சினிமா
Published:Updated:

அரசியல் சட்டத்தின் ஆன்மா!

அரசியல் சட்டத்தின் ஆன்மா!
பிரீமியம் ஸ்டோரி
News
அரசியல் சட்டத்தின் ஆன்மா!

அரசியல் சட்டத்தின் ஆன்மா!

மிழக ஆளுநரைப் பணி செய்யவிடாமல் தடுத்ததாக இபிகோ 124 பிரிவின்கீழ் ‘நக்கீரன்’ ஆசிரியர் கோபால் கைது செய்யப்பட்டதும் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டதும் பல முக்கியமான விஷயங்களை உணர்த்துகின்றன.

அரசியல் சட்டத்தின் ஆன்மா! சட்டத்தின் முன் அனைவரும் சமம்தான். இதில் ஊடகங்களும் விதிவிலக்கல்ல. ஆனால், ஓர் ஊடகத்தில் வெளியாகும் செய்தி தவறானது என்று ஒருவர் கருதினால், அதற்கு மறுப்பு தெரிவிக்கலாம். அல்லது அந்தச் செய்தி பொதுமக்கள் மத்தியில் தன் நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பதாகக் கருதினால் அவதூறு வழக்கும் தொடுக்கலாம்.

ஆனால் ‘நக்கீரன்’ இதழில் வெளியான கட்டுரை, ஆளுநரைப் பணி செய்யவிடாமல் தடுத்ததாகப் புகார் கொடுக்கப்பட்டு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதிலும்  ‘பணி செய்யவிடாமல் நேரடியாக அச்சுறுத்துவது, உடல்ரீதியான தாக்குதல்களைத் தொடுப்பது’ ஆகிய குற்றங்களுக்கான இபிகோ 124 பிரிவை, பத்திரிகைக் கட்டுரையொன்றுக்கு எதிராகப் பயன்படுத்திக் கைதுசெய்வது கடும் கண்டனத்துக்குரியது. இந்தியாவில் இதற்குமுன் நடைபெறாத ஓர் அவலம்; தவறான முன்னுதாரணம் இது.

தமிழகத்தின் முதல் குடிமகனாகிய ஆளுநர்தான் சட்டத்தின் ஆட்சியை உறுதிசெய்யும் பொறுப்பு வாய்ந்தவர். ஆனால் அவரே பொருந்தாத சட்டப்பிரிவின்கீழ் நடவடிக்கை எடுக்கும்படி புகார் அளித்தது அதிர்ச்சியளிக்கிறது. புகார் அளிக்கப்பட்ட சட்டப்பிரிவு  பொருந்துமா, பொருந்தாதா என்பதைக்கூட கவனத்தில் எடுக்காமல் காவல்துறையும் ‘நக்கீரன்’ கோபாலைக் கைது செய்தது, அதிர்ச்சியை அதிகரிக்கிறது.

இத்தகைய அவலத்திலும் நம்பிக்கை வெளிச்சத்தைப் பாய்ச்சியது நீதிமன்றத் தீர்ப்புதான். ‘124 பிரிவு இந்த வழக்குக்குப் பொருந்தாது’ என்று குறிப்பிட்ட நீதிபதி கோபிநாத், ‘நக்கீரன்’ கோபாலைச் சிறையில் அடைக்க முடியாது என்றும் உத்தரவிட்டார்்.  நீதிமன்றம் என்பது நீதியை நிலைநாட்டும் சுயேச்சையான அமைப்பு என்பதை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறது இந்தத் தீர்ப்பு. ஆளுநரின் புகாரின்பேரில் காவல்துறையால் நிகழ்ந்த பிழையைத் தன் நேர்த்தியான தீர்ப்பால் சரிசெய்து சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டிய நீதிபதி பாராட்டுக்குரியவர்.

‘சட்டத்தின் முன் அனைவரும் சமம்’ என்பதுதான் நம் அரசியல் சட்டத்தின் ஆன்மா. அந்த ஆன்மா மீட்டெடுக்கப்பட்டுள்ளதும் ஊடகச்சுதந்திரம் பாதுகாக்கப்பட்டதும் நம் ஜனநாயகத்துக்குக் கிடைத்த வெற்றி.