Published:Updated:

“உள்ளே தள்ளிடுவோம்!” - வாட்ஸ்அப் அட்மின்களை அச்சுறுத்தும் போலீஸ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
“உள்ளே தள்ளிடுவோம்!” - வாட்ஸ்அப் அட்மின்களை அச்சுறுத்தும் போலீஸ்
“உள்ளே தள்ளிடுவோம்!” - வாட்ஸ்அப் அட்மின்களை அச்சுறுத்தும் போலீஸ்

“உள்ளே தள்ளிடுவோம்!” - வாட்ஸ்அப் அட்மின்களை அச்சுறுத்தும் போலீஸ்

பிரீமியம் ஸ்டோரி

ரு தீவிரவாத இயக்கத்துக்குத் தலைவனாக இருப்பதைவிட, வாட்ஸ்அப் குரூப்புக்கு அட்மினாக இருப்பது ஆபத்தான விஷயமாக மாறியிருக்கிறது. காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் வாட்ஸ்அப் குரூப் வைத்திருப்பவர்களைக் குறிவைத்து மாவட்ட நிர்வாகம் பிறப்பித்துள்ள ஓர் உத்தரவு, தேசிய அளவில் விவாதப் பொருளாகியுள்ளது.

வாட்ஸ்அப் வழியாக தவறான செய்திகளும் வதந்திகளும் பரவி, அதனால் சட்டம்-ஒழுங்கு கெடுவதைத் தடுப்பதற்காக கிஷ்த்வார் மாவட்ட கலெக்டர் ஜூன் 29-ம் தேதி ஓர் உத்தரவு போட்டார். இதனைக் காவல்துறை இப்போது அமல்படுத்தத் தொடங்கியிருக்கிறது. இதன்படி, அந்த மாவட்டத்தில் வாட்ஸ்அப் குழு வைத்திருப்பவர்கள் அனைவரும் தங்கள் குழுக்களைப் பதிவுசெய்ய வேண்டும். மாவட்டத்தில் உள்ள தேசியத் தகவல் மையத்தில் இதற்கான விண்ணப்பங்கள் தரப்படுகின்றன. தங்கள் புகைப்படத்தை ஒட்டி, ஆதார் கார்டு ஜெராக்ஸை இணைத்து விண்ணப்பம் கொடுக்கும் அட்மின், கீழ்க்கண்ட உறுதிமொழிகளையும் கொடுக்க வேண்டும்.

“உள்ளே தள்ளிடுவோம்!” - வாட்ஸ்அப் அட்மின்களை அச்சுறுத்தும் போலீஸ்

• குழுவில் பலரும் பதிவிடும் தகவல்களுக்கு நானே பொறுப்பு.

• எனக்கு நன்றாகத் தெரிந்தவர்களை மட்டுமே குழுவில் சேர்ப்பேன். குரூப்பில் இருப்பவர்கள் பற்றி எப்போது போலீஸ் கேட்டாலும் தகவல் சொல்வேன்.

• யாராவது பொய்ச் செய்தியையோ, வதந்தியையோ குழுவில் பகிர்ந்தால், அவரைக் குழுவிலிருந்து நீக்குவேன். ‘அது பொய்யான தகவல்’ என அதை மறுத்து நான் பதிவு போடுவேன்.

• இப்படி ஒரு சம்பவம் நடந்தால், உடனடியாக அருகில் உள்ள காவல்நிலையத்துக்குத் தகவல் தெரிவிப்பேன். வதந்தி அல்லது பொய்ச்செய்தி பரப்பிய நபர்மீது நடவடிக்கை எடுக்க வைப்பேன்.

• போலீஸுக்குத் தகவல் தெரிவிக்காமல் இருந்தால், அந்தக் குற்றத்துக்கு நானும் பொறுப்பாளி ஆகித் தண்டிக்கப்படுவேன் என்பதை உணர்ந்துள்ளேன்.

• என் வாட்ஸ்அப் குரூப் மூலம் ஏதாவது வதந்தி பரவி, அதனால் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால், அட்மின் என்ற முறையில் அதற்கு நானே பொறுப்பு.

என்றெல்லாம் உறுதிமொழி தரவேண்டும். தேசியத் தகவல் மையம், தங்களிடம் பதிவுசெய்யப்பட்டிருக்கும் வாட்ஸ்அப் குழுக்கள் பற்றிய விவரங்களை அவ்வப்போது வெளியிடுமாம். ‘‘வாட்ஸ்அப் குழுக்களால் ஏதாவது பிரச்னை ஏற்பட்டால், ஐ.டி சட்டம், சைபர் க்ரைம் சட்டம், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் என்று பல சட்டங்களின்கீழ் இரண்டு ஆண்டுகள்வரை சிறைக்குப் போகவேண்டியிருக்கும்’’ என்கிறது போலீஸ். புதிதாக வாட்ஸ்அப் குரூப் அல்லது ஃபேஸ்புக் பக்கம் ஆரம்பிப்பதும் அங்கே கடினமாகியுள்ளது. இப்படி ஆரம்பிக்கும் உத்தேசம் உள்ளவர்கள், தாங்கள் ஆரம்பிக்கவிருக்கும் குழுவின் பெயர், என்ன நோக்கத்துக்காகக் குழு ஆரம்பிக்கப்படுகிறது, எந்தெந்த மொழிகளில் பதிவுகள் போடப்படும் என்பவை உள்ளிட்ட விவரங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். குழு ஆரம்பிக்கவிருக்கும் அட்மினின் கடந்த கால வரலாற்றை போலீஸ் மூலம் விசாரிப்பார்கள். உளவுத்துறையும் விசாரிக்கும். எல்லாம் தெளிவாக இருந்தால் மட்டுமே அனுமதி கிடைக்கும்.

இந்த உத்தரவு அமலுக்கு வந்த சில நாள்களில், சுமார் 25 வாட்ஸ்அப் குழுக்கள் பதிவுசெய்யப் பட்டுள்ளன. முன்னாள் அமைச்சரும் காங்கிரஸ் தலைவருமான சரூரி, ‘‘ஆபாசத்தைப் பரப்பும் வாட்ஸ்அப் குழுக்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டியதுதான். ஆனால், இப்படிக் குழுவைப் பதிவுசெய்யவேண்டும் என்றெல்லாம் சொல்வது, கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரானது. நிறையப் பேர் தங்கள் குடும்ப உறவுகளுக்காக மட்டும் என்று குழு நடத்துவார்கள். அவர்களையும் அலைக்கழிக்கலாமா?’’ என்று கேட்கிறார். ஷியா முஸ்லிம் ஃபெடரேஷன் தலைவர் ஆஷிக் ஹுசைன் கான், ‘‘இந்த மாவட்டத்தில் முஸ்லிம்கள் சிறுபான்மையினராக உள்ளனர். அவர்களைக் குறிவைத்தே இப்படி உத்தரவு போடப்பட்டுள்ளது’’ என்கிறார். ஆனால், கிஷ்த்வார் மாவட்ட சீனியர் எஸ்.பி-யான அப்ரார் அகமது, ‘‘சில வாட்ஸ்அப் குழுக்களில் தீவிரவாதிகளை ஹீரோ போலச் சித்திரிக்கிறார்கள். தவறான செய்திகளைப் பரப்பிக் கலவரத்தைத் தூண்டுகிறார்கள். அதனால், இப்படி ஓர் ஒழுங்கு அவசியப்படுகிறது. அரசியல் சட்டத்தின் 19-வது பிரிவு கருத்துரிமை வழங்கியுள்ளது உண்மைதான். ஆனால், அதைத் தவறாகப் பயன்படுத்தக் கூடாது. ஒரு கிரிக்கெட் போட்டியில் ஏற்படும் சின்ன மோதல்கூட இங்கு மதக்கலவரத்தை ஏற்படுத்திவிடும் அபாயமுள்ளது’’ என்கிறார்.

ஏற்கெனவே 2016 ஏப்ரலில் காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் ‘வாட்ஸ்அப் செய்தி குரூப்கள் அனைத்தும் பதிவுசெய்யப்பட வேண்டும்’ என அரசு உத்தரவு போட்டது. அப்போது அங்கு பெரும் கலவரம் வெடித்து, பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஐந்து பேர் இறந்தனர். இப்போது கிஷ்த்வார் அமைதியாக இருக்கும்போது, இந்த உத்தரவு வந்துள்ளது. பல மாநிலங்களில் குழந்தைக் கடத்தல் கும்பல் என நினைத்து அப்பாவிகள்மீது தாக்குதல் நடத்தப்பட்டு, இதுவரை 20 பேருக்கு மேல் கொல்லப்பட்டுள்ளனர். இவற்றில் பல சம்பவங்களில் வாட்ஸ்அப் மூலமே வதந்தி பரவியது. அங்கெல்லாம் இப்படிக் கட்டுப்பாடுகள் வரவில்லை.

‘‘தேவையான நேரங்களில் இணையச் சேவையைத் துண்டித்து, வதந்திகள் பரவுவதைக் கட்டுப்படுத்த அரசால் முடியும். காஷ்மீரில் மட்டுமல்லாமல், தூத்துக்குடியில்கூட இதைச் செய்த முன்னுதாரணங்கள் உண்டு. அப்படி இருக்கும்போது, வாட்ஸ்அப் குழுக்களைப் பதிவுசெய்யச் சொல்வதில் உள்நோக்கம் உள்ளது. தகவல் பரிமாற்றத்தைக் கண்காணிக்கவும், அரசுக்கு எதிரான குரல்களை நசுக்கவும் இதை ஆயுதமாகப் பயன்படுத்தப் பார்க்கிறார்களோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது’’ என்கிறார்கள் மனித உரிமை ஆர்வலர்கள்.

இந்தியாவில் பல மோசமான விஷயங்கள் காஷ்மீரிலிருந்து ஆரம்பித்து அமலுக்கு வரும். அதுதான், கவலையாக இருக்கிறது.

- தி.முருகன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு