
பொறியாளர் வீரப்பன் விளாசல்
காவிரி மேலாண்மை ஆணையத்துக்காகப் போராடினோம். கிடைத்தது. ஆனாலும்,ஆணையத்தின் சில அதிகாரங்கள் சந்தேகத்துக்குள்ளாக்கப்பட்டன. சந்தேகப்பட்டதுபோலவே, அந்த ஆணையத்தை மத்திய அரசு மதிக்கவில்லை. இதோ, மேக்கேதாட்டூவில் கர்நாடக அரசு அணைக் கட்டுவதற்கான முதல்கட்ட வரைவுத்திட்ட அறிக்கையைத் தயாரிக்க அனுமதி அளித்து, புதிய பிரச்னையைக் கிளப்பியிருக்கிறது மத்திய அரசு.

கர்நாடக மாநிலத்தின் பில்லிகுண்டுலு அருகே மேக்கேதாட்டூ என்ற இடத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே புதிதாக அணைக் கட்டுவது என்பது அந்த மாநில அரசின் திட்டம். இதற்கு, தமிழகம் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. இந்த நிலையில், ரூ.5,912 கோடி செலவில் புதிய அணையைக் கட்டுவதற்கான சாத்தியக்கூறு அறிக்கையை மத்திய நீர்வள ஆணையத்திடம் சில மாதங்களுக்கு முன்பே தாக்கல் செய்தது கர்நாடக அரசு. அங்கே அணையைக் கட்டி, குடிநீர் பயன்பாட்டுக்கு தண்ணீரைச் சேமிப்பதுடன், 400 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யவுள்ளதாகவும் திட்ட அறிக்கையில் கர்நாடகம் குறிப்பிட்டுள்ளது. இதற்கு அனுமதி தரக்கூடாது என்று தமிழகத் தரப்பிலிருந்து எதிர்ப்புக் காட்டப்பட்டுவந்த நிலையில், மத்திய அரசு முதல்கட்ட வரைவுத்திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான அனுமதியை வழங்கியிருக்கிறது.
“காவிரியில் அணைக் கட்டுவது, நீர் பங்கீடு என எதுவானாலும், காவிரி மேலாண்மை ஆணையம் மூலமாகத்தான் செய்ய வேண்டும். ஆனால், அதை அறவே புறக்கணித்துவிட்டு தன்னிச்சையாக மத்திய அரசு இப்படி முடிவெடுத்திருப்பது, அரசியல் சட்டத்துக்கே விரோதமானது’’ என்று கடும் விமர்சன அம்புகள் மத்திய அரசை நோக்கிப் பாய ஆரம்பித்துள்ளன. இதுகுறித்து தமிழகப் பொதுப்பணித் துறை மூத்த பொறியாளர்கள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் அ.வீரப்பனிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.
“மேக்கேதாட்டூ அணை விவகாரத்தில், மத்திய அரசு இரட்டைவேடம் போடுகிறதா?”
“காவிரி மேலாண்மை ஆணையத்தைக் காலில் போட்டு மிதித்திருக்கிறது மத்திய அரசு. மேக்கேதாட்டூ முதல்கட்ட வரைவு அறிக்கைக்கு அனுமதி கொடுத்திருப்பது மத்திய நீர்வளத் துறை ஆணையம். தொழில்நுட்பம் தொடர்பாக தடையில்லா சான்றிதழ் வழங்குவதுதான் அந்த ஆணையத்தின் பணி. மத்திய நீர்வளத்துறைதான் அனுமதி வழங்க வேண்டும். ஆக, தற்போது வரைவுத்திட்ட அறிக்கையைத் தயாரிக்க, கர்நாடக அரசுக்கு ஆணையம் அனுமதி வழங்கியிருப்பது கேலிக்கூத்தானது. மத்திய அரசு தானாகச் செய்யாத மாதிரியும், ஆணையம்தான் செய்தது மாதிரியும் நாடகம் நடத்துகிறார்கள். ஒருவேளை எதிர்ப்பு பலமானால், ஆணையத்தின் மீது பழியை போட்டு மத்திய அரசு தப்பிக்கப் பார்க்கும்.”
“குடிநீருக்காக மேக்கேதாட்டூவில் அணையைக் கட்டுகிறோம் என்கிறதே கர்நாடக அரசு?”
“அது, வடிகட்டியப் பொய். உச்ச நீதிமன்றம் பிறப்பித்த ஓர் உத்தரவில், தமிழகத்துக்குத் தரப்படும் காவிரி நீரின் அளவில் 14.75 டி.எம்.சி தண்ணீரை, பெங்களூருவின் குடிநீர்த் தேவைக்காக கொடுக்கச் சொன்னது. மொத்தமுள்ள 192 டி.எம்.சி தண்ணீரில் குடிநீருக்கான 14.75 டி.எம்.சி-யைக் கழித்துக்கொண்டுதான் தருகிறது. இதன் பிறகும், குடிநீருக்காக மேக்கேதாட்டூவில் அணைக் கட்டுகிறோம் என்று கர்நாடகா அரசு சொல்வது சுத்த ஏமாற்றுவேலை. உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, ஒப்பந்தங்கள் என எதையுமே கர்நாடக அரசு மதிப்பதில்லை. எங்கள் அணை நிரம்பினால்தான் உங்களுக்கு தண்ணீர்; அதைத் தாண்டி சொட்டுத் தண்ணீர்கூட தரமாட்டோம் என்கிற முடிவில் உறுதியாக இருக்கிறார்கள். மைசூர், மாண்டியாவுக்கு அருகில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து குடிநீருக்கு எடுத்துக்கொள்ள வேண்டியதுதானே?”

“இனி என்ன செய்யலாம்?”
‘‘உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி தமிழகம், புதுச்சேரியை ஆலோசிக்காமல் காவிரியில் எந்த ஒரு அணையையும் கட்டக்கூடாது. எனவே, தமிழக அரசு கண்துடைப்புக்காக அல்லாமல், தீவிரமான சட்டப் போராட்டத்தில் இறங்க வேண்டும். அனைத்துக் கட்சியினரிடம் ஆலோசனை நடத்தி, அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக மக்கள் ஒரே அணியில் திரண்டு, எதிர்ப்புக் காட்ட வேண்டும்.’’
“தமிழகம் சார்பில் ராசி மணல் என்கிற இடத்தில் புதிய அணையைக் கட்டுவது இதற்குத் தீர்வாக அமையும் என்று சிலர் சொல்வது பற்றி?”
“அபத்தம். மேக்கேதாட்டூ கர்நாடக - தமிழக எல்லையில் உள்ளது. ராசிமணல் - தமிழக எல்லைக்குள் வருகிறது. அங்கே தண்ணீர் விட்டால்தானே ராசிமணலுக்கே தண்ணீர் வரும். அங்கேயே தடுக்கப்பட்டால், இங்கே அணையைக் கட்டி என்ன பயன்?’’
- ஆர்.பி