Published:Updated:

பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 24

பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 24
பிரீமியம் ஸ்டோரி
News
பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 24

பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 24

மும்பை

பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 24மற்றெந்த கேமிங் அலுவலகத்தைப் போலவே இண்டிஸ்கேப்பும் இரவு நேரத்தில் பரபரப்பாக இயங்கி வந்தது. தற்போதுதான் கேமிங் சம்பந்தப் பட்ட வணிகத்திற்குப் பொறுப்பேற்றுக்கொண்ட வருண், ஆச்சர்யம் நிறைந்தவன். அவனிடம் இருக்கும் ஆற்றல் மற்றவர்களையும் வேகமாகத் தொற்றிக்கொண்டது. அவன் சொல்வதைக் கேட்டுச் செயல்படக்கூடியவர்கள் அவனைச் சுற்றியிருந்தார்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 24

அன்றிரவு நடந்த கூட்டத்தில் டவுன்ஸ்விலே-யின் இயக்குநர் லேட்டஸ்ட் ஆக்டிவேஷன் எண்ணிக்கையைக் குறிப்பிட்டார். ‘`மூன்று நாள்களில் சுமார் 1,00,000 ஹிட்களைப் பெற்றிருப்ப துடன் 47,000-க்கும் மேற்பட்டோர் உண்மையாகவே விளையாட ஆரம்பித்திருக்கின்றனர். இந்த கேமை அறிமுகப்படுத்தியபோது இருந்த 23,000 என்கிற எண்ணிக்கையைவிட இது அதிகம் என்பதுடன், ஒரு நல்ல ஆரம்பமும் ஆகும்’’ என்றார் அவர். 

அறையில் இருந்த அனைவரும் தலையை அசைத்தனர். ‘`ஆக்டிவேஷன் நாம் எதிர்பார்த்தது போல இருக்கிறது. வடிவமைப்புக் குழுவினர் ஏதேனும் சொல்ல விரும்புகிறீர்களா?” என்று கேட்டான் வருண்.
டெனிம்ஸ் மற்றும் ஹூடி (அதாவது, ஜீன்ஸ், ஜாக்கெட் போட்டிருப்பவர்கள்) அணிந்த இளைஞர்கள் சிலர் மேஜையின் நடுப்பகுதியை நோக்கிவந்து அங்கிருந்த கணினியில் பென் ட்ரைவைச் சொருகி, பெரிய திரையின் உதவியுடன் அவர்களது பிரசன்டேஷனை ஆரம்பித்தனர்.

‘`இந்த கேமில் 75 நிலைகள் இருக்கும்படி ஏற்கெனவே தயார்.  இந்த நிலைகளை கேமர்கள் விளையாடி முடிப்பதற்குள் அடுத்த 75 நிலைகள் தயாராகிவிடும்’’ என்றனர்.

‘`குறைந்தபட்சம் 150 நிலைகள் இருக்கவேண்டும் என்று முடிவெடுத்தோம் இல்லையா? 75 நிலைகளுக்கு என்ன திட்டம் இருக்கிறது?’’ என அவன் அமைதியாகக் கேட்டான்.

‘`புதுமையான வகையில் நாங்கள் வடிவமைத்து வருகிறோம்.   இது அனைவரையும் பிரமிக்க வைக்கக்கூடியதாக இருக்கும் என்பது உறுதி’’ என வடிவமைப்பாளர்களின் தலைவர் கூறினார்.

‘`என்ன புதுமையான வடிவமைப்பு?”

பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 24

‘`அதில் பல வண்ணங்களும், அற்புதமான கிராஃபிக்ஸ்களும் இருக்கும். டவுன் பிளானிங், டிசைனிங் என ஒரு புதிய நிலையில் கேமர்கள் வசிக்கிற மாதிரி இருக்கும்.’’

