Published:Updated:

தீபக் மிஸ்ரா அரசுப் பதவிகளை ஏற்கக்கூடாது - இந்திய பார் கவுன்சில் கோரிக்கை!

தீபக் மிஸ்ரா அரசுப் பதவிகளை ஏற்கக்கூடாது - இந்திய பார் கவுன்சில் கோரிக்கை!
தீபக் மிஸ்ரா அரசுப் பதவிகளை ஏற்கக்கூடாது - இந்திய பார் கவுன்சில் கோரிக்கை!

`ஓய்வுக்குப் பிறகு அரசு தரும் பதவியை ஏற்காதீர்கள்' என தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு இந்திய பார் கவுன்சில் கோரிக்கை விடுத்துள்ளது.


முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு நீதித்துறை அதிக அளவில் செய்திகளில் இடம்பெற்று வருகிற காலகட்டம் இது. இக்காலகட்டத்தில் உச்சநீதிமன்ற அரசியலமைப்பு அமர்வுகளில் விசாரிக்கப்பட்டு வந்த அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு வழக்குகளில் தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது. ஆதார் வழக்கு, சபரிமலை பெண்களுக்கு அனுமதி, அயோத்தியா வழக்கு, தன்பாலின ஈர்ப்பு (பிரிவு – 377) தொடர்பான வழக்கு எனப் பிரதானமான அனைத்து வழக்குகளுமே தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வின் கீழ் விசாரிக்கப்பட்டு வந்தது.

கடந்த ஜனவரி மாதம் உச்சநீதிமன்றத்தின் நான்கு மூத்த நீதிபதிகள் நடத்திய செய்தியாளர்கள் சந்திப்புக்குப் பிறகு நீதித்துறையின் மீதான சர்ச்சைகள் பூதாகரமாகின. ஒருதலைபட்சமாக செயல்படுகிறார் என தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக மாநிலங்களைவையில் எதிர்க்கட்சிகள் பதவி நீக்க தீர்மானம் கொண்டு வருகிற அளவுக்கு நீதிதுறையில் உள்ள சிக்கல்கள் தீவிரம் அடைந்தன. இந்த அனைத்து சிக்கல்களில் இருந்தும் முற்றிலுமான தீர்வு ஏற்படவில்லையென்றாலும் சமீபத்திய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகள் சிறிது அதன் மீதான வெப்பத்தை தனித்துள்ளன. இருந்தபோதிலும் நீதித்துறையின் முன் உள்ள சில கேள்விகள் இன்றளவும் விவாதப் பொருளாகவே உள்ளன.

ஓய்வுக்குப் பிறகு நீதிபதிகள் அரசாங்கம் தருகிற பதவிகளை ஏற்கலாமா? ஓய்வுக்குப் பிந்தைய பதவிகளுக்காக உச்சநீதிமன்ற நீதிபதிகள் பதவியில் இருக்கிற காலத்தில் அரசுக்கு சாதகமாக தீர்ப்புகள் வழங்கக்கூடும் என்கிற விவாதம் நீண்ட காலமாக இருந்து வருகிறது. தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் தலைமை நீதிபதி சதாசிவம் ஓய்வுபெற்ற உடனே கேரள மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டது நீதித்துறை வட்டத்திலுமே பெரும் எதிர்வினைகளை கிளப்பியது. பல முன்னாள் நீதிபதிகளுமே இந்தச் செயலை கேள்வியெழுப்பியிருந்தனர். அவருக்குப் பிறகு வந்த தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா 'நீதிபதிகள் பணி ஓய்வு பெற்ற பிறகு அரசாங்க பதவிகள் பெறக்கூடாது’ என்பதை மிக வெளிப்படையாகவே தெரிவித்தார்

