Published:Updated:

சாட்சியாக மாறிய குற்றவாளி... குற்றவாளியாக மாறிய சாட்சி...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
சாட்சியாக மாறிய குற்றவாளி... குற்றவாளியாக மாறிய சாட்சி...
சாட்சியாக மாறிய குற்றவாளி... குற்றவாளியாக மாறிய சாட்சி...

வழக்கு எண்: 18/9 ஸ்டைலில் ஒரு நிஜம்!

பிரீமியம் ஸ்டோரி

‘குழந்தைகளுக்கு மிக மோசமான அச்சத்தை, அவர்களை உச்சபட்சமாக அலறவைக்கும் சம்பவங்கள் தருவதில்லை. மாறாக, அவர்களின் குரலைத் திருடி மௌனமாக்கிவிடும் சம்பவங்களே மிகுந்த அச்சம் தருகின்றன’ என்ற அபி நார்மனின் கூற்றுடன் ஆரம்பமாகிறது அந்தத் தீர்ப்பு. ‘ஒரு குழந்தைக்கு பாதுகாப்பின்மையை ஏற்படுத்தி, பாலியல் வன்கொடுமை நிகழும் சூழலை இந்த சமூகமோ, பெற்றோரோ, ஆசிரியர்களோ, உறவினர்களோ அல்லது நண்பர்களோ உருவாக்கிவிடுகின்றனர். ஆனால், இந்த வழக்கில் குழந்தையின் அலறலை மௌனமாக்கியவை நான்கு விஷயங்கள். தவறான ஆவணங்களை உருவாக்கினர்; பொய்க் குற்றவாளியை போலீஸே தேர்ந்தெடுத்தது; குற்றவாளியை சாட்சியாகவும், சாட்சியைக் குற்றவாளியாகவும் மாற்றினர்; இந்த எல்லா தவறுகளுக்கும் அதிகார மையங்களை சம்மதிக்கவைத்தனர்’ என்று காட்டமாகக் குற்றம்சாட்டுகிறது அந்தத் தீர்ப்பு.

ஒரு குழந்தைக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கில், சென்னை உயர் நீதிமன்றத்தின் இரண்டு பெண் நீதிபதிகளான எஸ்.விமலா, எஸ்.ராமதிலகம் ஆகியோர் வழங்கியுள்ள தீர்ப்பு, மிக முக்கியமான குற்ற இலக்கியம் போல அமைந்திருக்கிறது. குழந்தைகளை வளர்த்து ஆளாக்கும் ஒவ்வொரு பெற்றோரும், குழந்தைகள் உரிமைகளுக்காக செயல்பட்டுவரும் அமைப்பினரும், குழந்தைகள் தொடர்பான வழக்குகளைக் கையாளும் போலீஸாரும், எல்லாவற்றுக்கும் மேலாக வழக்கறிஞர்களும் நீதிபதிகளும் அவசியம் படிக்கவேண்டிய தீர்ப்பு இது.  

சாட்சியாக மாறிய குற்றவாளி... குற்றவாளியாக மாறிய சாட்சி...

சென்னை. 2008-ம் ஆண்டு பிப்ரவரி 6-ம் தேதி நள்ளிரவு... பெற்றோருடன் தூங்கிக் கொண்டிருந்தாள் அந்தச் சிறுமி. அவளைத் தூக்கிக்கொண்டுபோய் அருகிலுள்ள கட்டடத்தில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்து தலையில் அடித்துக் காயப்படுத்துகிறார் ஒரு நபர். இந்தக் கொடூர சம்பவம் நிகழ்ந்த அன்று மாலை, கட்டட வேலை செய்து கொண்டிருந்த அய்யப்பனை போலீஸார் கைதுசெய்து, இந்தக் குற்றத்தை அவர்மீது சுமத்துகிறார்கள். அவருடைய லுங்கியில் ரத்தம் இருந்ததாகவும், அந்த ரத்தம் சிறுமியின் உடல் காயங்களில் இருந்த ரத்தத்துடன் ஒத்துப்போவதாகவும் சொல்கிறார்கள்.

மூன்று மாதங்கள் சுயநினைவில்லாமல் இருந்த சிறுமி, பின்னர் உடல்நலமும் மனவலிமையும் பெற்று, ‘யார் தவறு செய்தார்’ என அடையாளம் காட்டத் தயாராகிறார். போலீஸாரும் அதைப் பதிவுசெய்ய கேமராவுடன் தயாராகிறார்கள். சிறுமி பேசுகிறாள். அவள் அடையாளம் சொன்னது, போலீஸ் கைது செய்திருந்த அய்யப்பனை அல்ல. அவள் குடியிருந்த வீட்டின் உரிமையாளர் காட்டுராஜாவை. அவர், குமரன் நகர் பகுதியிலுள்ள கட்டட மேஸ்திரி.

சாட்சியாக மாறிய குற்றவாளி... குற்றவாளியாக மாறிய சாட்சி...

