Published:Updated:

`ஏ.ஆர்.முருகதாஸ் மன்னிப்பு கேட்டாகணும்!'- உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்

கலிலுல்லா.ச
`ஏ.ஆர்.முருகதாஸ் மன்னிப்பு கேட்டாகணும்!'- உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்
`ஏ.ஆர்.முருகதாஸ் மன்னிப்பு கேட்டாகணும்!'- உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்

அரசின் நலத்திட்டங்களை விமர்சித்த இயக்குநர் முருகதாஸ், நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் வலியுறுத்தபட்டுள்ளது.

நடிகர் விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியான 'சர்கார்' திரைப்படத்தில், தமிழக அரசையும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள இலவச திட்டங்களையும் கடுமையாக விமர்சிக்கும் காட்சிகள் இருப்பதாகவும், அதை நீக்கக் கோரி தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் அ.தி.மு.க-வினர் போராட்டம் நடத்தினர். இந்த வழக்கில், தன்னை காவல்துறை எந்நேரமும் கைதுசெய்யலாம் என்பதால், முன்ஜாமீன் கோரி நவம்பர் 9-ம் தேதி மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி இளந்திரையன், நவம்பர் 27-ம் தேதி வரை ஏ.ஆர்.முருகாதாஸை கைதுசெய்யக் கூடாது என இடைக்கால உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, முருகதாஸுக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாதென, புகார்தாரரான தேவராஜன் மனு ஒன்றைத் தாக்கல்செய்தார். `எப்போது புகார் அளித்தீர்கள்' என்று நீதிபதி எழுப்பிய கேள்விக்கு, தேவராஜன் முறையான பதிலளிக்கவில்லை. `புகார் தேதிகூட தெரியாமல் முன்ஜாமீன் வழங்கக் கூடாது என்று வழக்கு தொடர்கிறீர்களா' என நீதிபதி வினா எழுப்பினார்.

அப்போது, அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஏ.நடராஜன் ஆஜராகி, 'சர்கார்' படத்தில் அரசுத் திட்டங்களை விமர்சித்ததற்காக முருகதாஸ் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், எதிர்காலத்தில் அவர் எடுக்கும் படங்களில், அரசின் திட்டங்களையும் அரசையும் விமர்சிக்கும் வகையில் காட்சிகள் அமைக்க மாட்டேன் என்றும் உத்தரவாத பத்திரம் தாக்கல்செய்ய வேண்டும் எனவும் வாதிட்டார். இதுதொடர்பாக, முருகாதாஸிடம் விளக்கம் பெற்று தெரிவிக்க வேண்டுமென அவரது வழக்கறிஞர் தெரிவித்ததையடுத்து, வழக்கு நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.