‘`இதன்மூலம் வருமானம் சம்பாதிக்க முடியுமா, மக்கள் பிட்காயின் தந்து வாங்க வேண்டுமா அல்லது உண்மையான பணம் தந்து வாங்க வேண்டுமா, விளையாடுபவர்கள் ஒரு நிலை யிலிருந்து அடுத்த நிலைக்குச் செல்வதற்கு ஊக்கமளிப்பதுபோல, நமக்கு வருமானம் சம்பாதித்துத் தரும்படி ஏதாவது இருக்கிறதா?’’

இதைக் கேட்டதும் மேசையின் நடுவில் இருந்தவர்கள் ஒருவருக்கொருவர் பார்த்துக்கொண்டனர்.
 
‘`சார், கேமுக்காக வாடிக்கை யாளர்களிடமிருந்து பணம் வாங்கக் கூடாது என்பது உங்கள் அப்பாவின் கொள்கை. அவரைப் பொறுத்தவரை, வருமானம் என்பது விளம்பரங்கள்மூலம் வர வேண்டும் என்பதில்  கண்டிப்பாக இருப்பவர்’’ என்றார்.

‘`தெரியும். ஃபேஸ்புக்கில் விளம்பரம் செய்ய முடிவெடுத்த போதே அதையும் பேசி முடித்து விட்டோம். இதனால் நமக்கும், ஃபேஸ்புக்குக்கும், வாடிக்கை யாளருக்கும் நன்மை கிடைக்க வேண்டும்.’’

‘`நாங்கள் எல்லோரும் கலந்து பேசி ஒரு புதுமையான திட்டத்தை இதற்கென்று வடிவமைக்கிறோம். எங்களுக்கு ஒரு வாரம் கால அவகாசம் கொடுங்கள்’’ என்றார்.

இதைக் கேட்டதும், கோபத்துடன் பேச ஆரம்பித்தான் வருண். ‘‘உங்கள் புதுமையான திட்டத்தைத் தூக்கிப்போடுங்கள். பிரபலமாக இருக்கும் கேம்களைப் பாருங்கள். வெட்கமில்லாமல் அதை காப்பி அடியுங்கள். இந்த கேமை பிரபலமாக நாம்  மில்லியன் கணக்கில் பணத்தைச் செலவழிக் கிறோம். எனவே, உடனே சந்தை யில் இந்த கேமை அறிமுகப் படுத்துங்கள். சந்தையில் எது வேலை செய்கிறது என்பதை என்னிடம் சொல்லுங்கள். அதை நாம் பெரிய அளவில் செய்வோம்’’  என்ற வருண், சில நிமிடங்கள் அமைதியாக இருந்தான்.

‘`உங்களிடமிருந்து கடைசியாக நான் கேட்பது இதுதான். நாளை காலை 10 மணிக்கு நான் வருவேன். அப்போது அடுத்த 75 நிலைகளுக் கான திட்டத்தையும், அதன்மூலம் கிடைக்கப்போகும் வருமானம் குறித்த கணக்கையும் எனக்குக் கொடுங்கள்’’ என்று சொல்லிவிட்டு எழுந்தான். 

மறுநாள் காலை, வருண் பாதித் தூக்கத்தில் இருந்த கேம் படைப்பாற்றல் குழுவைச் சேர்ந்தவர்களைச் சந்தித்தான். அந்தக் கூட்டத்தில் இரண்டு முடிவுகள் எடுக்கப்பட்டன.

1. கேமின் அடுத்த 75 நிலைகளுக்கான திட்டம் வெட்கமில்லாமல் போட்டி நிறுவனமான ஃபார்ம்ஸ்விலேயில் காப்பி செய்யப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. கேமிங் சம்பந்தப்பட்ட காப்புரிமைச் சட்டங்கள் மிகவும் பலவீனமாக இருப்பது இந்த முடிவுக்குச் சாதகமாக இருந்தது.