காட்டுராஜாவின் வீட்டில் குடியிருந்த சிறுமியின் குடும்பத்துக்கும் காட்டுராஜாவுக்கும் சமீபகாலமாக சண்டை நடந்திருக்கிறது. அதனால், அந்தக் குடும்பத்தைப் பழிவாங்க இந்தக் கொடூரத்தை காட்டுராஜா செய்திருக்கலாம் என சிறுமியின் பெற்றோர் சொல்கிறார்கள். தன்னை பாலியல் வன்கொடுமை செய்தது காட்டுராஜாதான் என்று சிறுமி உறுதியாக அடையாளம் சொல்லிப் பேசிய காணொளிக் காட்சியை நீதிபதிகள் பார்த்திருக்கிறார்கள். வழக்கை மறுவிசாரணை செய்யவும் உத்தரவிட்டார்கள். சிறுமியின் பெற்றோரும், ‘‘இந்தக் கொடூரத்தைச் செய்தது காட்டுராஜாதான்’’ என திரும்பத் திரும்பக் கதறினார்கள். ஆனால் போலீஸார், நீண்ட தூக்கத்திலிருந்து விழிக்கவே இல்லை. காட்டுராஜாவை சாட்சியாகச் சேர்த்து, அய்யப்பனைக் குற்றவாளியாகக் காட்டி வழக்கை முடித்துவிட்டார்கள். போலீஸ் கொடுத்த ஆதாரங்களை வைத்து, ‘அய்யப்பன்தான் குற்றம் செய்திருக்க வாய்ப்பு உண்டு’ என மகளிர் நீதிமன்றமும் அவருக்கு ஆயுள்தண்டனை வழங்கியது.

அய்யப்பனின் குடும்பமும் நண்பர்களும் சேர்ந்து இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தார்கள். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் விமலாவும் ராமதிலகமும், ‘வழக்கில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 18 ஆவணங்களும், 21 பேர் அளித்த சாட்சியங்களும், வழக்கு தொடர்பான இதர ஆதாரங்களும் ‘இந்தக் குற்றத்தை வீட்டு உரிமையாளர் காட்டுராஜாதான் செய்திருக்கிறார்’ என்பதை உறுதி செய்கிறது. பாதிக்கப்பட்ட சிறுமி இதை நீதிமன்றத்தில் கூறியும், நீதிமன்றம் ஏன் பரிசீலனை செய்யாமல் விட்டது? இது ‘வழக்கு எண் 18/9’ திரைப்படத்தை நினைவுபடுத்துகிறது’ என்று தீர்ப்பில் ஆதங்கம் தெரிவித்துள்ளார்கள். கூடவே ‘சிறுமி சொன்ன வாக்குமூலத்தை நிரூபிக்க சாட்சிகள் இல்லை’ என மகளிர் நீதிமன்றம் தெரிவித்த கருத்தையும் இரண்டு பெண் நீதிபதிகளும் கண்டித்துள்ளனர். ‘‘இந்த உலகமே தூங்கிக்கொண்டிருக்கும் ஒரு நள்ளிரவில், தன் பெற்றோருக்கே தெரியாமல் ஒரு சிறுமி தனிமையான பகுதிக்குத் தூக்கிச்செல்லப்பட்டு இப்படி ஒரு கொடுமைக்கு ஆளான நிலையில், என்னவிதமான சாட்சியை நீதிமன்றம் எதிர்பார்க்கிறது?’’ என்று கேட்டிருக்கிறார்கள் நீதிபதிகள்.

சாட்சியாக மாறிய குற்றவாளி... குற்றவாளியாக மாறிய சாட்சி...

‘‘குழந்தைகள் உண்மையைச் சொல்லும்போது, அதை நீதிமன்றங்கள் கேட்கவேண்டும். தாங்கள் உண்மையைச் சொல்லும்போது, அதை நீதிபதிகள் ஏன் நம்புவதில்லை என்பதைக் குழந்தைகளால் புரிந்துகொள்ள முடிவதில்லை. நீதிபதிகள்மீது நிறைய குழந்தைகள் அதிக எதிர்பார்ப்புகளை வைத்துள்ளனர். ஒரு குற்றவாளி செய்கிற எல்லா தவறுகளையும் சரிசெய்கிறவராகவும், தண்டிப்பவராகவும் நீதிபதியை அவர்கள் நம்புகிறார்கள். ‘நீதிபதிகள் தங்கள் பார்வையில் எதையும் பார்க்கவேண்டும்’ என குழந்தைகள் எதிர்பார்ப்பு வைத்திருக்கிறார்கள். ஒரு குழந்தையை சாட்சியாக விசாரிக்கும் நீதிபதிகள் இதைப் புரிந்துகொள்ள வேண்டும்’’ எனவும் நீதிபதிகள் விமலாவும் ராமதிலகமும் பாடம் எடுத்திருக்கிறார்கள்.

