Published:Updated:

ஐந்து கட்டங்களாக 87 பேரிடம் விசாரணை! - தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு ஆணையம் தகவல்

ஐந்து கட்டங்களாக 87 பேரிடம் விசாரணை! - தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு ஆணையம் தகவல்
ஐந்து கட்டங்களாக 87 பேரிடம் விசாரணை! - தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு ஆணையம் தகவல்

துாத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து விசாரணை செய்துவரும் ஒரு நபர் கமிஷன் இதுவரை  87 பேரிடம் விசாரணை நடத்தி உள்ளது என ஓய்வுபெற்ற  நீதிபதி அருணா ஜெகதீசன் தெரிவித்துள்ளார்.

வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் ஆலையை மூடிய வலியுறுத்தி 18-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் 100 நாள்களாகத் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். 100-வது நாளான கடந்த மே  22-ம் தேதி நடந்த ஆட்சியர் அலுவலகம் நோக்கிச் சென்ற பேரணியில் கலவரம் வெடித்ததது. அதனைக் கட்டுப்படுத்த நடந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து  விசாரணை செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் கமிஷனை தமிழக அரசு நியமித்தது. கடந்த ஜூன்  4-ம் தேதி துாத்துக்குடியில் தனது விசாரணையை தொடங்கிய இந்த கமிஷன், இதுவரையில்  5 கட்ட விசாரணைகளை நடத்தியிருக்கிறது. 

ஐந்தாம் கட்ட விசாரணை  கடந்த 22ம் தேதி தொடங்கி 24-ம் தேதி (இன்று) முடிந்தது. இந்த விசாரணையின் முடிவில்,  துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து இதுவரை நிவாரணம் பெறாமல் இருந்த  மனோகரன் என்பவருக்கு நிவாரணத் தொகையான ரூ.1.5 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமிஷனின் தலைவர் நீதிபதி அருணா ஜெகதீசன், ``தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து  இதுவரை  5 கட்ட விசாரணைகள் முடிவடைந்துள்ளது.  இது வரையில் துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்களின் உறவினர்கள்,  துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்தவர்கள் என 87 பேரிடம் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதில் 209 ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டுள்ளது.

இனி  6வது கட்ட விசாரணை வரும் டிசம்பர் 3-வது வாரத்தில் துவங்கும். அதில் போராட்டத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், பல்வேறு அமைப்புகள் ஆகியவற்றிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது. கமிஷனிடம்  இதுவரை 140 பேர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்திருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் சம்மன் அனுப்பட்டு விசாரணை செய்யப்படுவார்கள். பின்னர்,  காவல்துறையினர், சிகிச்சையளித்த மருத்துவர்கள்,  உடற்கூராய்வு செய்த மருத்துவர்கள், கலவரத்தில் சேதமான சொத்துக்கள் குறித்து ஸ்டெர்லைட் தரப்பில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தவர்கள் என  அனைவரும் விசாரிக்கப்படுவர்கள்.” என்றார்.