Published:Updated:

நடப்பது வீக் கவர்ன்மென்ட்! - ‘இந்து’ ராம் ஸ்டேட்மென்ட்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
நடப்பது வீக் கவர்ன்மென்ட்! - ‘இந்து’ ராம் ஸ்டேட்மென்ட்
நடப்பது வீக் கவர்ன்மென்ட்! - ‘இந்து’ ராம் ஸ்டேட்மென்ட்

நடப்பது வீக் கவர்ன்மென்ட்! - ‘இந்து’ ராம் ஸ்டேட்மென்ட்

பிரீமியம் ஸ்டோரி

‘நக்கீரன்’ கோபால் கைது செய்யப்பட்டதும் ஊடகங்களின் பிரதிநிதியாக நீதிமன்றத்தில் தனது கருத்துக்களை முன்வைத்திருக்கிறார் மூத்தப் பத்திரிகையாளரான ‘இந்து’ என்.ராம். நீதிபதியிடம் பத்திரிகை சுதந்திரம் தொடர்பான சட்டப் பிரிவுகளை எடுத்துவைத்து, அவர் சொல்லியிருக்கும் கருத்துகள் தேசிய அளவில் கவனம் ஈர்த்திருக்கின்றன. அவருடனான உரையாடலிலிருந்து...

‘‘கோபால் கைது பற்றி உங்கள் கருத்து?’’

‘‘கைது நடைமுறைகள் என்ன என்பதில்கூட இவர்களுக்குத் தெளிவில்லை. ‘ராஜ்பவனிலிருந்து உத்தரவு வந்துவிட்டது, உடனடியாகக் கைது செய்துவிடவேண்டும்’ என்று மட்டுமே யோசித்திருக்கிறார்கள். இந்திய தண்டனைச் சட்டத்தின் 124-வது சட்டப் பிரிவைப் பயன்படுத்தியதன் மூலம் இந்த வழக்கை எவ்வளவு அலட்சியமாக அணுகியிருக்கிறார்கள் என்பது தெரிகிறது. அந்தப் பதற்றத்திலேயே வழக்கிலும் கோட்டைவிட்டிருக்கிறார்கள். கவர்னரை அப்படி என்ன பணி செய்யவிடாமல் கோபால் தடுத்தார் என்பதுதான் தெரியவில்லை.”

நடப்பது வீக் கவர்ன்மென்ட்! - ‘இந்து’ ராம் ஸ்டேட்மென்ட்

“நீதிபதியிடம் நீங்கள் இந்த விவரங்களை எடுத்துச் சொன்னீர்களா?”

“சென்னை 13-வது மெட்ரோபாலிட்டன் நீதிமன்ற நீதிபதி கோபிநாதனைப் பாராட்ட வேண்டும். என்னைப் பார்த்து, ‘உங்கள் விளக்கங்களைச் சொல்லுங்கள்’ என்றார். ‘நான் வழக்கறிஞர் இல்லையே’ என்றேன். ‘பரவாயில்லை, எக்ஸ்பர்ட் வியூவாக எடுத்துக்கொள்கிறேன்’ என்றார். நான், ‘நக்கீரன் கோபால்மீது பதியப்பட்ட 124-வது சட்டப் பிரிவுக்கும் அவருக்கும் சம்பந்தம் இல்லை; ஒரு பத்திரிகை ஆசிரியர்மீது இந்தப் பிரிவைப் பிரயோகிக்க அனுமதித்தால், இந்திய ஜனநாயகத்தில் இது ஒரு மோசமான முன்னுதாரணமாக அமைந்துவிடும்;

கவர்னர் மாளிகை என்ற அமைப்பின் மாண்புகளின்மீது சர்ச்சைகளையும் தவறான தாக்கத்தையும் ஏற்படுத்திவிடும்’ என்றேன். ‘நக்கீரன்’ இதழை என்னிடம் காட்டி, ‘இந்தப் படம், கட்டுரையை நீங்கள் பிரசுரிப்பீர்களா?’ என்றார்். ‘மாட்டோம். ஜர்னலிஸத்தில் பலவகை உண்டு. அந்தந்த பத்திரிகைகளின் அடிப்படையை வைத்து அவர்கள் பிரசுரிக்கிறார்கள்’ என்றேன்.”

“உயர்பதவியில் இருப்பவர்கள் தங்களைப் பாதுகாத்துகொள்ள இதுபோன்ற சட்டங்களைப் பயன்படுத்துவது சரியா?”

‘‘ஜெயலலிதாகூட அவதூறு வழக்குகளைப் போடுவாரே தவிர, 124-வது சட்டப் பிரிவைப் பயன்படுத்தியதாகத் தெரியவில்லை. 124 போன்ற சட்டப் பிரிவுகளுக்கு வளைந்துகொடுப்பது யாருக்கும் நல்லதல்ல. நக்கீரன் கோபால் கைதுசெய்யப்பட்டதை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது. இப்போது அமைதியாக இருந்தால், பத்திரிகைத் துறைக்கு அது நல்லதல்ல. பத்திரிகையாளர் கூட்டமைப்புடன் முதல்வரையோ, கவர்னரையோ சந்தித்து கோபால் கைது விவகாரத்தில் கேள்வி எழுப்பியிருக்க வேண்டும். நான் நீதிபதியிடமே ‘124-வது சட்டப் பிரிவு போன்ற தீவிரமான சட்டத்தைப் பிரயோகிக்க அனுமதித்தால், இந்திய அளவில் கருத்துரிமைக்கு எதிரான குரல் வலுப்படும். அதிகாரத்தில் இருப்பவர்கள் இதை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள வாய்ப்புள்ளது’ என்றேன்.

