Published:Updated:

பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் அதிரடிச் சோதனை! - கம்பி, கத்திகள் பறிமுதல்

பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் அதிரடிச் சோதனை! -  கம்பி, கத்திகள் பறிமுதல்
பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் அதிரடிச் சோதனை! - கம்பி, கத்திகள் பறிமுதல்

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் அதிரடிச் சோதனை நடத்தப்பட்டது. அதில், கைதிகளிடமிருந்து கம்பி, கத்திகள் உள்ளிட்ட அபாயகரமான ஆயுதங்கள் கண்டிபிடிக்கப்பட்டதால் பரபரப்பு.

புழல் சிறைச்சாலையில், விதிகளுக்கு மாறாக கைதிகளுக்கு சலுகைகள் வழங்கப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் அதிரடிச் சோதனைகள் நடத்தப்பட்டுவருகின்றன. இன்று, பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் அதிரடிச் சோதனை நடத்தப்பட்டது. அங்கு, 649 தண்டனைக் கைதிகள் உள்ளனர். 

அத்துடன், விசாரணைக் கைதிகள் 504 பேர், குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைதான 54 பேர், தூக்குக் கைதி ஒருவர், சிறப்பு வகுப்பு பிரிவில் 4 பேர் என மொத்தம் 1212 பேர் உள்ளனர். இந்த சிறைச்சாலையில், உதவி கமிஷனர் விஜயகுமார் தலைமையில் இன்று,  போலீஸார் சோதனை நடத்தினார்கள். 4 இன்ஸ்பெக்டர்கள், 5 சப்-இன்ஸ்பெக்டர்கள், ஆயுதப்படை போலீஸார் என மொத்தம் 73 பேர் இந்தச் சோதனையில் ஈடுபட்டனர்.

கைதிகளுக்கு சிறப்பு வசதி செய்துகொடுக்கப்பட்டுள்ளதா என்பது பற்றியும் விதிமுறைகளை மீறி தடைசெய்யப்பட்ட செல்போன், புகையிலைப் பொருள்களை வைத்திருக்கிறார்களா என்பது குறித்தும் சோதனை நடத்தப்பட்டது. அப்போது, பீடி பாக்கெட்டுகள், தீப்பெட்டி உள்ளிட்டவை பறிமுதல்செய்யப்பட்டன. அத்துடன், கூர்மையான கம்பிகள் மற்றும் உணவுக்காக வழங்கப்படும் அலுமினியத் தட்டை கூர்மையான கத்தி போல மாற்றப்பட்டவை ஆகியவையும் பறிமுதல்செய்யப்பட்டன. அவற்றை வைத்திருந்த கைதி யார் என்பதுகுறித்து சிறைத்துறையினர் விசாரணை நடத்திவருகிறார்கள்.