நல்ல திரைப்படங்கள் ஏதோ ஒரு வகையில் நிஜ வாழ்க்கையைப் பிரதிபலிக்கின்றன. சமீபத்திய உதாரணம், இந்த வழக்கு. விடுதலையாகி வெளியே வந்த அய்யப்பனிடம் பேசினோம். “சொல்றதுக்கு என்ன சார் இருக்கு? பத்து வருஷம் என் வாழ்க்கையே போச்சு. அரியலூர் சொந்த ஊருங்க. பொழைப்பைத் தேடி இங்க வந்தேன். என் ஃப்ரெண்ட் ஒருத்தன்தான் காட்டுராஜாகிட்ட வேலைக்குச் சேர்த்துவிட்டான். ஊருக்கு வந்து மூணுநாளு இருக்கும். வேலை செஞ்சிட்டு இருக்கேன். திடீர்னு போலீஸ்காரங்க வந்தாங்க. ‘உன்னை விசாரிக்கணும் ஸ்டேஷன் வரைக்கும் வா’ன்னு கூட்டிட்டுப் போனாங்க. என் துணியை எல்லாம் அவுத்துட்டு கையும், காலையும் கட்டிப்போட்டு நடுமுதுகுல பெரிய ‘பைப்’ சொருகி, காட்டுத்தனமா அடிச்சாங்க. ஏன் அடிக்கிறாங்கன்னுகூட சொல்லல. என்னோட ‘பேக் சைடு’ல பெரிய ஊசி வெச்சுக் குத்துனாங்க. ‘நீதானே அந்தப் பாப்பாவைக் கெடுத்த... உண்மையச் சொல்லு’ன்னு அடிச்சாங்க. எனக்கு ரொம்ப ரத்தம் வர

சாட்சியாக மாறிய குற்றவாளி... குற்றவாளியாக மாறிய சாட்சி...

ஆரம்பிக்கவும் ஆஸ்பிட்டலுக்குக் கூட்டிட்டுப்போய் மருந்து வாங்கிக் கொடுத்துத் திரும்பவும் அடிக்க ஆரம்பிச்சாங்க. ‘அடிக்காதீங்க சார். நீங்க என்ன சொல்றீங்கனுகூட எனக்குப் புரியல’ன்னு கத்தினேன். ஒருகட்டத்துக்கு மேல என்னாலே கத்தக்கூட முடியல. அடியை வாங்கிட்டு அழ மட்டும்தான் முடிஞ்சுது. எதுக்கு என்னைக் கூட்டிட்டு வந்தாங்கன்னு தெரிஞ்சதும், ‘எனக்கு அந்தப் பாப்பாவை சத்தியமா தெரியாது. விட்டுடுங்க சார்... நான் ஊருக்கே போயிடுறேன்’னு காலைத் தொட்டுக் கும்பிட்டு அழுதேன். ‘அந்தத் தெருவுலயே நீதாண்டா கல்யாணம் ஆகாம இருக்க. நீதான் பண்ணி இருப்ப’ன்னு சொன்னாங்க. ஜெயில்ல போட்டாங்க. அப்பறம் வாய்தா வாய்தான்னு என் வாழ்க்கையே போச்சு. இனி செத்தாலும் சென்னை பக்கம் வர மாட்டேன் சார்” என்றார்.

அய்யப்பனின் ஆயுள்தண்டனையை ரத்து செய்த நீதிபதிகள், இது ‘வழக்கு எண் 18/9’ திரைப்படத்தை நினைவுபடுத்துவதாக மேற்கோள் காட்டியுள்ளனர். இந்த வழக்கைப்பற்றி அந்தப் படத்தின் இயக்குநர் பாலாஜி சக்திவேல் என்ன சொல்கிறார்? ‘‘12 வருஷங்களுக்கு முன்னாடி ஒரு வக்கீலோட பேசிட்டு இருந்தபோது எங்கிட்ட ஒரு கேஸ் பத்திச் சொன்னாரு. ரொம்ப அதிர்ச்சியா இருந்தது. அதை மையப்படுத்தித்தான் ‘வழக்கு எண்’ படம் எடுத்தேன். திரும்பவும் அதேமாதிரி ஒரு அப்பாவியின் கதையைக் கேக்கும்போது மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்குங்க” என்றார்.

‘வழக்கு எண்’ பட முடிவில், துயரம் மிகுந்த குரலில் ‘வானத்தையே எட்டிப் பிடிப்பேன். பூமியையும் சுத்தி வருவேன்’ என்கிற பாடல் ஒலிக்கும். தன் கனவுகள் சிதைக்கப்பட்ட ஓர் இளைஞனின் இயலாமைக் குமுறல் அது. சிறைச்சாலை மதில்களைத் தாண்டிக் கேட்காத இந்தக் குரலில் இன்னும் எத்தனை பேர் பாடிக் கொண்டிருக்கிறார்களோ?

- தமிழ்ப்பிரபா
படங்கள்: தே.தீட்சித்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு