நடப்பு
Published:Updated:

பிட்காயின் பித்தலாட்டம் - 43

பிட்காயின் பித்தலாட்டம் - 43
பிரீமியம் ஸ்டோரி
News
பிட்காயின் பித்தலாட்டம் - 43

ஓவியங்கள்: ராஜன்

மும்பை

எங்கே, எப்படிச் செல்வது என்று தெரியாத ஒரு முட்டுச்சந்தில் நின்றுகொண்டிருக்கிறோம் டான். இப்போது என்ன செய்வது?”

“நாம் வேறொரு அணுகுமுறையை முயற்சி செய்வோம். ஓரிரு நாள்கள் பொறுத்து பிட்காயின் பிரைவேட் கீ-யில் காணாமல் போயிருக்கும் ஆல்ஃபா நியூமெரிக்கிற்காக உதவி கேட்டிருக்கும் ஆல்டாயிட்ஸுக்குப் பதில் அனுப்புங்கள். உங்களால் அதைக் கண்டுபிடிக்க முடியுமென்று சொல்லுங்கள். முட்டாள்கள்தான் மீதமான ஆல்ஃபா நியூமெரிக் எண்களைக் கொடுத்து காணாமல் போயிருக்கும் எண்களைக் கண்டுபிடித்துக் கொடு எனக் கேட்பார்கள். எனவே, இதை எப்படிச் செய்வது எனத் தெரிந்துகொள்ள அவன் இதில் ஈடுபடுவான். இந்த முயற்சியில் அவனைப் பிடிக்க முடியுமா என பார்ப்போம்.”

பிட்காயின் பித்தலாட்டம் - 43

“அவன் அவ்வளவு சீக்கிரம் பொறியில் மாட்டுவானா என்பது சந்தேகம்தான் டான். அவன் மிகவும் ஸ்மார்ட்.”

“அவன் கீ-யைப் பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் செய்வான்.”

“பார்க்கலாம். லேப்டாப் வெடிப்பு, மால்வேர் (malware) பிரச்னையில் என்ன நடக்கிறது?’’ 

“உக்ரைன் சர்வரின் மிரர் இமேஜ் நமக்குக் கிடைத்திருக்கிறது. அதுதான் மால்வேரை உலகெங்கும் இருக்கும் டெஸ்க்டாப், லேப்டாப், செல்போன் என அனைத்திலும் செலுத்திக் கொண்டிருந்தது. உக்ரைனும், அமெரிக்காவும் கையெழுத்திட்ட மியூச்சுவல் லீகல் அசிஸ்டென்ஸ் ட்ரீட்டியை (Mutual Legal Assistance Treaty) எஃப்.பி.ஐ உயிர்ப்பித்தது. அதன் படி, உக்ரைன் தகவலைப் பகிர்ந்துகொண்டது.”

“யாராவது ஒருவர் இப்படிப்பட்ட மால்வேரைப் பரவச்செய்யவேண்டுமெனில், இந்தமாதிரி உடன்படிக்கை செய்துகொள்ளாத இடத்தில் இருக்கும் சர்வர் மூலமாகத்தானே செய்ய நினைப்பார்கள் இல்லையா?’’
 
“இது தற்செயலாக நடந்தது ஏட்ரியன். ஒரு வாரத்துக்கு முன்புதான் நாமும் உக்ரைனும் எம்.எல்.எ.டி-ல் (MLAT) கையெழுத்திட்டிருக்கிறோம். அதற்குப்பின் அதை உபயோகித்து நடவடிக்கை எடுத்தது இதுதான் முதல்முறை. குற்றவாளிகளின் திட்டப்படி, உக்ரைன் ஒரு பாதுகாப்பான சொர்க்கமாக இருக்கும் என நினைத்திருப்பார்கள்.”

“சர்வரின் மிரர் இமேஜ் மூலம் என்ன தகவல் கிடைத்தது?”

“அது குறித்து மேலதிகமாகத் தெரிந்துகொள்ள முயற்சி செய்துவருகிறோம். நாளை மாலைக்குள் புதிய தகவல்கள் கிடைக்கக்கூடும். ஒரு குழு இது சம்பந்தமான வேலையில் ஈடுபட்டிருக்கிறது.”

அவர் இணைப்பைத் துண்டித்தபோது ஹோட்டலின் லேண்ட்லைன் ஒலித்தது.

“ஏட்ரியன்...  நான் டோனி. நான் ஒரு லிங்கினை உங்கள் போனுக்கு அனுப்புகிறேன், பாருங்கள்.”

ஏட்ரியன் திரையைத்தொட டோனியின் செய்தி திறந்துகொண்டது. அது டைம்ஸ் ஆஃப் இந்தியா இணையத்தளத்துக்கான லிங்க். 

பிட்காயின் பித்தலாட்டம் - 43

அந்த லிங்கைப் பார்த்த உடனேயே அவர், ‘‘அடப்பாவி, இவன் இங்கே என்ன செய்கிறான்?” என்று உணர்ச்சி மேலிடக் கத்தினார்.

“எஃப்.பி.ஐ இவனை உலகம் முழுவதும் தேடிக் கொண்டிருக்க, போலியான பெயரிலும், அடையாளத்திலும் ஸ்டான் பாண்டிச்சேரியில் என்ன செய்துகொண்டிருக்கிறான்?”

சங்கம்னர்/மும்பை

ராம் சர்வத்தே அப்போதுதான் மும்பை யிலிருந்து 150 கிமீ தூரத்தில் சங்கம்னர் எனும் இடத்திலிருக்கும் பண்ணையிலிருந்து திரும்பி யிருந்தான். அவனைப் பார்த்தவுடன் அவன் மனைவி அவன் குடிப்பதற்காகத் தண்ணீர் கொண்டுவந்தார். ராம் அதை வாங்கித் தரையில் கொட்டினான். அவனுடைய முகத்தின் நிறம் மாறியிருந்தது. `சூடான தண்ணீரைத் தந்ததால் கொட்டினாரோ’ என நினைத்தாள். ஆனால், அவனுடைய கண்கள் வேறொரு கதை சொன்னது. இறந்துபோனவரின் கண்கள் போலவும், காய்ந்துபோன மீன் போலவும் சுருங்கியிருந்தது. அவள் ராமின் கைகளைப் பார்த்தாள்.

“ஓ மை காட்!” எனக் கத்திக்கொண்டே, “என்ன நடந்தது...?” எனக் கேட்டாள். அவனுடைய கைகள் வீங்கியிருந்தன. முன்கையிலிருந்து ரத்தம் சொட்டியது; முழங்கை இணைப்புகள் விலகி யிருந்தன. அவனுடைய வலதுகாதிலிருந்து ரத்தம் வழிந்தது.

அவள் பித்துப்பிடித்தவள்போல புலம்பினாள்.

ராம் அவளை அமைதியாக இருக்கச் சொல்ல நினைத்தான்.  ஆனால், முடியவில்லை. கிராமத்து டாக்டரைப் பார்க்க, உடனே அவர் நாசிக் அரசு மருத்துவமனைக்கு அவனை அனுப்பி வைத்தார்.

மறுநாள் மாலை ராம் வீட்டுக்குத் திரும்பும் போது அவனுடைய காதுக்கு அருகில் 17 தையல் களும், எலும்புமுறிவு இருந்த வலதுகையில் பாண்டேஜும் போடப்பட்டிருந்தது.

இதற்கெல்லாம் காரணம், இவனது நிலத்தை அபகரிக்க நினைத்த உள்ளூர் அரசியல்வாதியோடு போட்ட சண்டையாகும்.

ஒரு வாரத்துக்குப் பின், அவனுடைய உடல் நிலை தேறியபின், தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, அவனைத் தாக்கிய உள்ளூர் தாதாவான கோவிந்த் பாய்க்கு எதிராக காவல்நிலையத்தில் புகார் கொடுக்கக் கிளம்பிச் சென்றான். அவன் தாக்கப்பட்டதைப் பார்த்த மூன்று பக்கத்து வீட்டுக்காரர்களும் அவனுடன் சென்று சாட்சி கையெழுத்துப் போட்டுவிட்டு வந்தனர்.

கோவிந்த் அந்தப் பகுதியில் நன்கு அறியப்பட்ட ரெளடி. அவனைக் கைது செய்ய அவர்கள் செல்வதற்கு முந்திய வாரமே மும்பை போலீஸ் அவனைக் கைது செய்திருந்தது. சிறிது நேரம் கழித்து, கோவிந்த் எங்கேயிருக்கிறான் என்பதைத் தெரிந்துகொள்ள உள்ளூர் காவல் நிலையத்தைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் மும்பை போலீஸுடன் தொடர்புகொண்டார்.

பேசிவிட்டு போனை வைத்தபோது அவர் அதிர்ச்சியில் உறைந்துபோனார். தன்னை சந்திக்குமாறு ராமுக்குச் சொல்லி அனுப்பினார். ராம், காவல் நிலையத்துக்குள் நுழைந்தபோது அவனை நோக்கிச் சென்று கன்னத்தில் பளாரென்று அறைந்தார். “பொய்யா சொல்கிறாய்!” எனக் கத்தினார். “சென்றவாரம் அதே நாளில் மும்பையில் விபத்தில் மாட்டிக் கொண்ட கோவிந்த் உன்னை எப்படித் தாக்கியிருப்பான்? சாலை விபத்தில் யாரையோ கொன்றுவிட்டதற்காக அவன் மும்பையில் ஜெயிலில் இருக்கி றான். விபத்து நடந்த நேரமும், உன்னைத் தாக்கியதாக எஃப்.ஐ.ஆர்-ல் குறிப்பிட்டிருக்கும் நேரமும் ஒன்றுதான்” என்று சொல்லிக்கொண்டே இன்னொரு முறை அடித்தார். என்ன நடக்கிறது என்று தெரியாமல் முழித்தான் ராம்.

