தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
என்டர்டெயின்மென்ட்
Published:Updated:

என்ஆர்ஐ திருமணம் - சிக்கல்களும் சட்டத்தின் துணையும்!

என்ஆர்ஐ திருமணம் - சிக்கல்களும் சட்டத்தின் துணையும்!
பிரீமியம் ஸ்டோரி
News
என்ஆர்ஐ திருமணம் - சிக்கல்களும் சட்டத்தின் துணையும்!

சட்டம் பெண் கையில்!வழக்கறிஞர் வைதேகி பாலாஜி

ல பெற்றோர்களுக்கும் மணப்பெண்களுக்கும் வெளிநாட்டு மாப்பிள்ளை என்றால் கூடுதல் விருப்பமாகத்தான் இருக்கிறது. ஆனால், என்ஆர்ஐ திருமணங்களில் ஏதேனும் பிரச்னை என்றால், அதற்கான சட்ட உதவி பற்றிய விழிப்பு உணர்வு குறைவாகவே இருக்கிறது. என்ஆர்ஐ திருமணங்கள் மற்றும் விவாகரத்துச் சட்டங்கள் பற்றிய சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கிறார் வழக்கறிஞர் வைதேகி பாலாஜி.

என்ஆர்ஐ திருமணம்... இவையெல்லாம் அவசியம்!

அயல்நாடுகளில் வசிக்கும் இந்தியர் களில் என்ஆர்ஐ (Non Resident Indian) என்றும் பிஐஓ (Person of Indian Origin) என்றும் இரண்டு பிரிவினர் உள்ளனர். இவர்களைத் திருமணம் செய்துகொள்ளும் பெண்களின் திருமண வாழ்க்கை பிரச்னைக்கு உள்ளாகும்போது, இந்தியாவில் 1969-ல் இருந்து அமலில் இருக்கும் வெளிநாட்டுத் திருமணச் சட்டம் அவர்களுக்குக் கைகொடுக்கும்.

•  இச்சட்டத்தின்கீழ் திருமணம் செய்து கொள்ளும் இருவரில் ஒருவராவது இந்தியராக இருக்க வேண்டும். ஆணுக்கு 21 வயதும், பெண்ணுக்கு 18 வயதும் முடிந்திருக்க வேண்டும். பொருந்தாத உறவுத் திருமணங்கள் செல்லாது. அதாவது இந்துக்கள் உறவுமுறையில் திருமணம் செய்துகொண்டால் மாமன் முறை மட்டும் ஏற்றுக்கொள்ளப்படும்.

• திருமணத்துக்கு முன் குறைந்தது 30 நாள்களாவது மணமக்களில் ஒருவரேனும் இந்தியாவில் வசித்திருக்க வேண்டும்.

• திருமணத்துக்குத் தடை விதிக்க யாரேனும் விரும்பினால் திருமண அறிவிப்பு வெளியான 30 நாள்களுக்குள் கோரிக்கையை எழுத்துபூர்வமாகத் தெரிவிக்க வேண்டும். அதைப் பதிவு அலுவலர் திருமண நோட்டீஸ் புத்தகத்தில் எழுதிவைப்பார்.

• திருமணப் பதிவுக்காகப் பொய்யான ஆவணங்களையோ, தகவல்களையோ அறிவித்தது நிரூபிக்கப்பட்டால் குறைந்தது மூன்றாண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும். 

• இருதார மணம் புரிந்த குற்றத்துக்காக இந்திய தண்டனைச்சட்டம் பிரிவு 494 மற்றும் 495-ன் படி விதிக்கும் தண்டனை  என்ஆர்ஐ திருமணத்துக்கும் பொருந்தும்.

என்ஆர்ஐ திருமணம் - சிக்கல்களும் சட்டத்தின் துணையும்!

வெளிநாட்டு நீதிமன்றங்கள் வழங்கும் விவாகரத்து இந்தியாவில் ஏற்றுக்கொள்ளப் படுகிறதா?

