Published:Updated:

“மகளுக்காகக் காத்திருக்கிறேன்!”

“மகளுக்காகக் காத்திருக்கிறேன்!”
பிரீமியம் ஸ்டோரி
“மகளுக்காகக் காத்திருக்கிறேன்!”

“மகளுக்காகக் காத்திருக்கிறேன்!”

“மகளுக்காகக் காத்திருக்கிறேன்!”

“மகளுக்காகக் காத்திருக்கிறேன்!”

Published:Updated:
“மகளுக்காகக் காத்திருக்கிறேன்!”
பிரீமியம் ஸ்டோரி
“மகளுக்காகக் காத்திருக்கிறேன்!”

விடுதலை வெளிச்சம், சிறைக்கதவுகளின் சாவித்துவாரத்தின்வழி தெரியும் நேரம். நளினியின் அம்மாவைச் சந்தித்தேன்.

“மகளுக்காகக் காத்திருக்கிறேன்!”

ஒற்றைப் படுக்கையறைகொண்ட வீட்டில் மகன் குடும்பத்துடன் வசித்துவருகிறார் நளினியின் அம்மா பத்மா. 80 வயதில் இருப்பதால், கால்மூட்டுகள் வலுவிழந்து போய், நடந்துவந்து கதவைத் திறப்பதற்கே கஷ்டப்படுகிறார். மகள் விடுதலையைப் பற்றிப் பேச்சு எடுத்ததும், முகத்தில் இருக்கிற சுருக்கங்கள் எல்லாம் சிரிக்கின்றன பத்மா அம்மாவுக்கு. ‘`ஆமாம் கண்ணு, என் குணவதி வீட்டுக்கு வரப்போறா. நளினிக்கு மத்தவங்களுக்கு உதவி செய்றது ரொம்பப் பிடிக்கும். அதனாலதான் அவளை `குணவதி’னு சொல்கிறேன். ஆனா, அவளோட அந்தக் குணமே அவளுக்கு எதிரியாகிடுச்சு’’ என்றவர், தன் கதையையும் தன் மகளின் கதையையும் சொல்லத் தொடங்கினார்.

‘`எங்க அப்பா ரத்ன சபாபதி, காங்கிரஸ் தியாகி. தமிழ் ஆர்வலர். எனக்கும் அப்பாவைப்போலவே பொதுமக்களுக்கு ஏதாவது சேவை செய்யணும்ங்கிற எண்ணம் இருந்துச்சு. அதனாலதான் நர்ஸிங் படிச்சேன். பிரசவம் பார்க்குற தியேட்டர் நர்ஸா 35 வருஷம் வேலை பார்த்தேன். எத்தனையோ அம்மாக்களோட, குழந்தைகளோட உசுரைக் காப்பாத்தின எனக்கு, ஒரு படுகொலைக்கு உடந்தையா இருந்தவங்கிற பட்டம் கிடைச்சது கொடுமை.

சின்ன வயசுல நான் பார்க்க நிறமா, அழகாயிருப்பேன். அதுவே எனக்கு வினையாகிப்போயிருச்சு. என் கணவர் ஒரு காவல்துறை அதிகாரி. என்னை அவர் திருமணம் செய்றதுக்கு முன்னாடியே அவருக்குத் திருமணமாகி, குழந்தைகள் எல்லாம் இருந்தாங்க. ஆனா, முதல் மனைவிக்கு மனநலம் சரியில்லாமப்போயிட்டதால, என்னை உருட்டி மிரட்டி கட்டாயத் திருமணம் செஞ்சுகிட்டார். நளினி எனக்குத் தலைமகள். அவளுக்குப் பிறகு ஒரு மகன், ஒரு மகள் பிறந்தாங்க. கணவர்கிட்ட இருந்து எனக்குப் பொருளாதார உதவிகள் கிடைக்காததால, ஒவ்வொரு முறையும் குழந்தைங்க பிறந்த ஒரு மாசத்திலேயே வேலைக்குப் போக வேண்டிய கட்டாயம்.  அதனால என் மூணு புள்ளைகளுக்குமே பிறந்த ஒரு மாசத்துக்குள்ள தாய்ப்பாலை  மறக்கடிச்சிட்டு, வேலையில சேர்ந்துடுவேன். என் நிலைமை எந்தத் தாய்க்குமே வரக்கூடாதுனு அழுவேன். அறிஞ்சவங்க, தெரிஞ்சவங்க, என் கையால் புள்ளை பெத்துக்கிட்டவங்கனு எல்லாருமா சேர்ந்து என் குழந்தைகளை வளர்த்துக்கொடுத்தாங்க. அந்த நல்ல உள்ளங்களாலதான் என் புள்ளைகளை நல்லா படிக்கவைக்க முடிஞ்சது. நளினி எத்திராஜ் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் முடிச்சா’’ என்றவரின் கண்களில் மின்னிய துளிகளில், மகளின் நினைவுகள்.

