Published:Updated:

`ஆலையைமூட பேரவையில் சிறப்புச் சட்டம் இயற்றுங்கள்!' - ஸ்டெர்லைட் எதிர்ப்புக்குழு

`ஆலையைமூட பேரவையில் சிறப்புச் சட்டம் இயற்றுங்கள்!' - ஸ்டெர்லைட் எதிர்ப்புக்குழு
`ஆலையைமூட பேரவையில் சிறப்புச் சட்டம் இயற்றுங்கள்!' - ஸ்டெர்லைட் எதிர்ப்புக்குழு

தமிழக மக்கள் மீது உண்மையிலேயே தமிழக அரசுக்கு அக்கறை இருந்தால் தற்போது நடைபெற்று வரும் சட்டமன்றத்தில் ஆலையை நிரந்தரமாக மூட சிறப்புச் சட்டம் இயற்றிட வேண்டும் என ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை மக்களின் தொடர் போராட்டத்துக்குப் பிறகு ஆலை நிரந்தரமாக மூடப்படுவதாக அரசாணை வெளியிடப்பட்டு கடந்த மே 28-ம் தேதி மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டது. அரசின் அரசாணையை எதிர்த்து வேதாந்தா குழுமம் பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக ஆய்வு செய்திட மேகாலாய மாநில ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான குழுவை நியமித்து உத்தரவிட்டது நீதிமன்றம். ஆய்வு மற்றும் மக்களின் கருத்து கேட்புக் கூட்டத்துக்குப் பிறகு தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூடியது தவறு எனக் குறிப்பிடப்பட்டு ஆய்வறிக்கையை சமர்ப்பித்தது ஆய்வுக்குழு.

ஆய்வுக்குழுவின் ஆய்வறிக்கையின் அடிப்படையில் சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டு மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என தீர்ப்பளித்தது பசுமைத்தீர்ப்பாயம். தீர்ப்பாயத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. தீர்ப்பாயத்தின் இதே உத்தரவினை எதிர்த்து ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பாத்திமா பாபு தரப்பில் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. வரும் ஜனவரி 21-ம் தேதி ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக தற்போதைய நிலையே தொடர வேண்டும் என மதுரைக் கிளை உத்தரவிட்டிருந்தது.

மதுரைக் கிளையின் இந்த உத்தரவை எதிர்த்து வேதாந்தா நிறுவனத்தின் சார்பாக கடந்த மாதம் 24-ம் தேதி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டது. விசாரணையில், ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் மதுரை உயர்நீதிமன்றக் கிளையின் உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதே சமயம், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்துள்ளது. இரு தரப்பினரும் பதில் மனுத் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவின்படி பார்த்தால், ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்கலாம் என்றே தெரிகிறது என சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான தமிழர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தியிடம் பேசினோம். ``ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள இடைக்கால தீர்ப்பானது தூத்துக்குடி மக்களாகிய எங்களுக்கு மிகுந்த வேதனையையும், வலியையும் தருவதாக அமைந்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலை இதற்கு முன்பு வரை பலமுறை மூடப்பட்டு பின்னர் திறக்கப்பட்டுள்ளது. அரசு, மக்களை எப்படி எல்லாம் திசை திருப்ப முயலும் என்பதற்கான சாட்சியமே கடந்த 2018-ல் ஸ்டெர்லைட்டை மூடுவதற்கான சட்ட வலிமை இல்லாத அறிவிப்பானைதான்.

தமிழக அரசிடம் மக்கள் தொடர்ச்சியாக கோரிக்கை வைத்தும் அரசு ஆலைக்கு சாதகமாக சட்டம் இயற்றாமல் மக்களை ஏமாற்றியுள்ளது என்பதை உச்ச நீதிமன்ற இடைக்கால தீர்ப்பு வெளிக்காட்டுவதாகவே உள்ளது. தமிழ்நாட்டில் தாமிர உருக்காலை இது ஒன்றுதான். ஆகவே தமிழகத்தில் மிக ஆபத்தான அடர் சிகப்பு வரையறையில் உள்ள தாமிர உருக்காலை அமையக் கூடாது என்பதை ஒரு சட்டமாக நிறைவேற்றுவதில் ஏன் தயக்கம். ஒரு மாநிலத்தில் எவ்விதமான தொழிற்சாலைகள் இருக்கலாம் என்பதை அந்தந்த மாநில அரசுகள்தான் முடிவு செய்ய முடியும் என்ற நிலையில், தமிழக அரசு ஆலைக்கு ஆதரவாக மக்களுக்கு, உயிர்ச் சூழலுக்கு எதிராக செயல்படுவதாகவே உள்ளது.

ஸ்டெர்லைட்டுக்கு எதிராக அமைதி வழி போராட்டத்தில் பல லட்சக்கணக்கான மக்கள் ஈடுபட்டோம், அரசு பயங்கரவாதத்தால் 15 உயிர்களை இழந்துள்ளோம். பல நூறு பேர் காயத்துக்கு உள்ளானோம். பல நூறு பேர் பொய் வழக்குகளுக்கு உள்ளானோம். இந்த நிலையில், இந்தத் தீர்ப்பு ஜனநாயகத்தின் மீதான மக்களின் நம்பிக்கைக்கு எதிராகவே அமைந்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலை தூத்துக்குடியிலிருந்து அகற்றப்படும் வரை மக்களின் அமைதிவழி போராட்டங்கள் தொடரும். தமிழக மக்கள் மீது உண்மையிலேயே தமிழக அரசுக்கு அக்கறை இருந்தால் தற்போது நடைபெற்று வரும் சட்டமன்றத்தில்  ஆலையை நிரந்தரமாக மூட சிறப்புச்சட்டம் இயற்றிட வேண்டும்” என்றார். 

இந்த நிலையில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, ``ஆலையை திறக்க வேண்டும் என ஒரு உத்தரவை பிறப்பிக்க முடியாது. மதுரை உயர்நீதிமன்றம், ஆலையைத் திறக்கக்கூடாது என்ற தீர்ப்புக்குத் தடை விதிக்கின்றோம். பசுமைத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பு குறித்த வழக்கில் விசாரணை நடக்கும். ஸ்டெர்லைட் தரப்பு தங்கள் வாதங்களை முன்வைக்கலாம். அரசுத் தரப்பும், மற்றத் தரப்பினரும் முன்வைக்கலாம் என்று கூறி, இந்த வழக்கு தொடர்பான அனைத்துத் தரப்பினருக்கும் அனுப்ப உத்தரவிட்டனர். ஆனால்,  ஆலையைத் திறக்க வேண்டும் என எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை” என குறிப்பிட்டுள்ளார்.