சமீபத்தில் ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி செலமேஸ்வர் பதவியில் இருந்தபோதே அரசாங்கப் பதவிகளை தான் பெறப்போவதில்லை என அறிவித்தார். அவரைத் தொடர்ந்து தற்போது நீதிபதி குரியன் ஜோசப் அரசாங்கப் பதவிகளைப் பெறப்போவதில்லை என அறிவித்திருக்கிறார். சமீபத்தில் ஜூலை 6-ம் தேதி உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.கே கோயல் ஓய்வு பெற்ற தினமே தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். இதில் முரண் என்னவென்றால் மே மாதம் ஏ.கே கோயல் தலைமையிலான அமர்வு அளித்த தீர்ப்பு ஒன்றில் கூறியிருப்பதாவது, ``தீர்ப்பாயங்கள் ஓய்வு பெறுபவர்களுக்கான புகலிடமாக இருக்கக்கூடாது. மேலும் தீர்ப்பாயங்களில் வாதிடுபவரும் அவற்றுக்கான நீதிபதிகளை நியமிப்பவரும் அரசாகவே இருப்பதால், தீர்ப்புகளை சாதகமாக பெறுவதற்கான கருவியாக நீதிபதி நியமனங்கள் மாறிவிடக் கூடாது. நீதிபதிகள் ஓய்வுக்குப் பிறகான பணிகளைப் பெறுவதில் கட்டுப்பாடுகள் வேண்டும்” இந்த தீர்ப்பை வழங்கிய அமர்வை தலைமை தாங்கிய ஏ.கே கோயல் தான் ஓய்வு பெற்ற தினமே பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவராக நியமிக்கப்பட்டு அதையும் ஏற்றுக்கொண்டார்.

இந்த நிலையில், ஓய்வு பெறவுள்ள தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அரசாங்கம் ஏதேனும் பதவி வழங்கினால் ஏற்பாரா என்பது விவாதப் பொருளாகியிருக்கிறது. நீதிபதி தீபக் மிஸ்ரா சட்டக் குழுவின் தலைவராகவும் அல்லது லோக்பால் தலைவராகவும் நியமிக்கப்படலாம் என பேச்சுக்கள் ஒருபுறம் இருந்து வருகின்றன. இதற்கிடையே இந்திய பார் கவுன்சில் நீதிபதி தீபக் மிஸ்ரா அரசாங்கம் பதவி வழங்கினால் ஏற்றுக்கொள்ளக் கூடாது என அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில் ``நீதித்துறையின் சுதந்திரத்தில் தலையீடு ஏற்படுவதாக சந்தேகம் எழுப்பக்கூடியதாகவும், ஒய்வு பெறுகிற நீதிபதிகளின் மீதான நம்பிக்கையை குலைக்கும் விதமாகவும் அமைகிற எந்த ஒரு செயலும் பொதுப் பார்வையில் நீதித்துறையின் மீதான நம்பிக்கையை சீர்குலைக்கவே செய்யும். நாட்டில் தற்போது நிலவுகிற சூழலில் நீதிபதிகள் செலமேஸ்வர் மற்றும் குரியன் ஜோசப் ஆகியோர் எடுத்திருக்கிற முடிவானது நாட்டின் ஜனநாயகத்தை நிலைநிறுத்த வழிசெய்யும் ஆரோக்கியமான முடிவாகும். எனவே, நீதிபதி தீபக் மிஸ்ராவும் ஓய்வுக்குப் பிறகு எந்தவொரு அரசுப் பதவிகளையும் ஏற்காமல் செலமேஸ்வர் எடுத்துள்ள முன்முயற்சிக்கு மேலும் வலுசேர்ப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம். அவ்வாறு செய்வதன் மூலம் அவர் ஜனநாயகத்துக்கும் நீதித்துறைக்கும் மிகப்பெரிய சேவை செய்வார்” என்றுள்ளது.

பதவி காலத்திலே மிகவும் சர்ச்சைக்குள்ளாகி பதவி ஓய்வு பெறுகிற வேலையில் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்புகள் வழங்கிய அமர்வை தலைமை தாங்கியவராக ஓய்வு பெரும் தீபக் மிஸ்ராவின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

அடுத்த கட்டுரைக்கு