Published:Updated:

`மாணவி ஷோபியா கல்விக்குத் தடையாக இருக்கக் கூடாது’ மனித உரிமை ஆணையம் அறிவுறுத்தல்!

பி.ஆண்டனிராஜ்
`மாணவி ஷோபியா கல்விக்குத் தடையாக இருக்கக் கூடாது’  மனித உரிமை ஆணையம் அறிவுறுத்தல்!
`மாணவி ஷோபியா கல்விக்குத் தடையாக இருக்கக் கூடாது’ மனித உரிமை ஆணையம் அறிவுறுத்தல்!

பா.ஜ.க-வை அவதூறாகப் பேசியதாக கைது செய்யப்பட்டு ஜாமீனில் இருக்கும் தூத்துக்குடி மாணவி ஷோபியா மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் முன்பாக இன்று ஆஜரானார். அப்போது ஷோபியா கல்விக்கு, காவல்துறை தடையாக இருக்கக் கூடாது என அறிவுறுத்தினார். 

சென்னையிலிருந்து தூத்துக்குடி வந்த விமானத்தில் செப்டம்பர் மாதம் 3-ம் தேதி பயணம் செய்த மாணவி ஷோபியா, அதே விமானத்தில் பயணம் செய்த பா.ஜ.க மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் முன்னிலையில், ‘பாசிச பா.ஜ.க ஆட்சி ஒழிக’ எனக் கோஷமிட்டார். இது தொடர்பாக தமிழிசை அளித்த புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார். 

அவர் கைது செய்யப்பட்டதில் மனித உரிமை மீறல் நடைபெற்றதாகவும் இது தொடர்பாக விசாரணை நடத்தவும் சோபியாவின் தந்தை சாமி மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் மனுத் தாக்கல் செய்தார். இது தொடர்பாக மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் ஜெயச்சந்திரன் முன்பாக ஷோபியா, அவரின் தந்தை சாமி மற்றும் புதுக்கோட்டை காவல்நிலைய ஆய்வாளர் திருமலை ஆகியோர் இன்று ஆஜரானார்கள்.

அப்போது, `மாணவியை காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்று இரவு 8.30 மணி வரை எப்படி விசாரணை நடத்தலாம்?' என காவல்துறை ஆய்வாளரிடம் மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் கேள்வி எழுப்பியதுடன், முதல் தகவல் அறிக்கையில் திருத்தம் செய்தது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார். மேலிடத்து அழுத்தம் காரணமாக மாணவியை கைது செய்தீர்களா எனவும் காவல்துறை ஆய்வாளரிடம் கேள்வி எழுப்பினார்.

அத்துடன், மாணவி ஷோபியாவின் படிப்புக்கு காவல்துறை எந்த வகையிலும் தடை ஏற்படுத்தக்கூடாது என மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் ஜெயச்சந்திரன் அறிவுறுத்தினார். அப்போது காவல்துறை சார்பாக, மாணவி கல்வி கற்க வெளிநாடு செல்ல எந்த வகையிலும் தடையாக இருக்க மாட்டோம் என உறுதியளிக்கப்பட்டது. அதை ஒரு வாரத்தில் எழுத்துப்பூர்வமாக கொடுக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். 

விமான நிலையத்தில் நடந்த தகராறு தொடர்பாக தமிழிசை செளந்தரராஜன் மற்றும் அவரது கட்சியினர் மீது ஷோபியாவின் தந்தை கொடுத்த புகாருக்கு இதுவரை ஏன் வழக்கு பதியவில்லை எனவும் மனித உரிமைகள் ஆணையம் கேள்வி எழுப்பியது. ஷோபியா மீது முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்த புதுக்கோட்டை உதவி ஆய்வாளர் லதா அடுத்த விசாரணையின்போது மனித உரிமைகள் ஆணையம் முன்பாக ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஷோபியா வழக்கு விசாரணை அக்டோபர் மாதம் 26-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. மாணவி ஷோபியா தரப்பில் வழக்கறிஞர் அதிசயகுமார் ஆஜரானார்.