என்ஆர்ஐ திருமணங்களில் பல வகைகள் உள்ளன. இந்தியாவில் சொந்தங்கள் சூழ திருமணம் செய்துகொண்ட பின்னர், அந்தத் தம்பதி வெளிநாட்டில் வசிப்பார்கள். இந்தியப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு, மணமகளை இந்தியாவில் விட்டுவிட்டு, கணவர் மட்டும் வெளிநாட்டுக்குச் சென்றுவிடு வார். வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் அந்த நாட்டிலேயே திருமணம் செய்து கொள்வார்கள். இவர்கள் அனைவரையும் இந்தியத் திருமணச் சட்டங்கள் கட்டுப்படுத்தும்.   

திருமணத்தைப் பொறுத்தவரை அவரவர் மதம் சார்ந்த சட்ட விதிகள் அனைத்தும் சம்பந்தப்பட்ட தம்பதிக்குப் பொருந்தும். இந்துக்களுக்கு இந்து திருமணச் சட்டம், இஸ்லாமியர்களுக்கு இஸ்லாமிய விவாகரத்துச் சட்டம், கிறிஸ்தவர்களுக்கு இந்திய விவாகரத்துச் சட்டம், மதம் சாராமல் திருமணம் செய்தவர்களுக்குச் சிறப்புத் திருமணச் சட்டம் ஆகியவை உள்ளன. இருப்பினும், இந்தியாவில் வசிக்காத இந்தியர்களின் திருமணங்கள் மற்றும் அவர்களுக்கான விவாகரத்து நடைமுறைகள் கட்டமைக்கப்படாமலேயே உள்ளன. சட்டம் துணை நின்றாலும் அதிலிருக்கும் மெல்லிய துளை வழியாகத் தவறு செய்பவர்கள் சுலபமாக வெளியில் வந்துவிடுகின்றனர். மனைவியை இந்தியா வில் தனியே விட்டுவிட்டு வெளிநாட்டுக்குச் சென்ற சில மாதங்களில் பதிவுத் தபாலில் வெளிநாட்டு நீதிமன்றங்களில் பெற்ற விவாகரத்து தீர்ப்பை அனுப்பிவைக்கும் கணவர்கள் பலர் உண்டு.

வெளிநாட்டில் வசிக்கும் தம்பதிகளைப் பொறுத்தவரை, திருமணத்தை முறித்துக் கொள்ள விரும்பினால் அவர்கள் வசிக்கும் நாட்டில் உள்ள நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தொடர்ந்து விவாகரத்தைப் பெற்றுக்கொண்டு, கணவன், தன் மனைவியை இந்தியாவுக்கு அனுப்பி வைத்துவிடுகிறார். அல்லது  இந்தியாவில் வசிக்கும் மனைவியின் சம்மதமே வாங்காமல்,  வெளிநாட்டு நீதிமன்றத்தில் விவாகரத்து வாங்கிய தீர்ப்பைப் பதிவுத் தபாலில் மனைவிக்கு அனுப்பி வைக்கின்றனர். பாதிக்கப்பட்ட பெண்கள் வெளிநாட்டு நீதிமன்றங்களின் முடிவை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை. கணவன் அனுப்பிய விவாகரத்துத் தீர்ப்பை மனைவி ஏற்க விரும்பா விட்டால், அல்லது கணவன் தன்னை ஏமாற்றி வெளிநாட்டு நீதிமன்றத்தில் விவாகரத்து பெற்றுவிட்டான், அதைப் புறக்கணிக்க வேண்டும் என அந்த மனைவி விரும்பினால் இந்திய குடிமக்களுக்கு பொருந்தும் அனைத்து இந்தியச் சட்டங்களும் அந்த மனைவிக்குத் துணை நிற்கும். இச்சூழலில், வெளிநாட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு செல்லாததாகிடும். ‘இந்திய நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால் மட்டும் என்னவாகப் போகிறது? விரும்பாத ஒருவனுடன் சேர்ந்து வாழ்ந்துவிடவா முடியும்?’ என்ற எண்ணம் பெண்ணுக்கு ஏற்படலாம். சேர்ந்து வாழ்வதற்கு 1% வாய்ப்பிருக்கும் என்றாலும், அதை ஏன் நழுவவிட வேண்டும்? மேலும், திருமணத்துக் குச் செலவழித்த தொகையைத் திரும்பப் பெறவும், ஜீவனாம்சம் பெறவும் இந்த வழக்கு வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கும். 

வெளிநாட்டில் கணவனால் பாதிக்கப்படும் மனைவிக்குச் சட்ட நடவடிக்கைகள் உதவும்! 

 பாதிக்கப்பட்ட பெண்கள் இந்தியாவின்  வெளியுறவுத்துறை அமைச் சகத்தைத் தொடர்புகொள்ளலாம்; அங்குள்ள இந்தியத் தூதரகத்தை அணுகி புகாரைச் சமர்ப்பிக்கலாம். அவர்கள், உள்நாட்டுக் காவல்துறையின் உதவியைப் பெறவும் உதவுவார்கள். கணவனால் ஏமாற்றப்பட்டு, தனது பாஸ்போர்ட்டைப் பறிகொடுத்த பெண்களுக்கு, அவர்கள் இந்தியா திரும்புவதற்கான உதவிகளையும் செய்வார்கள்.

 இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் வழி காட்டுதலின்படி உருவாக்கப்பட்ட, டெல்லியில் உள்ள `நேஷனல் கமிஷன் ஃபார் விமன்' (NCW) அமைப்பு, கணவனால் ஏமாற்றப்பட்ட வெளிநாடு வாழ் பெண்களுக்கு உதவுகிறது. வெளிநாட்டுக் கணவனால் ஏமாற்றப்பட்டவர் கள், கணவனால் கைவிடப் பட்டவர்கள், கணவன் மற்றும் அவன் குடும்ப நபர்களால் கொடுமைக்கு உள்ளாக்கப் பட்டவர்கள் ஆகியோர் நேரிலோ, தொலைபேசி, மின் அஞ்சல் மூலமாகவோ இந்த அமைப்பிடம் புகார் அளிக்கலாம். NCW இணையதளத்தில், புகார் அளிப்பதற்கான நடைமுறைகள் விளக்கப்பட்டுள்ளன. புகார் மீதான நடவடிக்கைகள் பற்றியும் அதே இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். இதேபோல மாநில அளவில் ஸ்டேட் கமிஷன் ஃபார் விமன் அலுவலகம் செயல்படுகிறது.

வெளிநாட்டில் ஏமாற்றிய கணவனை இந்தியாவுக்கு வரவழைக்க முடியுமா?

மனைவியைக் கொடுமைப்படுத்தியோ, திருமண பந்தத்தை முடித்துக்கொண்டு ஏமாற்றிவிட்டோ, வெளிநாட்டில் மறைந்து வாழும் கணவனைப் பாதிக்கப்பட்ட பெண் இந்தியாவுக்கு வரவழைக்க நடவடிக்கை எடுக்க முடியும். இந்திய நீதிமன்றத்தில் மனைவி வழக்கு தொடர்ந்த பின்னர், விசாரணைக்கு ஆஜராகக் கணவனுக்கு சம்மன் அனுப்பப்படும். பாதிக்கப்பட்ட பெண் வெளிநாட்டில் வசிக்கும் நிலையில் இந்திய நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடரவும் வழியுள்ளது. சம்பந்தப்பட்ட தம்பதி இந்தியாவில் சேர்ந்து வசித்த இடத்துக்கு உள்பட்ட நீதிமன்றம் அல்லது அவர்கள் திருமணம் செய்துகொண்ட இடத்துக்கு உள்பட்ட நீதிமன்றங்களில் வழக்கு தொடர முடியும்.

இந்தியாவுக்கு நேரில் வரமுடியாத பெண்கள் இந்தியாவில் வழக்கு பதிவு செய்ய நினைத்தால் சிறப்பு அதிகாரப் பத்திரம் ஒன்றைத் தயாரித்து, பதிவுத் தபாலில் அனுப்பிவைக்க வேண்டும். அந்தப் பத்திரத்தைப் பெற்ற நபர், அவர் சார்பில் இந்திய நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யலாம். பாதிக்கப்பட்ட பெண் விசாரணையின்போது நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும்.

இரு தரப்பும் பரஸ்பரமாகப் பிரிய விரும்பும் நிலையில், வெளிநாட்டு நீதிமன்றங்கள் வழங்கும் விவாகரத்துக்கு யாரும் தடைவிதிப்பதில்லை. எதிர் காலத்தில் சிக்கல் எதுவும் வராமல் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், பரஸ்பர விவாகரத்தை இந்திய நீதிமன்றங்களிலும் பெற்றுக்கொள்ளலாம்.

