சத்தியஸ்ரீ சர்மிளா!

வழக்கறிஞரான முதல் திருநங்கை சத்தியஸ்ரீ சர்மிளா!
வழக்கறிஞரான முதல் திருநங்கை சத்தியஸ்ரீ சர்மிளா!

இந்தியாவின் முதல் திருநங்கை வழக்கறிஞராக தமிழகத்தைச் சேர்ந்த சத்தியஸ்ரீ சர்மிளா பதிவு செய்திருக்கிறார்.

திருநங்கைகளும் நம்மைப் போல சக மனிதர்கள்தாம் என்பதை உணர்த்தும் விதமாக மத்திய, மாநில அரசுகள் அவர்களுக்காகப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அதேபோல வேலைவாய்ப்பு, கல்வி போன்றவற்றில் அவர்களுக்கு உரிய அங்கீகாரத்தை அளிப்பதில் முனைப்பு காட்டிவருகிறது. அந்த வகையில், சமீபத்தில் சேலத்தைச் சேர்ந்த திருநங்கை பிரித்திகா யாஷினி இந்தியாவிலேயே முதல் காவல்துறை எஸ்.ஐ-யாக தமிழக அரசால் நியமிக்கப்பட்டார்.

அந்த வரிசையில் தற்போது பரமக்குடியைச் சேர்ந்த திருநங்கை சத்தியஸ்ரீ சர்மிளா, இந்தியாவிலேயே முதல் திருநங்கை வழக்கறிஞராக தமிழ்நாடு-புதுச்சேரி பார் கவுன்சிலில் பதிவுசெய்திருக்கிறார். 36 வயதான சத்தியஸ்ரீ சர்மிளாவுக்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடிதான் சொந்த ஊர் என்றாலும், பல ஆண்டுகளுக்கு முன்பே செங்கல்பட்டு நடராஜபுரத்தில் குடியேறினார்.

பள்ளிப்படிப்பை பரமக்குடியில் முடித்த இவர், சேலம் அரசு சட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்தார். அதன்படி, ஏற்கெனவே வழக்கறிஞராகும் தகுதியைப் பெற்றிருந்தும், திருநங்கைகளுக்கான அங்கீகாரம் கிடைத்தபிறகே வழக்கறிஞர் பணியில் தன்னை இணைத்துக்கொள்ள வேண்டும் என்று, 11 ஆண்டுகளாகக் காத்திருந்து தற்போது அதை நிறைவேற்றியும் இருக்கிறார்.

பார் கவுன்சிலில் பதிவுசெய்துவிட்டு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``இந்தியாவின் முதல் திருநங்கை வழக்கறிஞராக நான் பொறுப்பேற்றதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். எனது இந்த வளர்ச்சிக்கும், வெற்றிக்கும் நிறைய நல்ல உள்ளங்கள் உதவி செய்திருக்கின்றனர். என்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் என் சமூகத்திற்காக நான் செய்வேன். இன்று நீதித்துறையில் நான் சேர்ந்துள்ளதுபோல அனைத்துத் துறைகளிலும் என்னைப் போன்ற திருநங்கைகள் சேர்ந்து பணியாற்றி சாதிக்க வேண்டும் என்பதே என் கனவு” என்றார் உற்சாகமாக.    
 

அடுத்த கட்டுரைக்கு