Published:Updated:

”கைதுசெய்து 100 நாளுக்கு மேல் ஆச்சு! இன்னும் நடவடிக்கை இல்லை!” கொந்தளிக்கும் மீனவர்கள்!

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தூத்துக்குடி மீனவர்கள் இலங்கைச் சிறையில் அடைக்கப்பட்டு 100-நாட்களைத் தாண்டியும் இதுவரை மத்திய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் மீனவர்கள் கொந்தளிப்பில் உள்ளனர்.

”கைதுசெய்து 100 நாளுக்கு மேல் ஆச்சு! இன்னும் நடவடிக்கை இல்லை!”  கொந்தளிக்கும் மீனவர்கள்!
”கைதுசெய்து 100 நாளுக்கு மேல் ஆச்சு! இன்னும் நடவடிக்கை இல்லை!” கொந்தளிக்கும் மீனவர்கள்!

ல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, தூத்துக்குடி மீனவர்கள் இலங்கைச் சிறையில் அடைக்கப்பட்டு 100-நாட்களைத் தாண்டியும் இதுவரை மத்திய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் மீனவர்கள் கொந்தளிப்பில் உள்ளனர். 

தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்பகுதியைச் சேர்ந்த வினோத் குமார் என்பவருக்குச் சொந்தமான பைபர் படகில் அந்தோணி, ரூபின்சன், வில்பிரட், விஜய், ரமேஷ், ஆரோக்கியம், கோரத்த முனியன் மற்றும் இசக்கிமுத்து ஆகிய 8 மீனவர்கள் கடந்த ஆகஸ்ட் 18-ம் தேதி ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, இலங்கை கடற்படையினர் சுற்றி வளைத்து துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டு புத்தளம் சிறையில் அடைக்கபட்டனர். இலங்கை அரசின் புதிய கடல் சட்டத்தின்படி 8 மீனவர்களுக்கும் 3 மாத சிறைதண்டனையுடன் தலா ரூ.60 லட்சம் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தது கல்பிட்டி நீதிமன்றம்.

” பாம்பனில் இருந்து 20 கடல் மைல் தொலைவுல அதுவும் இந்திய எல்லைக்குள்ளதான் நம்ம மீனவர்கள் மீன் பிடிச்சுட்டு இருந்தாங்க. மின்னல் வேகத்துல வந்த இலங்கை நேவி, எல்லை தாண்டி மீன்பிடிச்சதாகச் சொல்லி சுத்தி வளைச்சு அவங்க நாட்டுக்குக் கொண்டு போயிட்டாங்க. இழுவை மடி விசைப்படகையும், பண் வலையையும் அவங்க நாட்டுல தடை செய்திருக்காங்க. ஆனா, நம்ம மீனவர்கள் போனது சாதாரண பைபர் படகுதான், வலை வச்சுகூட மீன் பிடிக்கவில்லை. தூண்டில் கட்டிதான் மீன் பிடிச்சாங்க. இதனை இலங்கை நேவியே ஒத்துக்கிட்டிருக்கு. ஆனாலும், வேண்டுமென்ற சட்ட விரோதமாக கைது செய்து சிறையில அடைச்சது மட்டுமில்லாம இப்போ 60 லட்ச ரூபாய் அபராதம் வேற விதிச்சிருக்காங்க. இது எந்த விதத்துல நியாயம்? மகாராஷ்டிரா, குஜராத் போன்ற மாநிலங்களில் உள்ள மீனவர்கள் எல்லை தாண்டி பாகிஸ்தான் கடலுக்குள் சென்றால் சுட்டுக்கொல்லாமல் பத்திரமாகத் திருப்பி அனுப்புகிறது பாகிஸ்தான்.  அரபு நாடுகளில் கூட எல்லை தாண்டுதல் என்பது சாதாரண விஷயமாகத்தான் பார்க்கப்படுகிறது.

காற்றின் போக்கு, இரவு நேரம், கடலின் நீரோட்டம், இயற்கைச்சீற்றம்  ஆகியவற்றால்தான் படகு எல்லையைத்  தாண்டும் நிலைக்குப் போகிறது. இந்தியா – இலங்கை கடல் எல்லைகளில் இலங்கை கடற்படை கப்பல் 24 மணி நேரமும் சுற்றி வருகிறது.  ஆனா, இந்திய கடற்படை கப்பல் கண்காணிப்பு பணியில் சரியாக ஈடுபடுவதே இல்லை.  இலங்கை மீனவர்கள் இந்திய  எல்லைக்குள் மீன்பிடித்ததாகப் பிடிபட்டால் அந்த மீனவர்களைத் துன்புறுத்தப்படுவது இல்லை. நல்ல உணவு கொடுத்து மரியாதையுடன் நடத்தி திரும்ப அனுப்பப்படுகிறார்கள். ஆனால், தமிழக மீனவர்கள் அவர்களிடம் பிடிபட்டால் அடிப்பது, பச்சை மீனை உப்பைத் தொட்டு சாப்பிடச் சொல்வது, முட்டிப் போடச்சொல்லி ஐஸ் கட்டியைத் தலையில் தூக்கி வைக்கச் சொல்வது என அவர்களின் சித்ரவதைகளைச் சொல்ல முடியாது. இந்தியா- இலங்கை எல்லைகளில் அந்தந்த நாட்டு கடற்படையினர் கண்காணிப்பதுடன், அந்ததந்த நாட்டு மீனவர்கள் எல்லை தாண்டுவது போலத் தெரிந்தால் மீனவர்களை எச்சரித்து எல்லை தாண்டவிடாமல் கண்காணித்தால் மட்டுமே இந்த பிரச்னைக்கு ஒரு தீர்வு கிடைக்கும். மீனவர்களையும், படகுகளையும் மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறைபிடிக்கப்பட்ட 8 மீனவர்களுமே கூலிக்காக மீன்பிடித் தொழிலுக்குச் சென்றவர்கள். இந்த நிலைமையில் 60 லட்சம்  அபராதத்தை ஆயுசு முழுக்க கடல் தொழிலுக்குப் போனாலும் அவர்களால் கட்ட முடியாது.” என்கிறார்கள் தூத்துக்குடியைச்  சேர்ந்த மீனவர்கள்.

இந்நிலையில் 8 மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு சி.ஐ.டி.யூ., சார்பில் தூத்துக்குடியில் அண்மையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில்  மீனவர்களின் குடும்பத்தினர் குழந்தைகளுடன் கலந்து கொண்டனர். இக் கூட்டமைப்பின் மாநில பொதுச் செயலாளர் செந்தில்வேலிடம் பேசினோம், “இலங்கை வெளிநாட்டு மீன்பிடி வல்லங்களை ஒழுங்குபடுத்தும் புதிய சட்டம் கடந்த பிப்ரவரியில் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெறப்பட்டது. 12 கடல் மைலுக்கு உட்படப் பிரதேச எல்லைக்குள் நுழைந்தால்தான் அதிகபட்சமாகத் தண்டனையான 3 வருடச் சிறை தண்டனையுடன் ரூ.10 லட்சம் அபராதமும் விதிக்கப்படும் என்பது எல்லா நாட்டிற்கும் பொதுவானது.  ஆனால், இலங்கை அரசு மட்டும்தான் 200 கடல் மைல் வரை உள்ள பொருளாதார மண்டலத்திற்குள் நுழைந்தாலே குறைந்தபட்சமாக ரூ.50 லட்சம் முதல் அதிகபட்சமாக 17.5 கோடி வரை அபராதம் விதிக்கப்படும் என  தமிழக மீனவர்களைக் குறி வைத்தே இச்சட்டத்தை இயற்றியுள்ளது.

