Published:Updated:

`ராகிங் இல்லாத கல்லூரி வாழ்க்கையை உருவாக்க வேண்டும்' - நீதிபதி பேச்சு!

`ராகிங் இல்லாத கல்லூரி வாழ்க்கையை உருவாக்க வேண்டும்' - நீதிபதி பேச்சு!
`ராகிங் இல்லாத கல்லூரி வாழ்க்கையை உருவாக்க வேண்டும்' - நீதிபதி பேச்சு!

”சீனியர் மாணவர்கள் தங்கள் கல்லூரிக்கு படிக்க வரும், புதுமுக மாணவர்களை சகோதர உணர்வுடனும், பரஸ்பரத்துடனும் வரவேற்க வேண்டும். தொடர்ந்து, இயல்பான நிலையிலேயே பழக வேண்டும். ராகிங் இல்லாத கல்லூரி வாழ்க்கையை மாணவர்கள் உருவாக்க வேண்டும்.” என தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிபதி இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், ராகிங் சட்டம் குறித்த சட்ட விழிப்புணர்வு முகாம், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் நடைபெற்றது.  இதில், கலந்து கொண்ட மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான இளங்கோவன் கலந்து கொண்டு பேசுகையில், “மாணவர்கள் சமுதாயத்தின் அங்கமாக உள்ளனர். தங்கள் திறமைகளை நிலைநாட்டி நாட்டை வல்லரசாக்க கூடிவர்கள். சமுதாயத்தில் மிகப் பெரும் சக்தி மாணவர்கள் சக்தி ஆகும். மாணவர்களின் போராட்டம் எதுவும் இதுவரையில் வெற்றி பெறாமல் இருந்தது இல்லை.

பள்ளிப் பருவத்தைப் போல, கல்லூரிகளிலும் மாணவர்களின் நோக்கம் நன்றாகப் படிப்பது என்பதாக இருக்க வேண்டும். ஆனால், கல்லூரிகளில் நுழைந்தவுடன், பள்ளிகளில் காணப்பட்ட சமத்துவ நிலை மறந்து, தாங்களுக்குள் சீனியர், ஜூனியர் என்ற ஒரு கற்பனையை ஏற்படுத்திக் கொண்டு, ”ராகிங்” என்ற பெயரில், பிற மாணவ, மாணவிகளை மனதளவிலும் உடல் அளவிலும் காயப்படுத்தி விடுகிறார்கள். சில சமயங்களில் உயிரையே பறிக்கும் நிலைக்கும், பழிவாங்கும் எண்ணத்திற்கும் கூட தள்ளப்பட்டுள்ளது. இதற்கு பல எடுத்துக்காட்டு சம்பவங்களும், வழக்குகளும் உள்ளன. 

மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் இத்தகைய ராகிங் கொடுமைகள் தலைதூக்கியதால்தான், தொடர்ந்து,  இது போன்ற கல்லூரிகளில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். இவை தடுக்கப்பட வேண்டும் என்பதற்காகத்தான், ராகிங் தடுப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது. இச்சட்டம்,  தவறை உணர்ந்து மாணவர்கள் திருந்துவதற்காகத்தானே ஒழிய, தண்டிப்பதற்காக அல்ல. இச் சட்டத்தின் படி ராகிங் செய்தால் 2 ஆண்டுகள் சிறை தண்டனையுடன் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும்.

கல்லூரிகளில் ராகிங் நடந்தால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தைரியமாக கல்லூரி நிர்வாகத்திடம் 72 மணி நேரத்திற்குள் புகார் அளிக்க வேண்டும். அதே சமயம், 3 நாட்களுக்குள் காவல்நிலையத்திலும் புகார் அளிக்க வேண்டும். இதில், நடவடிக்கை திருப்தி அளிக்காத பட்சத்தில் சட்ட உதவி மையத்தை அணுகலாம். இது போன்ற சட்டங்களால் மட்டும் மாணவர்களை திருத்திவிட முடியாது. மாணவர்கள் தங்கள் கல்லூரிக்கு படிக்க வரும், புதுமுக மாணவர்களை சகோதர உணர்வுடனும், பரஸ்பரத்துடனும் வரவேற்க வேண்டும். தொடர்ந்து, இயல்பான நிலையிலேயே பழக வேண்டும்.

எங்கு ஒழுக்கம் இல்லையோ அங்கு சட்டம் இருக்காது. எங்கு சட்டம் இல்லையோ அங்கு சமுதாயம் இருக்காது. மாணவர்கள் அவரவர் எதிர்கால நலன் கருதியும், பெற்றோர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதமாகவும் ஒழுக்கத்துடனும் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்பதை குறிக்கோளாகக் கொள்ள வேண்டும். கல்வியில் எந்த அளவு சிறப்பு பெற்றிருந்தாலும், ஒழுக்கம் இல்லாத அக் கல்வித்தகுதி புகழக்கூடியதாக இருக்காது. எனவே, ராகிங் இல்லாத கல்லூரி வாழ்க்கையை மாணவர்கள் உருவாக்க வேண்டும்“ என்றார்.

அடுத்த கட்டுரைக்கு