2. கேமின் ஆரம்பத்திலிருந்து எளிமையான மூன்று நிலைகள் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாகக் கொடுக்கப்படும். நான்காவது நிலையிலிருந்து `ட்ராப் ரேட்’ என்பது ஒவ்வொரு மூன்று நிலைகளுக்குமாக நிர்ணயிக்கப்படும். அதாவது, நான்காவது, ஏழாவது, பத்தாவது, பதிமூன்றாவது நிலை… ‘ட்ராப் ரேட்’ என்பது எந்தவொரு குறிப்பிட்ட நிலையில் வாடிக்கையாளர் தோல்வியடைவார் என்பதைக் குறிக்கும். வாடிக்கையாளர் அடுத்த நிலைக்குச் செல்லவேண்டுமெனில் அவர் கட்டணம் செலுத்த வேண்டும். வாடிக்கையாளர் உண்மையான பணம் கொடுத்து பிட்காயினை  வாங்கி, அதைக் கட்டி அடுத்தடுத்த நிலைக்கு  முன்னேறுவார்.

‘‘ஆனால், ஒரு சின்னப் பிரச்னை என்னவென்றால், இதை நடைமுறைப்படுத்த நம்மிடம் போதுமான அளவு புரோக்ராமர்கள் இல்லை’’ என்று புரோக்ராம் இயக்குநர் வெளிப்படையாகக் கூறினார்.

வருண் அதுபற்றி கொஞ்சம்கூட கவலைப்படாமல்,  ‘‘அப்படியென்றால் நாம் அதிகமானவர்களைப் பணியில் அமர்த்துவோம். ஓரளவுக்கு வளர்ந்தபின், போட்டி நிறுவனங்களில் வேலை செய்பவர்களை `அபகரித்து’க் கொள்வோம்” என்றான்.

பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 24

வாஷிங்டன் DC

‘`இந்த வீடியோவைப் பாருங்கள். நம்முடைய விசாரணையின் ஆரம்பப் புள்ளியாக இருக்கட்டும்’’ என ஏட்ரியன் கட்டளையிட்டார்.

‘`ஏ.டி.எம்–களின் வீடியோ பதிவுகள் நம்மிடம் இருக்கின்றன. அவற்றிலிருந்து எதுவும் தெரிய வரவில்லை’’ என்றனர்.

“ஏ.டி.எம்-கள் இல்லை, டோனி. கோனே ஐலேண்ட் அவென்யூ தெருக்களிலிருந்த கேமராக்களிலிருந்து தகவலைப் பெறுங்கள். அதன்பிறகு ஏ.டி.எம்-களில் பாதுகாப்பிற்காக வைக்கப்பட்ட கேமராக் களிலிருக்கும் தகவல்களை ஒப்பிட்டுப் பார்ப்போம். அப்போது புதிதாக ஏதாவது தெரியவரும்” என்றார்.

ஏட்ரியன் அறையிலிருந்து வெளியே சென்ற டோனி, 90 வினாடி களுக்குப் பிறகு மீண்டும் உள்ளே வந்தார். ‘`கோனே ஐலேண்ட் அவென்யூ பாலத்தைச் சுற்றியிருக்கக்கூடிய அனைத்துப் பகுதிகளிலும் இருக்கும் கேமராக்களின் வீடியோ பதிவுகள் நாளைக்குத்தான் நம்மை வந்தடையும். டி.ஒ.டி (DOT) அதை நம்மோடு பகிர்ந்துகொள்ளும்’’ என  டிபார்ட்மென்ட் ஆஃப் ட்ரான்ஸ்போர்ட்டேஷன் துறை தெரிவித்த தகவலை ஏட்ரியனிடம் சொன்னார். 

‘‘பதிவுகளைத் தர அவர்களுக்கு ஏன் இவ்வளவு நேரம் தேவை?’’

‘`அவர்கள் இப்போதே நமக்குக் காட்டத் தயார். ஆனால், அதைப் பார்க்க குயின்ஸின் லாங்க் ஐலேண்டில் அமைந்திருக்கும் ட்ராஃபிக் மேனேஜ்மென்ட் சென்டருக்கு நாம் போக வேண்டும் என்கிறார்கள் அவர்கள்’’  என்றார்.

ஏட்ரியன் சில விநாடிகள் மேலே  பார்த்துவிட்டு, டோனி பக்கம் திரும்பி, ‘‘நாம் கிளம்பலாம். நேரத்தை வீணாக்க வேண்டாம்’’ என்றார். ‘`நான்கு மணி நேரப் பயணம், ஏட்ரியன்’’ என்று இழுத்தான் டோனி.

‘`அதிகபட்சம் நான்கு மணி நேரத்தில் நாம் அங்கு இருப்போம். எனவே, அலுவலகத்தைத் திறந்து வைக்கும்படி அவர்களிடம் சொல்லுங்கள்’’ என்றார். அவர் காருக்குள் ஏற அவரை டோனி தொடர்ந்தார்.

நியூயார்க்

ஜோஷ் அவருக்குத் தெரிந்த, தலைமறைவு (Underground) இயக்கத்தில் ஈடுபடும் ஒவ்வொரு வரிடமும் ஏ.டி.எம்- கொள்ளையில் ஈடுபட்ட அவருடைய அறை நண்பன் எங்கிருக்கிறான் என்பது பற்றி யாருக்காவதுத் தெரியுமா எனக் கேட்டார். ஆனால் அவர்கள் யாருக்கும் அவனைப் பற்றிய செய்தி எதுவும் தெரியவில்லை.  ஸ்டான் அவருடைய ஆள்தான். யாரும் அவனை இதற்குமுன்பு சந்தித்திருக்கவில்லை.
அடுத்த தொலைபேசி அழைப்பு வருவதற்கான நேரம் வந்துவிட்டது என அவர் நினைக்கும்போதே மணி ஒலித்தது.

“அந்த ரெளடியைக் கண்டுபிடிச் சாச்சா?”

“இல்லை. நான் முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். நியூயார்க் நகரம் முழுக்க அவனை சல்லடைப் போட்டுத் தேடிக்கொண்டிருக் கிறோம்.’’

‘`நீங்கள் ஒரு முட்டாள். நீங்கள் அவனைக் கண்டுபிடிப்பீர்கள் என்பதற்காக உண்மையிலேயே நியூயார்க்கில் அவன் காத்துக் கொண்டிருப்பான் என நீங்கள் நினைத்துக்கொண்டிருக்கிறீர்களா? எங்களுக்கு எங்களுடைய பணம் தேவை. எவ்வளவு நேரம் ஆகுமென்று நீங்கள் நினைக்கிறீர்கள்?’’

பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 24

‘`எனக்குக் கொஞ்ச அவகாசம் தேவை. அவனைப் பற்றித் தகவல் ஏதேனும் கிடைத்தவுடன் உங்களை உடனடியாகத் தொடர்பு கொள் கிறேன். என்னை நம்புங்கள் ப்ளீஸ்” என்றார்.

“ஏற்கெனவே ஒருமுறை அந்தத் தவறைச் செய்துவிட்டோம். மீண்டும் அந்தத் தவறைச் செய்ய விருப்ப மில்லை” என்றது எதிர்முனை.

‘`எனக்கு வேறு சாய்ஸ் இல்லை’’ - ஜோஷின் குரலில் உதவியற்ற நிலை தொணித்தது.

‘`உங்களுக்கு ஒரு சாய்ஸ் இருக்கிறது. பணத்தைக் கண்டு பிடியுங்கள். அதற்கு உங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் காலம் 24 மணி நேரம். பணத்தைப் பெற முயற்சிசெய்யுங்கள். உங்களைத் தேடி எங்களை அங்கே வரும்படி வைத்துவிட வேண்டாம்.’’

‘`எனக்குப் புரியவில்லை...’’

‘`24 மணி நேரம்” என மீண்டும் சொல்லிய அந்தக் குரல் தொலைபேசி இணைப்பைத் துண்டித்துக் கொண்டது.

ஜோஷ் தனது நெற்றியைத் தடவினார். குளிராக இருந்தாலும் அவருக்கு வியர்த்தது. அவரிடம் அதிக நேரமில்லை. 

(பித்தலாட்டம் தொடரும்)

- ரவி சுப்ரமணியன் (GOD IS A GAMER - Published by Penguin Random House India Pvt Ltd)

- ஓவியங்கள்: ராஜன்

தமிழில்: சித்தார்த்தன் சுந்தரம்