Published:Updated:

குணப்படுத்த முடியாத நோயால் அவதிப்படும் சிறுவன்! - விசாரணையின்போது கண்கலங்கிய நீதிபதி கிருபாகரன்

குணப்படுத்த முடியாத நோயால் அவதிப்படும் சிறுவன்! - விசாரணையின்போது கண்கலங்கிய நீதிபதி கிருபாகரன்
குணப்படுத்த முடியாத நோயால் அவதிப்படும் சிறுவன்! - விசாரணையின்போது கண்கலங்கிய நீதிபதி கிருபாகரன்

கடலூரைச் சேர்ந்த மூளைபாதிப்புக்குள்ளான 10 வயது சிறுவனைக் குணப்படுத்த முடியாது என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதை அறிந்து கண்ணீர் சிந்திய உயர் நீதிமன்ற நீதிபதி கருணாகரன், சிறுவனின் பெற்றோருக்கு நிதியுதவி வழங்குவது குறித்து பதிலளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டார்.

வலிப்பு நோயாலும், மூளை பாதிப்புக்கு உள்ளாகி உள்ள தனது 10 வயது மகனை , கருணைக் கொலை செய்ய அனுமதிக்க கோரி கடலூரைச் சேர்ந்த திருமேனி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதுகுறித்து மருத்துவர்கள் அறிக்கை அளிக்க உத்தரவிட்ட நீதிமன்றம், சிறுவனை பரிசோதனை செய்வதற்கான மருத்துவ நிபுணர்களை நியமித்தது. நீதிமன்ற உத்தரவின்படி, கடலூரில் இருந்து சென்னை அழைத்து வரப்பட்ட சிறுவனுக்கு, சென்னை பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.பாஸ்கரன் அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. 

அப்போது, மூளை பாதிப்புக்குள்ளான 10 வயது சிறுவனை கருணைக் கொலை செய்ய இயலாது எனவும், அதேநேரம் நிரந்தரமாகக் குணப்படுத்தவும் முடியாது எனவும் மருத்துவ நிபுணர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை அளித்தனர். நிபுணர் குழு தாக்கல் செய்த அறிக்கையை படித்துப் பார்த்த நீதிபதிகள், சிறுவனை குணப்படுத்த முடியாது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டனர். அப்போது குறுக்கிட்ட மத்திய அரசின் உதவி சொலிசிட்டர் ஜெனரல் கார்த்திகேயன், சிறுவனுக்கு நிதி உதவி பெற்றுத் தர வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.

ஆனாலும், பிற்காலத்தில் பெற்றோர் இல்லாமல் சிறுவனுக்கு ஏற்படும் நிலையை கருத்தில் கொண்டு முடிவெடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார். அப்போது, நீதிபதி கிருபாகரன், கண்கலங்கிவிட்டார். சிறுவனைப் பராமரித்துக் கொள்ள தொண்டு நிறுவனம் தயாராக இருப்பதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அச்சிறுவனின் தந்தை ஏற்க மறுத்து விட்டார். இதையடுத்து, சிறுவனின் பெற்றோருக்கு மாதாந்திர நிதியுதவி வழங்க முடியுமா என்பது குறித்தும், மருத்துவ உதவி வழங்க முடியுமா என்பது குறித்தும் பதிலளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.  இதுபோன்ற சிறுவர்களுக்கு உதவி வழங்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் ஏன் திட்டம் வகுக்கக் கூடாது எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். பின்னர், வழக்கு விசாரணையை வரும் 23ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.