Published:Updated:

அஞ்சலியை ஆஜர்படுத்த ஆட்கொணர்வு மனு: ஐகோர்ட்டில் தாக்கல்

அஞ்சலியை  ஆஜர்படுத்த ஆட்கொணர்வு மனு: ஐகோர்ட்டில் தாக்கல்
அஞ்சலியை ஆஜர்படுத்த ஆட்கொணர்வு மனு: ஐகோர்ட்டில் தாக்கல்
அஞ்சலியை  ஆஜர்படுத்த ஆட்கொணர்வு மனு: ஐகோர்ட்டில் தாக்கல்

சென்னை: ஹைதராபாத் ஓட்டலில் இருந்து மாயமான  நடிகை அஞ்சலி குறித்து இதுவரை எந்தவொரு தகவலும் கிடைக்காததால்  அவரை ஆஜர்படுத்த சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொண‌ர்வு மனு தாக்கல் ஆகி இருக்கிறது.

சென்னையிலிருந்து கிளம்பிய அஞ்சலி, ஹைதராபாத்தில் உள்ள‌ மாதாபூர் தஸ்பல்லா ஓட்டலில் தங்கியிருப்பதாக முதலில் தகவல் வெளியானது. இந்த நிலையில்,  கடந்த 9 ஆம் தேதி அன்று காலையில் ஓட்டலைவிட்டு வெளியே சென்ற அஞ்சலி எங்கு சென்றார், என்ன ஆனார் என்பது குறித்து இதுவரை தெரியவில்லை.

இந்த நிலையில், அஞ்சலியின் சித்தி பாரதி தேவி, 'பிளஸ் டூ  படிக்கும்போதே ஒரு பையனுடனும், நடிகை ஆனபிறகு தெலுங்கு டைரக்டர் ஒருவருடனும் ஓடி போனவர்தான் அஞ்சலி. நான் தான் அவரை மீண்டும் அழைத்து வந்து தற்போது முன்னணி நடிகையாக மாற்றியிருக்கிறேன்' என்று பேட்டி அளித்திருந்தார். அதேசமயம், அஞ்சலி காணாமல் போன சம்பவம் குறித்து அவரது அண்ணன் ரவி சங்கர் ஹைதராபாத் போலீசில் புகார் செய்தார்.  பாரதி தேவியும்  சென்னை மாநகர காவல்துறையில் புகார் கொடுத்தார். ஆனாலும், நான்கு நாட்களாக தொடர்கிறது அஞ்சலி மர்மம்.

ஹைதராபாத் ஓட்டலில் வைக்கப்பட்டிருந்த கேமராவை போலீசார் கண்காணித்தபோது, கடந்த 8 ஆம் தேதி அஞ்சலியும், அவரது சித்தப்பா சூரிபாபுவும் ஓட்டலுக்குள் செல்வதும், மறுநாள் காலை அஞ்சலி மட்டும் தோளில் ஒரு பையுடன் வெளியே வந்து  இண்டிகா காரில் ஏறிச் சென்றதும் காட்சிகளாக பதிவாகி  இருக்கின்றன. அந்த காரில் அஞ்சலியுடன் தெலுங்கு இளம் நடிகர் ஒருவர் சென்றதாக தற்போது தகவல் தெரியவருகிறது. அந்த நடிகர் யார்? அவருடன் அஞ்சலி எங்கு சென்றார்? வெளிநாட்டுக்கு சென்று விட்டாரா? என்பது போன்ற கோணத்தில் தற்போது விசாரணை நடந்து வருகிறது.

##~~##
இந்த நிலையில், நடிகை அஞ்சலியின் சித்தி பாரதிதேவி சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று ஆட்கொணர்வு மனு ஒன்றை அளித்திருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இதுகுறித்து  பேசிய அவரது வழக்கறிஞர் ஜெய பிர‌காஷ், ''சிறுவயதிலேயே நடிகை அஞ்சலியை முறைப்படி தத்தெடுத்து நல்லமுறையில் பாரதி தேவி வளர்த்திருக்கிறார். இப்படி கஷ்டப்பட்டு வளர்த்த பிள்ளை காணாமல் போனதும் மிகவும் மனவருத்தத்தில் இருக்கிறார். முறைப்படி தத்து எடுத்துவிட்டதால் பாரதி தேவிதான் அஞ்சலியின் உண்மையான தாயார். நாட்டில் நடக்கும் கொலை, கொள்ளை கற்பழிப்பு சம்பவங்களை பார்க்கும் போது அஞ்சலியின் உயிருக்கு ஆபத்து ஏதும் நேர்ந்துவிடுமோ என்று நாங்கள் அஞ்சுகிறோம். அதனால் தான் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்திருக்கிறோம்' என்றார்.
இதற்கிடையில் அஞ்சலி, தனது தாயாரிடம் போனில் பேசியதாக ஒரு தகவல் வருகிறது. விவகாரம் கோர்ட்டுக்கு வந்துவிட்டதால் அஞ்சலி சீரியல் கூடிய சீக்கிரமே க்ளைமாக்ஸை நெருங்கிவிடும்.