‘`ஆண் துணையில்லாமதான் என் வீடு இருந்தது. கணவர்மீது இருக்குற கோபத்தையெல்லாம், என்னையும் அறியாம மூத்தவ நளினி மேலதான் காட்டுவேன். பாவம், வளர்ந்த குழந்தை எத்தனை காலம் என் கோபத்தைத் தாங்கிக்கும்? ஒரு கட்டத்துல என்னை வெறுத்து, வீட்டை விட்டு வெளியேறிட்டா. அவளோட ஆங்கிலப் புலமைக்கு நல்ல கம்பெனியில வேலை கிடைச்சு, நல்லா இருந்தா. என் கணவரால எனக்குக் கிடைக்காமப்போன மரியாதையான வாழ்க்கை, என் மகள்களுக்குக் கிடைக்கணும்னு ஆசைப்பட்டேன். ஆனால், நளினி வாழ்க்கை...’’ - பரிதவிக்கிறது அந்தத் தாயின் மனம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“மகளுக்காகக் காத்திருக்கிறேன்!”

‘`எங்க வாழ்க்கையில விதி, என் மகன் பாக்கியநாதன் வழியாக விளையாடிருச்சு. இலங்கையிலிருந்து ஆங்கிலம் கத்துக்கிறதுக்காக சென்னைக்கு வந்த ஸ்ரீகரனை (முருகன்), ‘அம்மா, இவன் என் நண்பன். ஆங்கிலம் கத்துக்கிறதுக்காக இங்க வந்திருக்கான். மூணு மாசத்துல திரும்பிப் போயிடுவான். அதுவரை நம்ம வீட்டுல தங்கிக்கட்டுமா?’னு என் முகவாய்க்கட்டையைப் பிடிச்சுக்கிட்டுக் கெஞ்சினான். புள்ளை கெஞ்சுறானேனு நானும் சம்மதிச்சேன். ஸ்ரீகரன் வந்தான். என் மகன் மூலமாவே என் மக நளினியின் மனசுல இடம்பிடிச்சு, அவளைத் திருமணம் முடிச்சு, நளினி கருவுற்று இருக்கும்போதுதான் எனக்கு விஷயமே தெரியும். எங்க வீட்டுல இடி விழுந்த நேரம் நாட்டிலும் இடி விழுந்தது. ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். என்னை, என் மகள்களை, மகனை, ஸ்ரீகரனை (முருகன்)னு மொத்தக் குடும்பத்தையும் கைது செஞ்சாங்க. நாங்க எட்டு வருஷங்கள் சிறையிலிருந்துட்டு விடுதலையானோம். ஆனா, என் மகளுக்குச் சிறைக் கதவுகள் திறக்கவேயில்ல. வெளியே வந்த எங்களுக்கும் வேலை கிடைக்கலை; வீடு கிடைக்கலை. ஒரு தாய்க்குருவி பார்த்துப் பார்த்துக் கட்டுன குருவிக்கூடு மொத்தமா கலைஞ்சு போயிடுச்சும்மா’’ என்று அழ ஆரம்பித்தவரை, தேற்ற சில நிமிடங்கள் தேவைப்பட்டன.

‘`எத்தனையோ பேருக்குப் பிரசவம் பார்த்தவ நான். என் மக மாசமா இருந்தப்போ, அவளுக்கு ஒரு சுடுதண்ணிகூட வெச்சுக்கொடுக்க முடியாத பாவியாகிட்டேன். நளினிக்கும், அவ மகளைப் பக்கத்துல இருந்து பார்க்க, வளர்க்கக் கொடுத்துவைக்கலை. நான், என் மக, அறிவின் அம்மா அற்புதம் எல்லோரும் பாவப்பட்ட அம்மாக்கள். எங்க கண்ணீருக்கு இப்போதான் ஒரு விடிவுகாலம் பொறந்திருக்கு. சிறையில அனுமதி பெற்று,  நளினி என்கிட்ட  பேசினப்போ, ‘இந்த முறை நிச்சயமா விடுதலை கொடுத்துடுவாங்கம்மா’னு நம்பிக்கையா சொன்னா. என் கருப்பையில விளக்கெரியப் போகுது. என் மக விடுதலைக்காகப் போராடின தலைவர்களுக்கும், எழுதின பத்திரிகைகளுக்கும் இந்த நேரத்துல நன்றி சொல்லிக்கிறேன்’’ என்று தன் நடுங்கும் கைகளைக் குவிக்கிறார் பத்மா அம்மாள்!

ஆ.சாந்தி கணேஷ் - படம்: பா.காளிமுத்து 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism