Published:Updated:

எந்த விதியின் கீழ் இறைச்சி அழிக்கப்பட்டது? - தமிழக அரசுக்கு நீதிபதிகள் கேள்வி

எந்த விதியின் கீழ் இறைச்சி அழிக்கப்பட்டது? - தமிழக அரசுக்கு நீதிபதிகள் கேள்வி
எந்த விதியின் கீழ் இறைச்சி அழிக்கப்பட்டது? - தமிழக அரசுக்கு நீதிபதிகள் கேள்வி

கடந்த 17-ம் தேதி ஜோத்பூரிலிருந்து சென்னை எழும்பூர் வந்த ரயிலில் 2,100 கிலோ இறைச்சியை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது நாய்க் கறியா அல்லது கெட்டுப் போன ஆட்டிறைச்சியா என பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில், இந்த இறைச்சி குறித்த ஆய்வறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிடக் கோரி இந்திய கால்நடைகளுக்கான மக்கள் அமைப்பு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில்,  இறைச்சி குறித்த ஆய்வறிக்கையை உணவுத் துறை அதிகாரிகள் வெளியிடாதது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், ரயில்வே காவல்துறை பதிவு செய்த வழக்கில் விலங்குகள் கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட முக்கிய சட்டப்பிரிவுகள் சேர்க்கப்படவில்லை எனக் கூறப்பட்டுள்ளது.

மேலும், பறிமுதல் செய்யப்பட்ட இறைச்சி குறித்து ஆய்வுசெய்ய சட்ட ஆணையரை நியமிக்க வேண்டும் எனவும் வெளிமாநிலங்களில் இருந்து இறைச்சியைக் கொண்டு வருவதற்கான விதிகளை வகுக்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த மனு உயர் நீதிமன்ற நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ராஜமாணிக்கம் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர் பறிமுதல் செய்யப்பட்ட இறைச்சிகள் ஆய்வுக்கு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்துக்கு அனுப்பப்பட்டதாகவும் அது ஆட்டு இறைச்சி என்று தெரியவந்ததாகவும் இருந்தபோதிலும் அது சுகாதாரமற்ற முறையில் இருந்ததால் அதை மாநகராட்சி அழித்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், எந்த விதியின் கீழ் அழிக்கப்பட்டது என்பது குறித்து அறிக்கை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இந்த வழக்கில் சென்னை மாநகராட்சியையும் பிரதிவாதியாக சேர்த்துள்ளது. வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 6-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர் நீதிபதிகள்.