தண்டனைகள்...

இந்தியாவில் வசிக்கும் இந்தியர் சட்டத்துக்குப் புறம்பான செயல்களில் ஈடுபட்டால் என்ன தண்டனை வழங்கப் படுமோ, அதே தண்டனை வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியருக்கும் பொருந்தும் என்று இந்திய தண்டனைச்சட்டம் 3, 4 பிரிவுகளில் கூறப்பட்டுள்ளது. வெளிநாட்டு வாழ் இந்தியரைத்  திருமணம் செய்து, கணவனால் ஏமாற்றப்பட்ட பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் அவர்களைப் பாதுகாக்க சட்டங்கள் கொண்டுவர வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது.

வெளிநாட்டில் வசிக்கும் இந்தியக் கணவர்கள் அவர்களின் திருமணம் முடிந்த 48 மணி நேரத்தில் அந்தத் திருமணத்தைப் பதிவு செய்திருக்க வேண்டும். பதிவு செய்யாதபட்சத்தில் அவர்களின் பாஸ்போர்ட் மற்றும் விசா முடக்கப்படும் என்று பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மேனகா காந்தி சமீபத்தில் அறிவித்துள்ளார். இதன் மூலம் இந்தியப் பெண்களைத் திருமணம் செய்து, இங்கேயே அவர்களைக் கைவிட்டுவிட்டுச் செல்லும் ஆண்களின் எண்ணிக்கை குறையும். வெளிநாட்டுவாழ் இந்தியரைத் திருமணம் செய்யும்போது ஆதார் அட்டை கட்டாயம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தியப் பெண்களை ஏமாற்றிவிட்டுச் செல்லும் கணவர்களைக் கண்டுபிடிக்க இது உதவியாக இருக்கும். 

இரண்டு வழிகள்!

இந்தியாவில், தேடப்படும் குற்றவாளிகள் அல்லது காவல்துறையிடமிருந்து தலைமறைவாக உள்ளவர்கள் நாடு கடந்து தப்பிச் செல்வதைத் தடுக்கும் வகையில் விமான நிலையத்தில் அவர்களைப் பிடிக்க ‘லுக் அவுட் சர்க்குலர்’ என்ற கடிதம் விமானத்துறை அலுவலர்களுக்கு அனுப்பிவைக்கப்படும். இம்மிகிரேஷன் சமயத்தில் லுக் அவுட் ஆள்கள் சிக்கும்போது அவர்களை விமானத்தில் ஏற்றாமல் காவல் நிலையத்தில் ஒப்படைப்பார்கள். இன்டர்போல் என்னும் சர்வதேச காவல்துறையினரும் குற்றத்தின் தன்மைக்கேற்ப எட்டு வண்ணங்களில் நோட்டீஸ் விநியோகிப்பார்கள். அதில் ஒன்று, ‘ரெட் கார்னர் நோட்டீஸ்’. மனைவியை ஏமாற்றிவிட்டு மறைந்து வாழும் என்ஆர்ஐ கணவனை இந்தியாவுக்கு அழைத்து வர, மேற்சொன்ன இந்த இரண்டு நடைமுறைகளும் பின்பற்றப்படுகின்றன.

என்ஆர்ஐ கணவர்களால் பாதிக்கப் பட்ட பெண்களின் எண்ணிக்கையில் பஞ்சாப், ஆந்திரா போன்ற மாநிலங்கள் முன்னுரிமை வகிப்பதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. பாதிக்கப்பட்ட பெண்களை மீட்டெடுக்க இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இன்டகிரேடட் நோடல் கமிட்டி, பாதிக்கப்பட்ட பெண்களிடமிருந்து புகார்களைப் பெறச் செயல்படுகிறது. இதற்கு வலுசேர்க்க, என்ஆர்ஐ குற்றவாளி களைக் கட்டுப்படுத்தும் சட்டங்களைக்  கொண்டுவர வேண்டும்; இருக்கும் சட்டத்தை வலுப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். புதிய சட்டங்களைக் கொண்டு வரும் முயற்சிகள் நடந்து வருகின்றன.

ஓவியம் : கோ.ராமமூர்த்தி