தமிழக மீனவர்கள் இலங்கைக்குள் அத்துமீறி நுழைகிறார்கள் எனச் சொல்கிறது இலங்கை அரசு. ஆனால், இலங்கையில் உள்ள மீன்பிடிக் கப்பல்கள்தான் ஆசியக் கண்டத்திலேயே பிறநாட்டு எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடிக்கிறது எனப் பல நாடுகள் குற்றம்சாட்டி எச்சரித்தும் உள்ளது. தற்போது இலங்கைச் சிறையிலுள்ள மீனவர்கள் இந்திய எல்லைக்குள் நாட்டுப்படகில் சாதாரண பாசிவலை வைத்துத்தான் மீன்பிடித்துள்ளனர். அத்துமீறி இந்திய எல்லைக்குள் நுழைந்து கைது செய்துள்ளனர். இந்தியா- இலங்கை கடல் எல்லையில் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் உள்ளது இலங்கை கடற்படை. ஆனால், இந்திய கடற்படை இப்பணியைச் சரிவர செய்வதில்லை.

கடந்த 2 வருடத்திற்கு முன்பு தங்கச்சிமடத்தைச் சேர்ந்த 6 மீனவர்கள் போதைப்பொருள் கடத்தியதாக இலங்கை அரசு பொய்வழக்கு போட்டு  தூக்குத்தண்டனைக்கு உத்தரவிட்ட நிலையில் மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு மீனவர்களை மீட்க எடுத்த நடவடிக்கையில் ஒரு சதவீதம் கூட இந்த மீனவர்கள் விவகாரத்தில் எடுக்காதது ஏன்?  மீனவர்களின் பாதுகாப்பினை பலப்படுத்தும் என ‘கடல் தாமரை’ மாநாடு அளித்து உறுதியளித்த பா.ஜ.க., மீனவர்கள் விவகாரத்தில் முந்தைய காங்கிரஸை விட மோசமாகவே உள்ளது. தமிழக அரசு இந்த வழக்கிற்கான முழுச் செலவை ஏற்றுக் கொண்டு மேல்முறையீடு செய்ய வேண்டும். மத்திய அரசு ராஜ்ய ரீதியாகத் தலையிட்டு மீனவர்களை மீட்க வேண்டும். அத்துடன், இலங்கை அரசு இயற்றப்பட்ட திட்டத்தை  மறுபரிசீலனை செய்ய வலியுறுத்த வேண்டும். இல்லாவிட்டால், நமது நாட்டு சட்டத்தை கடுமையாக்க வேண்டும். இந்த நடவடிக்கையில் இனியும் சுணக்கம் காட்டினால் தலைமைச் செயலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபடுவோம்.” என்றார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியிடம் பேசினோம்,”மீனவர்களை மீட்க

வலியுறுத்தி குடும்பத்தினர் அளித்த மனு அரசிற்கு அனுப்பப்பட்டு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில் மீனவர் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக உள்ள 5 மீனவர்களின் குடும்பத்தினருக்கு தினசரி உதவித் தொகையாக ரூ.250 வீதம் 70 நாட்கள் கணக்கீட்டில் தலா ரூ.17,500 அளிக்கப்பட்டுள்ளது. உறுப்பினர் அல்லாத மீதமுள்ள 3 பேரின் குடும்பத்தினருக்கு உதவித் தொகை கிடைக்கவும் அரசிற்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மீனவர்கள் விரைவில் மீட்கப்படுவார்கள்.” என்றார். 

மீன்வளத்துறை இயக்குநர் டாக்டர் சமீரனிடம் பேசினோம், “இதுவரை இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்ட 38 தமிழக மீனவர்களில் 22 மீனவர்கள் மீட்கப்பட்டுவிட்டார்கள். மீதமுள்ள 16 மீனவர்களில்  8 பேர் தூத்துக்குடியைச் சேர்ந்தவர்கள் வெளியுறவுத்துறையின் இந்தியத் தூதரகம் மூலமாக அவர்களையும் மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.” என்றார்.

பரிதவிக்கும்  மீனவர்கள் படகுகளுடன் மீட்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.!