எல்லை தாண்டி மீன் பிடித்ததாக, கடந்த ஆகஸ்ட் மாதம் தூத்துக்குடியைச் சேர்ந்த எட்டு மீனவர்களை இலங்கைக் கடற்படை கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளது. இவர்களுக்கு தலா 60 லட்சம் ரூபாய் அபராதத்துடன் மூன்று மாதங்கள் சிறை தண்டனையும் விதித்துள்ளது இலங்கை நீதிமன்றம். இது ஒட்டுமொத்த தமிழக மீனவர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை கடல் பரப்பில் அத்துமீறி மீன்பிடிப்பில் ஈடுபடும் வெளிநாட்டுக் கப்பல்கள், படகுகளுக்கு ரூ.60 லட்சம் முதல் ரூ.17.5 கோடி வரை (இலங்கை மதிப்பில்) அபராதம் விதிக்கும் சட்டத்தை 2018 ஜனவரி 24-ம் தேதி நிறைவேற்றியது இலங்கை அரசு. இந்தச் சட்டத்துக்கு தமிழக மீனவர்களும் அனைத்துக் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தாலும் மத்திய அரசு மௌனம் காத்தது. கடந்த ஆகஸ்ட் 18-ம் தேதி தூத்துக்குடியைச் சேர்ந்த அந்தோணி, ரூபின்சன், வில்பிரட், விஜய், ரமேஷ், ஆரோக்கியம், கோரத்தமுனியன், இசக்கிமுத்து ஆகிய எட்டு மீனவர்களை ஆழ்கடல் பகுதியில் கைதுசெய்து சிறையில் அடைத்தது இலங்கைக் கடற்படை. அவர்களுக்கு புதிய சட்டத்தின்கீழ் தண்டனைகளை விதித்து தீர்ப்பளித்துள்ளது கல்பிட்டி நீதிமன்றம்.
இதுகுறித்து தூத்துக்குடி நாட்டுப்படகு, ஃபைபர் படகு மற்றும் கட்டுமரச் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ராஜி, “அன்று நம் மீனவர்கள் சாதாரண ஃபைபர் படகில், தூண்டில் கட்டிதான் மீன் பிடித்துள்ளனர். ஆனாலும், வேண்டுமென்றே அவர்களைச் சிறையில் அடைத்து, இப்போது 60 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். இந்திய – இலங்கை கடல் எல்லையில் இலங்கைக் கடற்படை 24 மணி நேரமும் சுற்றி வருகிறது. ஆனால், இந்தியக் கடற்படை அரிதாகவே ரோந்து வருகிறது. இருநாட்டுக் கடற்படையினரும் அவரவர் எல்லையில் கண்காணித்து மீனவர்களை எச்சரித்தால் பிரச்னைகளே வராது” என்றார். கைது செய்யப்பட்ட மீனவர்களில் ஒருவரான ரமேஷின் அம்மா சகாயராணி, “என் மகன் ஆறு நாள் தங்குக்கடல் மீன் பிடிக்கப் போனா, ரெண்டாயிரம் ரூபாய் கொண்டுவருவான். அதை வச்சுதான் வீட்டுப்பாட்டைக் கழிக்கிறோம். அவனுக்கு மூணு பிள்ளைகள். இப்ப வருமானம் இல்லாததால் பிள்ளைகளும் பள்ளிக்கூடம் போகாம மீன் வண்டி வேலைக்குப் போகுதுங்க. மழைக்கு ஒழுகுற கூரையையே மாத்த முடியாத எங்களுக்கு 60 லட்சம் அபராதம் அடுக்குமா சாமி?” என்று கேட்கிறார் கண்ணீருடன்.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், “இலங்கை அரசு தொடர்ந்து மனித உரிமை மீறலில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது. கூலிக்காக மீன் பிடிக்கச் செல்லும் மீனவனுக்கு ரூ.60 லட்சம் அபராதம் ஏற்றுக்கொள்ள முடியாதது. பிரதமருக்கும், வெளியுறவுத்துறைக்கும் கடிதம் அனுப்பியுள்ளோம். விரைவில் அவர்கள் மீட்கப்படுவார்கள். இலங்கை அரசின் புதிய கடல் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளவும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்துவருகிறோம்” என்றார்.
மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, “கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் விரைவில் மீட்கப்படுவார்கள். அவர்களின் குடும்பத்தினருக்கு உதவிசெய்ய மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது” என்றார்.
- இ.கார்த்திகேயன், படங்கள்: எல்.ராஜேந்திரன்