இந்த விஷயம் முதலில் சங்கம்னரில் இருக்கும் உள்ளூர் ஊடகங்களில் ரிப்போர்ட் செய்யப்பட, பிறகு அது தேசிய ஊடகங்களைச் சென்றடைந்தது. விசாரணையின்போது, நிதி மந்திரிக்கு எதிராக சுவாமி கூறிய கருத்துகளுக்காக அவரை கோவிந்த் கொன்றிருக்கலாம் என்பது ஊடகங்களின் ஊகமாக இருந்தது. அன்றிரவு தொலைக்காட்சி விவாதங்களில் மாள்விகா மற்றும் சுவாமி கொலை களில் மந்திரிக்கு இருக்கும் பங்கு பற்றி விவாதிக்கப் பட்டது. மந்திரி இதுகுறித்து ஊடகங்களிடம் எதுவும் பேசாமல் அமைதி காத்தார்.

“பணத்தை நாட்டிற்கு வெளியே கொண்டு செல்ல மந்திரிக்கு உனது அம்மா உதவியிருப்பார் என சுவாமி அங்கிள் கண்டுபிடித்திருக்கக்கூடும். அது சம்பந்தமாக அம்மாவை அவர் சங்கடத்தில் ஆழ்த்தியிருக்கக்கூடும்” என்றான் வருண்.

பிட்காயின் பித்தலாட்டம் - 43

“யெஸ், அவர் இதுபற்றி உன் அப்பாவிடம் சொன்னதாக நீ என்னிடம் சொன்னாய்.”

“அவர் இதுபற்றி சிபிஐ-யிடம் கூறியிருப்பார் என நீ நினைக்கிறாயா? அதை மந்திரி எப்படியோ தெரிந்துகொண்டிருப்பார்?”

“முன்னாள் நிதி மந்திரி. அவர் ராஜினாமா செய்துவிட்டார்” என்று தான்யா கோபத்துடன் கூறினாள்.

“ஆல்ரைட், ஆல்ரைட், முன்னாள் மந்திரி”

“அவர் நரகத்தில் வறுத்தெடுக்கப்படுவார் என நம்புகிறேன்.”

“என்ன செய்யலாமென்று நான் சொல்கிறேன்.” வருண் அவளுடைய டேபிளுக்குச் சென்று லேப்டாப்பை எடுத்தான். “சுவாமி அங்கிள் அப்பாவிடமும், என்னிடமும் என்ன சொன்னாரோ, அதை அப்படியே சி.பி.ஐ-க்கு எழுதித் தெரியப்படுத்தலாம். சி.பி.ஐ-க்கு இது முன்கூட்டியே தெரிந்திருந்தால், க்ரேட். அப்படி இல்லையென்றால், இது அவர்களுக்கு உதவக் கூடும். அந்த மெயிலின் நகலை நாம் மீடியாவுக்கும் கொடுத்தால் எல்லோருக்கும் இதுபற்றி தெரியவரும்” என்றான்.

அவன் தான்யாவின் லேப்டாப்பைத் திறந்து, சி.பி.ஐ-க்குக் கடிதம் எழுத ஆயத்தமானான். அவனுக்குத் தெரிந்த எல்லாவற்றையும் அவன் அதில் எழுதியிருந்தான். தான்யா அவனை நோக்கிச் சென்று, “இது அம்மாவுக்குக் களங்கத்தை ஏற்படுத்தும் என நீ நினைக்கவில்லையா?” எனக் கேட்டாள்.

“ஏற்கெனவே அதெல்லாம் நடந்துவிட்டது, இதற்குமேல் இனி என்ன இருக்கிறது? ஒவ்வொரு வரும் ஒவ்வொன்று சொல்கிறார்கள், இந்தக் கடிதம் அதற்கான பதிலாக அமைந்து நடந்த தவறைச் சீர்செய்யும்” என்றான்.

தான்யா பதில் சொல்லாமல் யோசித்துக்  கொண்டிருந்தாள். ‘`நீ கண்டிப்பா அப்படி நம்புகிறாயா, வருண்” என்று கேட்டாள்.

“ஆமாம்’’

‘‘நீ என்ன சொல்கிறாயோ, அது எனக்கும் சரிதான்.” என்று சொல்லிவிட்டு குளிக்கச் சென்றாள். ஆனால், அவளது இந்த முயற்சியால் சமாதானமடைந்த மாதிரி தெரியவில்லை.

வருண் கடிதம் எழுதி முடித்து விட்டு, அவனுடைய இ-மெயிலை லாக்-இன் செய்ய நினைக்க, லேப்டாப் இன்டர்நெட்டுடன் கனெக்ட் ஆகவில்லை.

“தான்யா!” அவன் சத்தமாகக் கூப்பிட்டான். அவள் குளித்துக் கொண்டிருந்தாள். ‘`வை-ஃபை பாஸ்வேர்டு என்ன?”

“என் ட்ரெஸிங் டேபிள் ட்ராயரில் பென் ட்ரைவ் இருக்கிறது. அதை உபயோகித்து இன்னொரு லேப்டாப்புக்கு அந்த ஃபைலை அனுப்பு. அது தானாக வைஃபையுடன் கனெக்ட் ஆகிவிடும்.

வருண் ஃபைலை ட்ரான்ஸ்ஃபர் செய்து அதை கபீர்கானுக்கும் அனுப்பியது டன்,  கையெழுத்திட்ட நகலை நாளை அனுப்பி வைப்பதாக உறுதியளித்திருந்தான். கடிதம் அனுப்பும் அதே நேரத்தில் மீடியாவுடனும் அது பகிரப்படும் என்பதையும் குறிப்பிட்டிருந் தான். அவன் மெயிலை அனுப்பியபிறகு, தான்யா  குளித்துவிட்டு வருவதற்காகக் காத்திருந்தான்.

அதுவரை லேப்டாப்பில் ஏதாவது கேம் விளையாடலாம் என நினைத்து லவுஞ்ச் சேரில் உட்கார்ந்தான்.

அன்று மாலை ஏட்ரியனை டான் அழைத்தார்.

“ஏட்ரியன், உக்ரைன் சர்வர் குறித்த அனாலிசிஸ் வந்துவிட்டது’’ என்றவர், அதை விவரிக்க விவரிக்க, ஏட்ரியனின் கண்கள் விரிந்தன. டான் சொல்வதை அவரால் நம்பவே முடியவில்லை.

‘‘இப்போது இது வந்துவிட்டதால், நீங்கள் இன்னும் அங்கே தங்கியிருக்க வேண்டுமென்கிற அவசியமில்லை. உடனே கிளம்பி வாருங்கள். இன்னும் சில முக்கியமான பிரச்னைகளுக்குத் தீர்வு காண வேண்டும்” என்றார் டான்.

‘‘சரி, நாங்கள் உடனே கிளம்புகிறோம்’’ என்றபடி,  போனை வைத்தார். 

பிட்காயின் பித்தலாட்டம் - 43

அன்றிரவு ஷோம் அவர் களை விமான நிலையத்தில் வழியனுப்ப வந்திருந்தார். ‘‘ஏன் அவசரமாகக் கிளம்பிப் போகிறீர்கள்?’’ என்று கேட்டார். 

‘‘முக்கியமான வேலை. மீண்டும் வருகிறோம்’’  என்றார் ஏட்ரியன்.

‘`தாங்க்ஸ் ஷோம். நீங்கள் மிகவும் உதவியாக இருந்தீர்கள்...’’ என்றபடி ஷோமின் கைகளைக் குலுக்கிவிட்டு, செக்-இன் கவுண்டரை நோக்கி நடக்க ஆரம்பித்தார் ஏட்ரியன். டோனி அவரைத் தொடர்ந்து செல்லும்போதே திரும்பி ஷோமைப் பார்த்துக் கையசைக்க, எதிரே வந்தவரைப் பார்க்காமல் மோதிவிட்டார். அதற்காக உடனே மன்னிப்புக் கேட்டார். 

‘`பரவாயில்லை, சார்’’ என்று  சொல்லிக்கொண்டே நடந்து போனான் வருண். அவன் உக்ரைனுக்குப் போய்க் கொண்டிருந்தான்.

‘‘ஒருவழியாக டீலை முடித்துவிடு. எது முடியுமோ, அதைச்செய்’’ என்று அவனை விமான நிலையத்தில் வழியனுப்ப வந்த ஆதித்யா சில நிமிடங்களுக்கு முன்பாகச் சொல்லியிருந்தார்.

(பித்தலாட்டம் தொடரும்)

-  ரவி சுப்ரமணியன், (GOD IS A GAMER - Published by Penguin RandomHouse India Pvt Ltd)

தமிழில்: சித்தார்த்தன் சுந்தரம்