Published:Updated:

`போதிய ஆதாரங்கள் இல்லை’ - சொராபுதீன் என்கவுன்டர் வழக்கிலிருந்து 22 பேர் விடுதலை

`போதிய ஆதாரங்கள் இல்லை’ - சொராபுதீன் என்கவுன்டர் வழக்கிலிருந்து 22 பேர் விடுதலை
`போதிய ஆதாரங்கள் இல்லை’ - சொராபுதீன் என்கவுன்டர் வழக்கிலிருந்து 22 பேர் விடுதலை

2005-ம் ஆண்டு சொராபுதீன் ஷேக் என்பவர் போலி என்கவுன்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இவர் பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு உள்ளவர் என்றும் முக்கிய அரசியல் தலைவர்களைக் கொலை செய்ய திட்டமிட்டார் என்றும் குஜராத் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதேபோல், இந்த வழக்கின் சாட்சியான துளசிராம் பிரஜாபதி என்பவரும், கடந்த 2006-ம் ஆண்டு டிசம்பர் மாதம் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். துளசிராம் பிரஜாபதி போலீஸ் காவலிலிருந்து தப்பி ஓட முயற்சி செய்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்த இரண்டு வழக்குகளிலும் அப்போது குஜராத் உள்துறை அமைச்சராக இருந்த அமித் ஷாவுக்கு தொடர்பு உள்ளது என சி.பி.ஐ தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து அவர் 2010-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து அமித் ஷா தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். மூன்று மாதங்களுக்குப் பிறகு ஜாமீனில் அமித் ஷா வெளியே வந்தார்.

இதையடுத்து 2012-ம் ஆண்டு இந்த வழக்கு மகாராஷ்ட்ரா மாநிலத்துக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்திய சி.பி.ஐ 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தது. அதில், என்கவுன்டர் நடந்தபோது உள்துறை அமைச்சராக இருந்த அமித் ஷா மற்றும் காவல்துறை அதிகாரிகள் உட்பட 38 பேர் மீது குற்றச்சாட்டப்பட்டிருந்தது.

மேலும், அமித்ஷா மீது கிரிமினல் சதி, சாட்சியங்களை அழித்தல் மற்றும் ஆயுதச் சட்டத்தின் கீழ் குற்றம் புரிதல் என்ற பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கிலிருந்து தம்மை விடுவிக்க வேண்டும் என்ற அமித் ஷாவின் மனுவை ஏற்று, அமித் ஷா உள்ளிட்ட 16 பேரை வழக்கிலிருந்து விடுவித்து சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதேநேரம் மீதமுள்ள 22 பேர் தொடர்பான வழக்கு நடைபெற்றுவந்தது. இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. அப்போது, ``குற்றம்சாட்டப்பட்ட 22 பேருக்கு எதிராக வலுவான ஆதாரங்களைச் சமர்ப்பிக்க சி.பி.ஐ அதிகாரிகள் தவறிவிட்டனர். இதனால் இவர்கள் அனைவரும் விடுதலைச் செய்யப்படுகிறார்கள்" எனக்  கூறி அனைவரையும் விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.