Published:Updated:

பிரதமரை ராசா மதிக்கவில்லை:சுப்ரீம்கோர்ட் கண்டனம்

Vikatan Correspondent

புதுடெல்லி, டிச.02,2010

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரத்தில், பிரதமர் மன்மோகன் சிங்கை அப்போதைய தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ.ராசா மதிக்கவில்லை என்று உச்ச நீதிமன்றம் இன்று கடும் கண்டனம் தெரிவித்தது. ##~~##

ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பான வழக்கு விசாரணையில், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்வதற்கு முன்பு சில நாட்கள் பொறுத்திருக்குமாறு பிரதமர் மன்மோகன் சிங் எழுதிய கடிதத்தை ஆ.ராசா உதாசீனப்படுத்தியதாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி மற்றும் ஏ.கே.கங்குலி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் குறிப்பிட்டது.

இதுகுறித்து நீதிபதிகள் கூறுகையில், "அமைச்சர்கள் குழுவின் முடிவுகளின் அடிப்படையில் சட்ட அமைச்சரின் கடிதத்தைத் தொடர்ந்து, சில நாட்கள் காத்திருக்குமாறு பிரதமரிடம் இருந்து கடிதம் வந்துள்ளது. அதைக் கடைபிடிக்காதது ஏன்?" என்றனர்.

மேலும், "பிரதமருக்கு மத்திய அமைச்சர் மதிப்பு அளிக்காததையே இது காட்டுகிறது. தொலைத்தொடர்பு அமைச்சகம் விதிமுறைகளை பின்பற்றாதது மட்டுமின்றி, பரிந்துரைகளையும் புறக்கணித்துள்ளது," என்று நீதிபதிகள் சாடினர்.

பிரதமரை மதிக்கவில்லை என்ற உச்ச நீதிமன்றத்தின் கண்டிப்புக்கு பதிலளித்துள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, "பல்வேறு பாவங்களுக்கு நான் குற்றவாளியாக கருதப்படலாம். ஆனால், பிரதமரை மதிக்கவில்லை என்ற குற்றத்தைச் செய்யவில்லை," என்றார் அவர்.

முன்னதாக, ஸ்பெக்ட்ரம் தொடர்பான வழக்கில், அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என மத்திய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரியின் றிக்கையில் கூறப்பட்டுள்ளது ஊகத்தின் அடிப்படையிலானது என உச்ச நீதிமன்றத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா புதன்கிழமை தெரிவித்தார்.

ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் புதன்கிழமை நடைபெற்ற விவாதத்தின்போது ஆ.ராசா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் டி.ஆர்.அந்தியர்ஜுனா இதனைக் குறிப்பிட்டார்.