Published:Updated:

உச்ச நீதிமன்றத்திடம் நீரா ராடியா டேப்புகள் ஒப்படைப்பு

Vikatan Correspondent

புதுடெல்லி, டிச.02,2010

2ஜி ஸ்பெக்டரம் ஒதுக்கீடு விவகாரத்தில் முக்கிய ஆதாரமாகவுள்ள லாபியிஸ்ட் நீரா ராடியாவுக்கும் அரசியல் பிரமுகர்கள், பத்திரிகையாளர்கள்,  தொழிலதிபர்கள், உள்ளிட்டோருக்கும் இடையிலான தொலைபேசி பேச்சு விவரங்கள் அடங்கிய ஆடியோ டேப்புகள் சீலிடப்பட்ட கவரில் உச்ச நீதிமன்றத்திடம் மத்திய அரசு இன்று ஒப்படைத்தது. ##~~##  

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி மற்றும் ஏ.கே.கங்குலி ஆகியோர் கொண்ட பெஞ்சிடம் பதிவுசெய்யப்பட்ட உரையாடல்களை சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்ரமணியம் அளித்தார்.

அந்த உரையாடல்கள் அடங்கிய டேப்புகள், சர்வரில் இருந்து நேரடியாக ஹார்ட் டிஸ்க்கில் டவுன்லோட் செய்யப்பட்டு கொண்டுவரப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

அதேநேரத்தில், ஏறத்தாழ 5,800 உரையாடல்கள் இருப்பதாக தெரிவித்துள்ள சிபிஐ, அவற்றில் இதுவரை 3000 உரையாடல்களை மட்டும் எழுத்து வடிவத்தில் கொண்டு வந்திருப்பதாக கூறியுள்ளதை தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் குறிப்பிட்டார்.

முன்னதாக, பதிவு செய்யப்பட்ட அசல் டேப் அல்லது சிடிக்களை சீலிடப்பட்டு நீதிமன்றத்திடம் ஒப்படைக்க உத்தரவிடுகிறோம். இவை, நீதிமன்றத்தின் லாக்கரில் பாதுகாக்கப்படும். தேவையான போது அவற்றை பயன்படுத்த வழிவகை செய்யப்படும் என்று அரசு வழக்கறிஞரிடம் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நேற்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

இந்த டேப்புகளை அழித்து விட வாய்ப்பு இருப்பதால், அவற்றைப் பாதுகாக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தின் கவனத்தில் கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து, நீதிபதிகள் இந்த உத்தரவைப் பிறப்பித்திருந்தனர்.