“இந்த விஷயத்தில் கவர்னர் மாளிகையில் இருந்து ஏன் இத்தனை அவசரப் புகார்?”

“கவர்னருக்குத் தெரியாமல் அவர்கள் புகாரைக் கொடுத்திருக்க முடியாது. ஆனால், இந்த விவகாரத்தில் கவர்னர் மாளிகை அதிகாரிகள் கவர்னரிடம் சரியாக எடுத்துக் கூறினார்களா என்று தெரியவில்லை.”

“நீங்கள் சந்தித்த பிரச்னைகளையும் தற்போதைய நிலவரங்களையும் ஒப்பிட்டுப் பார்க்கிறீர்களா?”

“ ‘தி இந்து’ எவ்வளவோ பெரிய விஷயங்களில் தலையிட்டிருக்கிறது. ‘போபர்ஸ்’ விவகாரத்தில் தொடர் கட்டுரைகளை வெளியிட்டோம். நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது அது. எங்கள் அலுவலகத்துக்கு அச்சுறுத்தல், ‘என் மீது தாக்குதல் நடத்தப்படலாம்’ என்று எச்சரிக்கைகள் வந்தன. ஆனால், பெரிதாக ஒன்றும் நடந்துவிடவில்லை. அப்போதைய அரசும் எங்களைப் பழிவாங்கவில்லை. நம்புவீர்களா... ஓர் அவதூறு வழக்கு, கைது நடவடிக்கைகள்கூட இல்லை. ராஜீவ் காந்திமீது அத்தனைப் பெரிய குற்றச்சாட்டுகளை முன்வைத்தபோதும் என்னுடன் நல்ல பழக்கத்தில் இருந்தார் அவர். ஒரு நிகழ்ச்சியில் சந்தித்தபோதும் சிரித்த முகத்துடன் நலம் விசாரித்தார். வேறொரு விவகாரத்தில் ஐ.பி.எஸ் அதிகாரி விஜயகுமார் என்னைப் பின்தொடர்ந்து, என் செயல்பாடுகளைக் கவனித்திருக்கிறார். இதுவும் எனக்குத் தெரியும். ஆனால், எதுவும் அத்தனை பெரிய சர்ச்சையாக எனக்குத் தெரியவில்லை. ஆனால், இப்போதைய சூழல் ஜனநாயகத்துக்கு எதிரானது.”

“தமிழக முதல்வருக்குத் தெரியாமல் கைது நடவடிக்கையை எடுத்திருப்பார்களா என்ன?”

“எனக்குத் தெரியவில்லை. ஆனால், தமிழக முதல்வருக்குத் தெரியாமல் இந்த நடவடிக்கையை எடுத்திருக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன்.”

“ ‘நக்கீரன்’ கோபால் மீது பதியப்பட்ட எஃப்.ஐ.ஆர் அப்படியேதானே இருக்கிறது?”

“உண்மைதான். விவகாரம் இன்னும் முடியவில்லை. ‘இழுப்பார்களா... விட்டுவிடுவார்களா’ என்றும் தெரியவில்லை. ஆனால், இவ்வளவு பெரிய எதிர்ப்புகள் வந்தபிறகு இந்த விவகாரத்தை எளிதாகக் கையாள மாட்டார்கள். என்ன செய்கிறார்கள் என்று பார்ப்போம்!”

“ஹெச்.ராஜா, எஸ்.வி.சேகர் ஆகியோர் மீது எடுக்கப்படாத நடவடிக்கைகள் பற்றி?”

“ஒருதலைப்பட்சமாக நடப்பதுதான் வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறதே. அப்படி தவறாகப் பேசுபவர்கள்மீது வழக்குகள்கூட முறையாகப் பதியப்படுகிறதா என்பது தெரியவில்லை. மத்திய அமைச்சர் ஒருவர் பிரிவினையைத் தூண்டுவது போல பேசுகிறார். கோவையில் நடந்த ஒரு தனியார் தொலைக்காட்சி விவாதத்தில் பிரச்னை செய்தார்கள். பிரச்னை ஏற்படுவதற்குக் காரணமானவர்களை விட்டுவிட்டு, சேனல்மீது வழக்குப் பதிகிறார்கள். இங்கு நடப்பது ‘வீக் கவர்மென்ட்’. அப்படித்தான் செய்வார்கள். கைகோத்து ஒன்றிணைய வேண்டியது நாம்தான்!”

- சி.மீனாட்சிசுந்தரம்
படம்: சு.குமரேசன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு